பஞ்சாப் தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அமரீந்தர்சிங்- பாட்டியாலாவில் போட்டி!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் லோக் காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் இன்று வெளியிட்டார். பாட்டியாலா தொகுதியில் அமரீந்தர்சிங் போட்டியிட உள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு முதலில் பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பிப்ரவரி 20-ந் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!
பஞ்சாப் காங்கிரஸ் முகமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங். ஆனால் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நவ்ஜோத்சிங் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்கும் ஏழாம் பொருத்தமானது.

வெளியேறி தனிக்கட்சி
ஒருகட்டத்தில் அமரீந்தர்சிங் முதல்வர் பதவிக்கு நவ்ஜோத்சிங் சித்து வேட்டு வைத்தார். இதனால் கடும் அதிருப்தியுடன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர்சிங். பின்னர் காங்கிரஸில் இருந்து வெளியேறி பஞ்சாப் லோக் காங்கிரஸை தொடங்கினார். மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்தார்.

வேட்பாளர் பட்டியல்
இந்நிலையில் தமது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அமரீந்தர்சிங் இன்று வெளியிட்டார். மொத்தம் 22 வேட்பாளர்களை அமரீந்தர்சிங் இன்று அறிவித்தார். இதில் ஒரு பெண் வேட்பாளர் இடம்பெற்றுள்ளார். ஜாட் சீக்கியர்கள் 8 பேர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

பாட்டியாலா தொகுதியில் போட்டி
அமரீந்தர்சிங் தமது பாட்டியாலா தொகுதியிலேயே போட்டியிடுகிறார். பாட்டியாலா தொகுதி, அமரீந்தர்சிங் கோட்டையாகும். பாட்டியாலா தொகுதியை அமரீந்தர்சிங் கைப்பற்றுவார் என்றே கூறப்பட்டும் வருகிறது. இதனிடையே காங்கிரஸில் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, காங்கிரஸ் தலைவர் சித்து இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபைக்கே வாய்ப்புகள் அதிகம் என்கின்றன கருத்து கணிப்புகள். ஆளும் காங்கிரஸ் உட்கட்சி பூசல்களால் ஆட்சியை பறிகொடுக்கும் என்கின்றன அக்கணிப்புகள். இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்கக் கூடும் என்றும் கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டி உள்ளனர். மேலும் பஞ்சாப் மாநிலத்தில்தான் பிரதமர் மோடிக்கு மிக குறைவான செல்வாக்கு இருக்கிறது என்கின்றன கருத்து கணிப்புகள்.