காங்கிரஸ் VS ஆம் ஆத்மி VS பாஜக! பரபரக்கும் பஞ்சாப்பில் பிப்ரவரி 14ல் தேர்தல்.. வெளியானது அறிவிப்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார்... இதையடுத்து, பஞ்சாப் மாநில அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..!
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.. இதில், பஞ்சாப் மாநிலத்தில், ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.. 5 மாநிலங்களில், 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது..
பஞ்சாபிலும் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. அதுமட்டுமல்ல, இந்த 5 மாநில தேர்தலில் அரசியல் நோக்கர்களும், பொதுமக்களும் அதிகமாக எதிர்நோக்கி இருப்பது பஞ்சாப் மற்றும் உபி மாநில தேர்தலைத்தான்.
பொதுவாழ்க்கைல உயிருக்கு பயம் கூடாது, படேலின் வார்த்தைகளுடன் பஞ்சாப் முதல்வரின் ட்விஸ்ட் ட்விட்..!

காங்கிரஸ்
பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.. கடந்த சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 117 இடங்களில், 77 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது... பாஜக - சிரோண்மணி கூட்டணி, 15 தொகுதிகளை வென்றது... இந்தக் கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்ட பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது... சிரோமணி அகாலிதளம்-15 இடங்களியும், லோக்ன் இன்சாஃப் கட்சி-2 இடங்களையும் வென்றது... இதில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, 20 தொகுதிகளை வென்று 2 பெரிய கட்சியாக பஞ்சாப் மாநிலத்தில் உருவெடுத்ததை இந்த நாடே வியப்பாக பார்த்தது.

எதிர்பார்ப்பு
இந்த முறையும் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி மறுபடியும் ஆட்சியை தக்கவைக்குமா அல்லது அமரிந்தர்சிங், பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது... கடந்த ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த 3 வேளாண் மசோதாக்களால் பஞ்சாப், ஹரியானாவில் உள்ள விவசாயிகள் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர்.. இப்போது வரை மத்திய அரசு மீதான அவர்களின் கோபம் தணியவில்லை.

போராட்டம்
தலைநகர் டெல்லியில் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது.. இந்த மசோதாக்களை நீக்கக்கோரியும் இந்த மசோதாவில் உள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்த கோரியும் போராட்டம் நடந்து வருகிறது. எனவே, அளவுக்கு அதிகமாகவே அதிருப்தியை பாஜக சந்தித்து வரும் வேளையில், இந்த முறை தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

சீக்கியர்கள்
டெல்லியில் போராடி கொண்டிருக்கும் பஞ்சாப் விவசாயிகளில் சீக்கிய விவசாயிகள் பலர் உண்டு.. எனவே, இவர்களின் வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது.. அதனால்தான் இதற்காகவே, மாநிலத்தில் பாஜகவின் முக்கிய பதவிகளில் சீக்கியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர... பாஜகவை சேர்ந்த கால்சிங், கோஹ்லன், ஹர்விந்தர் சிங், ஜஸ்விந்தேர் சிங், மொகாலியில் சேர்ந்த நிர்மல் இட் பாட்டியாலாவை சேர்ந்த ஜெகன் மோகன் சிங் சைனி, கவிதா சாரோ, ஜீவன் மஹாஜன், சுக்பால் பார் உள்ளிட்ட பல சீக்கியர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அங்கு தரப்பட்டுள்ளதன் காரணமும் இதுதான்..

மசோதாக்கள்
பஞ்சாப் சீக்கியர்களை முன்னிலைப்படுத்தி விவசாய மசோதாக்களால் இழந்த பெயரை மீட்க பாஜக முயன்றாலும், அதற்கான ரிசல்ட் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்... அதேபோல தலித் வாக்குகளை பாஜக குறி வைத்து வருகிறது.. நடக்க போகும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால், தலித் ஒருவரை முதல்வராக ஆக்குவோம் என்று பாஜக ஏற்கனவே கூறியிருந்த நிலையில், மீண்டும் அதே விஷயத்தை அக்கட்சி தீவிரமாக்கி வருகிறது..

முதல்வர் வேட்பாளர்
ஆனால், இதற்கு நடுவிலேயே காங்கிரஸ் முந்திக் கொண்டுவிட்டது.. தலித் தலைவரையே பஞ்சாப் முதல்வராக அறிவித்தது.. பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 33% வரை தலித்துகள் உள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு நடைபெற்று சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள்ஏற்கனவே கருத்து சொன்னார்கள்.. இதை முறியடிக்க பாஜக அடுத்த பிளானில் இறங்கி வருகிறது.

அமித்ஷா
ஆனால், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அமரீந்தர் சிங் இருப்பாரா என்று தெரியவில்லை.. ஆனால் தன்னைதான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பலமுறை அமித்ஷாவையே சந்தித்து கோரிக்கை வைத்துவிட்டார் அம்ரீந்தர்.. அதேபோல, இந்த முறை கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மியும் பஞ்சாபில் என்ட்ரி தந்துள்ளது.. சண்டிகரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கணிசமான இடங்களை கைப்பற்றியது அதற்கு போதுமான பலத்தையும், நம்பிக்கையும் தந்ததே இதற்கு காரணம்.

சிக்கல்
இதில் காங்கிரசுக்கு ஒரு சிக்கல் உள்ளது.. முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்று சில மாதங்கள்தான் ஆகிறது என்பதால், அவரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கலாமா அல்லது சித்து தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளலாமா என்ற குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது.. அதேபோல, இதே வேளாண் சட்டங்களை காங்கிரஸ் கையில் எடுக்கும்.. அதை வைத்தே பிரச்சாரமும், அரசிலும் செய்யக்கூடும்.. அதே நேரத்தில், வேளாண் சட்டங்களை நாங்கள்தான் ரத்து செய்து விட்டோமே என்று பாஜகவும் சொல்லக்கூடும்..

கோபம்
அப்படியே சொன்னாலும் பாஜகவின் மீதான கோபம் விவசாயிகளுக்கு தீர்ந்துவிடுமா என்று தெரியவில்லை.. காரணம், 4 நாட்களுக்கு முன்புதான் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.. இதை பார்த்தால் விவசாயிகளின் கோபம் தீரவில்லை என்றே தெரிகிறது.. இப்போது பிப்ரவரி 14 என்று தேர்தல் தேதியும் குறிக்கப்பட்டு விட்டதால், பாஜக தன் மீதான அதிருப்தியை போக்கி கொள்ளுமா? அல்லது காங்கிரஸ் மேலெழுமா? அல்லது ஆம் ஆத்மி பட்டைய கிளப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சண்டிகர்
இந்த முறை தேர்தலிலும், சண்டிகரை ஆம் ஆத்மி கட்சி நிறைய நம்பி உள்ளது.. சண்டிகர் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசம் ஆகும்.. அங்கே இதுவரை காங்கிரஸ், பாஜக என்று மாறி மாறி ஆட்சி செலுத்தியிருக்கின்றன.. அப்படிப்பட்ட இடத்தில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 14 இடங்களைக் கைப்பற்றியது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது... டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தும் மாதிரிதான், சண்டிகர் மக்களின் இந்த மன மாற்றத்துக்கு காரணம் என்றும் அப்போது அரசியல் நோக்கர்கள் கூறினார்கள்.

காங்கிரஸ்
அதுமட்டுமல்ல, பாஜக தண்ணீர் வரியை 200 சதவீதம் அப்போது உயர்த்தியிருந்தது. இதனால் மக்கள் கடுமையான அதிருப்தியிலும் இருந்தனர்.. இப்படிப்பட்ட சூழலில், உள்ளே புகுந்த ஆம் ஆத்மி, தேர்தலில் வெற்றி பெற்றால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி தந்திருந்தது.. ஆம் ஆத்மி வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாகும்.. அந்த வகையில் சண்டிகரில் ஆம் ஆத்மியின் பிரச்சார அதிரடி, பாஜகவுக்கு மட்டுமல்ல, காங்கிரசுக்கும் நிச்சயம் ஒரு தலைவலியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.