மீண்டும் பஞ்சாப் தனிநாடு கோரும் கும்பல்! ஹரியானாவில் ஆயுதங்களுடன் 4 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது
சண்டிகர்: பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் ஹரியானா மாநிலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சீக்கியர்கள் ஒரு தேசிய இனம்; சீக்கியர்களுக்கு தனி நாடு தேவை என்பதை வலியுறுத்தி உருவானதுதான் காலிஸ்தான் இயக்கம். 1980களில் பஞ்சாப் பற்றி எரிய காலிஸ்தான் தீவிரவாதிகளே காரணமாக இருந்தனர். இதனையடுத்து பிந்தரன் வாலே தலைமையிலான காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசுமேற்கொண்டது.

குறிப்பாக அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் நுழைந்து பிந்தரன் வாலே மற்றும் காலிஸ்தான் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. இது ஒட்டுமொத்த சீக்கியர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பழிவாங்கும் வகையில் சீக்கிய பாதுகாவலர்களால் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்திரா காந்தியின் படுகொலையின் போது பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கு இன்னமும் நடைபெறுகிறது.
இதன் பின்னர் இந்தியாவில் காலிஸ்தான் இயக்கம் காலாவதியாகிப் போனது. ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் குடியேறிய சீக்கியர்கள் காலிஸ்தான் இயக்கத்தை புதுப்பித்தனர்; நாடு கடந்த காலிஸ்தான் அரசாங்கத்தையும் கூட அறிவித்தனர். நாட்டையே உலுக்கிய விவசாயிகள் போராட்டத்தின் போதும் காலிஸ்தான் தீவிரவாதிகள் பின்னணியில் இருப்பதாக கூறப்பட்டது. பஞ்சாப் தேர்தலின் போதும் காலிஸ்தான் தீவிரவாதிகள் பேசு பொருளாக இருந்தனர்.
இந்நிலையில் ஹரியானாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் 4 பேர் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் 4 பேரும் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள், டிரோன்கள் மூலம் இந்தியாவில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை அனுப்பி வந்ததில் இந்த 4 பேருக்கும் முக்கிய பங்கு இருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.