சூப்பர் முடிவு... விவசாயிகளின் மகள்களுக்கு தான் எனது முழு சம்பளம்! ஹர்பஜன் சிங் அறிவிப்பு
சண்டிகர்: பஞ்சாப்பில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், தனது ராஜ்யசபா எம்பி சம்பளத்தை விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் பிப்ரவரி மாதம் 14ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பஞ்சாப்பை ஆண்ட காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. கருத்து கணிப்புகள் கூறியபடியே மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.
பஞ்சாப் முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர் பகவந்த் மான் கடந்த மாதம் 16ம் தேதி பொறுப்பேற்று கொண்டார். இதற்கிடையே தான் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தேர்வாகி இருந்த 5 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் கடந்த 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

எம்பியான ஹர்பஜன் சிங்
இதையடுத்து ஆம்ஆத்மி சார்பில் ஐஐடி பேராசிரியர் சந்தீப் பதக், ராகவ் சதா, அசோக் மிட்டல், சஞ்சீவ் அரோரா, ஹர்பஜன் சிங் ஆகியோரை ராஜ்யசபா எம்பி பதவிக்கு ஆம்ஆத்மி தேர்வு செய்தது. இவர்கள் அனைவரும் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் ராஜ்யசபா எம்பியானார்.

கல்விக்கு சம்பளம்...
இந்நிலையில் தான் ஹர்பஜன் சிங் தனது ராஜ்யசபா எம்பி சம்பளத்தை விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கும் வழங்குவதாக கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‛‛ராஜ்யசபா உறுப்பினராக எனது சம்பளத்தை விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு வழங்க விரும்புகிறேன். அதோட நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிக்க விரும்புகிறேன். இதற்கு தேவையை அனைத்தையும் என்னால் முடிந்த வரை செய்தேன். ஜெய்ஹிந்த்'' என கூறியுள்ளார்.

இன்றைய அறிவிப்புகள்
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் ஆகும் நிலையில் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை காலையில் ஆம்ஆத்மி அரசு வெளியிட்டுள்ளது.

நெட்டிசன்கள் பாராட்டு
இதனை தொடர்ந்து தான் ஹர்பஜன் சிங்கும் தனது ராஜ்யசபா எம்பிக்கான சம்பளத்தை விவசாயிகளின் பெண் குழந்தைகளின் கல்விக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆம்ஆத்மி கட்சியையும், முதல்வர் பகவந்த் மான், ஹர்பஜன் சிங் எம்பி ஆகியோரையும் பொதுமக்களும், நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.