இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு கொத்தாக வந்த கொரோனா.. ஒரே விமானத்தில் வந்த 125 பேருக்கு பாதிப்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு இத்தாலியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திற்குள் இருந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக டெல்லி மும்பை சென்னை உள்ளிட்ட பெருநகர பகுதிகளில் நாளுக்கு நாள் பல மடங்கு வேகத்தில் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா புதிய உச்சம் - ஒரே நாளில் 1,16,836 பேருக்கு பாதிப்பு
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒருநாள் மற்றும் ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்தாலி நாட்டில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விமான பயணிகள்
இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரான அமிர்சரஸ் நகரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் வாக்கில் விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயனம் செய்த பயணிகள் அனைவருக்கும் தற்போதைய கட்டுப்பாடுகளின் படி கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் விமானத்தில் பயணம் செய்த 125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

125 பேருக்கு கொரோனா உறுதி
இத்தாலி நாட்டிலிருந்து வந்த விமானத்தில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 179 பயணிகள் பயணம் செய்தனர். இத்தாலி நாட்டிலுள்ள புகழ்பெற்ற நகரான மிலனிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், பஞ்சாப் மாநிலத்திள்ள ஆன்மிக மற்றும் முக்கிய நகரமான அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தரையிறங்கியது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆபத்து பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் அனைவருக்கும் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என ஏற்கெனவே மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் பரவியதா கொரோனா?
அந்தவகையில் இ்த்தாலி நாட்டில் ஏற்கனவே ஓமிக்ரான் பாதிப்பு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பரவலானது அதிகரித்து வருவதால், இத்தாலில் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் விமானத்தில் பயணம் செய்த 179 பயணிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில்; உறுதி செய்யப்பட்டது.

விமான பயணிகள் அதிர்ச்சி
இந்த நிலையில், இத்தாலி நாட்டில் கொரோனா பரிசோதனைக்குப் பிறகே விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணிக்க அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தாலியில் புறப்படும்போது ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா பரிசோதனையில் இல்லை என முடிவுகள் வந்த நிலையில், விமானம் மூலம் இந்தியா வந்ததும் எவ்வாறு கொரோனா பாசிட்டிவ் வந்தது எப்படி என விமான நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.