அடேங்கப்பா.. வீட்டுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் ‛ப்ரீ’.. பஞ்சாப்பில் அசத்தும் ஆம்ஆத்மி அரசு!
சண்டிகர்: சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கூறியதுபோல் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரத்தை பஞ்சாப்பை ஆட்சி செய்யும் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு இன்று முதல் வழங்கி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பிப்ரவரி 14ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் ஆம்ஆத்மி கட்சி வெற்று பெறும் என கருத்து கணிப்புகள் கூறின.
இந்த கருத்து கணிப்புகளின் படியே மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளிலும், எஸ்ஏடி 3, பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் சுயஉதவிக்குழுக்கு ரூ.25 ஆயிரம் கோடி.. இனிப்பு செய்தி கூறிய அமைச்சர் பெரியகருப்பன்

ஆம்ஆத்மி அரசு
இதன்மூலம் டெல்லியை தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப்பிலும் அதிகாரத்தை கைப்பற்றியது. பஞ்சாப் மாநில முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். இதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே பதவியேற்ற ஒரு மாத்தில் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஜூலை ஒன்று முதல் மாநிலத்தில் வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறினார்.

இன்று முதல் இலவச மின்சாரம்
அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் வீடுகளுக்க 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பஞ்சாப் மாநில மக்களிடம் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட விஷயங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் மாநில மக்களுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.

62.25 லட்சம் பேர் பயன்
இத்திட்டத்துக்காக ஆம்ஆத்மி அரசு சார்பில் பட்ஜெட்டில் ரூ.1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் 62.25 லட்சம் பயனாளிகள் பயன்பெற உள்ளனர். இது மாநிலத்தில் உள்ள மொத்த மின்நுகர்வோரில் 84 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் நிலையில் தற்போது பஞ்சாப்பில் 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மாதம் 300 யூனிட் வரையான வீட்டு மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.