சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கார் வச்சிருக்கீங்களா? 'இந்த மாதிரி' விபத்துகளும் ஏற்படலாம்.. தப்பிக்க டிப்ஸ்! முன்னெச்சரிக்கை பதிவு

Google Oneindia Tamil News

சென்னை: தற்போதைய காலக்கட்டத்தில் கார் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. வாடகை கார்களில் பயணிப்பவர்களை விட சொந்தமாக கார் வாங்கி பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 10 முக்கிய அம்சங்களை பின்பற்றினால் கார் பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் வசிக்கும் மக்களுக்கு சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற நாட்டம் உண்டு. இந்த கனவு பலபேருக்கு நனவானாலும், பல பேருக்கு கனவாகவே உள்ளது.

இருப்பினும் கார் வாங்கி பயணம் மேற்கொள்பவர்கள் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா? என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். இதனால் தான் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு காரில் உள்ளவர்கள் மரணமடைந்து வருகின்றனர்.

கார் ஓட்டுனவரு ஹெல்மெட் போடலை? பைன் போட்ட திண்டுக்கல் போலீஸ்! கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்? கார் ஓட்டுனவரு ஹெல்மெட் போடலை? பைன் போட்ட திண்டுக்கல் போலீஸ்! கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்?

தொழில்முறை ஓட்டுநர் பயிற்சி

தொழில்முறை ஓட்டுநர் பயிற்சி

கொஞ்சம் முன்னெச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருந்தால் உயிரிழப்புகளை தடுத்து விடலாம் என போலீசார் உள்பட கார் நிறுவனங்கள் அறிவுறுத்தி வந்தாலும் கூட மக்கள் அதற்கு செவிசாய்ப்பது இல்லை. இதனால் தான் தொடர்ந்து விபத்துகளில் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் பேஸ்புக்கில் ஆர்எஸ் பிரபு என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். ஆண்டுக்கு 40,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக பணி நிமித்தமாகப் பல மாநிலங்களில் செல்ப் டிரைவ் செய்து பயணிக்கும் இவர் தொழில்முறை ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்புப் பயிற்சியளிக்கும் Hubert Ebner India Private Limited நிறுவனத்தின் Defensive Driving பயிற்சிகளில் மூன்று முறை 'A' கிரேடு தரச் சான்றிதழ் பெற்றுள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரை வருமாறு:

33 சதவீத பொறுப்பு

33 சதவீத பொறுப்பு

மகிழுந்து வைத்திருப்பது இந்தியர்களை பொறுத்தவரை ஒரு பெருமைக்குரிய விசயம். அதற்கு பூ வைப்பது, சாமி படம் மாட்டி கோவில் ஆக்குவது, டயரில் எலுமிச்சம் பழம் வைத்து நசுக்கி காத்து கருப்பு விரட்டுவது, விசிட்டிங் கார்டை அப்படியே கண்ணாடியில் ஸ்டிக்கராக ஒட்டுவது, சாலையைப் பாத்தா சமத்து சேலையைப் பாத்தா விபத்து என்று சமுதாயத்துக்குக் கருத்து சொல்வது என நம் மக்கள் செய்யும் அட்டகாசங்களை ஏகப்பட்டது எழுதலாம். கார் வாங்கும்போதே பாதுகாப்பு அம்சங்களுக்கு பெரும்பாலானோர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தகர டப்பாவை கார் என்று நினைத்து வாங்கும் வாடிக்கையாளர், தயாரித்து விற்கும் கம்பெனிகள், அதை அனுமதிக்கும் அரசாங்கம் என மூன்று பேருக்கும் இதில் முறையே 33 சதவீத பொறுப்பு உண்டு.

கூடுதல் விபரங்கள் அறிவது பாதுகாப்பானது

கூடுதல் விபரங்கள் அறிவது பாதுகாப்பானது

கார் வாங்கியாயிற்று, ஓட்டுநர் உரிமம் இருக்கிறது. சாலை பாதுகாப்பு விவரங்கள் அனைத்தும் தெரியும். வண்டியும் பணிமனையில் விட்டு முறையாகப் பழுது பார்க்கப்படுகிறது என்றாலும் சில கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொண்டு தயாராக இருப்பது நமது பயணத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதோடு தேவையற்ற சங்கடங்களையும் தவிர்க்க உதவும். அவை சில நேரங்களில் நமக்குப் பயன்படாவிட்டாலும், வழியில் பிரேக்-டவுன் ஆகித் தடுமாறிக்கொண்டு நிற்பவர்களுக்கும் பயன்படும். காருடன் வந்த வீல் ஸ்பேனர், ஜாக், ஜாக் லீவர், ஸ்டெப்னி டயர், முன்னெரிச்சரிக்கை முக்கோணம், வீல் சோக் தாண்டி வேறு சில கருவிகளை வெளி மார்க்கெட்டில் வாங்கி முறையாக வைத்திருப்பது அவசியம். அப்படிப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களைப் பார்ப்போம்.

முன்னெச்சரிக்கை முக்கோணம்

முன்னெச்சரிக்கை முக்கோணம்

Advance Warning Triangle: முன்னெச்சரிக்கை முக்கோணம் ஒன்றை புதிய வண்டியுடன் தருவார்கள். ஐந்து இலட்சத்துக்கும் குறைவான விலையுடைய கார்களில் அது பேப்பர் மாதிரிதான் இருக்கும். வெயிலில் நிறுத்தப்படும் கார்களில் நான்கைந்து ஆண்டுகளில் பெரும்பாலும் பொடிப் பொடியாக உதிர்ந்துவிடும். இரண்டு முக்கோணங்களை வண்டியில் வைத்திருப்பது அவசியம். சாலையோரத்தில் பிரேக்டவுன் ஆகி நிற்கும்போது பின்புறம் சிவப்பு முக்கோணத்தையும், முன்புறம் வெள்ளை முக்கோணத்தையும் வைக்க வேண்டும். மாநில சாலையாக இருந்தால் வண்டியில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலையாக இருந்தால் நூறு மீட்டர் தொலைவிலும் வைக்க வேண்டும். நான்கு வழிச்சாலைகளில் பின்புறம் 50 மீட்டரில் ஒன்று, 100 மீட்டரில் ஒன்று என வைக்கவேண்டும்; முன்புறம் வைக்கத் தேவையில்லை. ஒருமுறையாவது அதை எடுத்து எப்படி விரித்து முக்கோணமாக மாற்றி சாலையில் வைப்பது என்று பார்க்கவும். பிரேக்டவுன் ஆனால் அதை வைப்பதற்கு கூச்சப்பட வேண்டாம். 'பரவால்ல விடு' என்ற அலட்சியமும் வேண்டாம். 'ரிப்பேர் ஆகி நின்ற கார் மீது, பின்னால் வந்த லாரி மோதி குடும்பமே பலி' என்று படித்த செய்திகளைப் புறக்கணிக்க வேண்டாம்.

சேஃப்டி லைட் & டார்ச் லைட்

சேஃப்டி லைட் & டார்ச் லைட்

5in1 எமர்ஜென்சி டார்ச் லைட் என்று ஆன்லைனில் கிடைக்கிறது. அதில் சிவப்பு எல்குடி விளக்கு விட்டுவிட்டு மின்னும்படி இருப்பதோடு டார்ச் லைட், சீட் பெல்ட் கட்டர், கிளாஸ் பிரேக்கர் உடன் அடியில் ஒரு காந்தமும் இருக்கும். வண்டி மீது நிற்க வைத்துவிட்டால் கீழே விழாது. இரவு நேரங்களில் மற்ற வண்டிகளுக்கு எச்சரிக்கை சமிக்ஞை காட்டுவதற்குப் பயன்படும். தண்ணீர் புகாத டார்ச் லைட் ஒன்று நல்ல பிராண்டில் வாங்கி வைத்திருக்கவும். நூறு ரூபாய்க்குக் கணக்குப் பார்க்ககூடாது. அதற்கு பேட்டரியை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிடவும். சிலநேரங்களில் 5in1 லைட் சீனா தயாரிப்பு என்பதால் ஏமாற்றிவிடக்கூடும். ஏதாவது விபத்து நடந்த இடங்களில் உதவப் போனால் இரண்டு டார்ச் லைட்டுமே தேவைப்படும். அவசர காலங்களில் செல்போன் டார்ச் எதற்குமே உதவாது.

கண்ணாடி உடைப்புக்கான சீட் பெல்ட் கட்டர்

கண்ணாடி உடைப்புக்கான சீட் பெல்ட் கட்டர்

Emergency Windshield Breaker cum Seat Belt Cutterஅமேசான் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு ஆன்லைனில் கிடைக்கிறது. இதை ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் ஸ்க்ரூ போட்டு மாட்ட வேண்டும் அல்லது சீட் பெல்ட் கிளாம்ப்புக்கு கீழே பிளாஸ்டிக் கயிறு போட்டு இறுக்கமாகக் கட்டி வைக்க வேண்டும். டேஷ் போர்டுக்கு உள்ளே, மேலே, ஓரத்தில் எல்லாம் வைக்கக் கூடாது. வண்டி விபத்தில் சிக்கினால் முதலில் loose objects-தான் பறந்து சென்று வெளியில் விழும். வண்டி உருண்டு தலைகீழாகக் கிடக்கும்போது நமது உடல் எடை மொத்தமும் சீட் பெல்ட்டில் தொங்கிக் கொண்டிருக்கும். அப்போது பட்டனை அழுத்தி சீட் பெல்ட்டை யாராலும் கழட்ட முடியாது. அப்போது இதில் உள்ள பெல்ட் கட்டரில் அறுத்துவிட்டு கண்ணாடியை உடைத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேற வேண்டும். விபத்து நடக்கும்போது அதிர்ச்சியில் நாம் உறைந்துவிடுவதால் கை கால்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடிக்கலாம். அப்போது செய்ய வேண்டிய முதல் வேலை சீட் பெல்ட் கட்டரை எடுத்து அறுத்துவிட்டு வண்டியை விட்டு வெளியேறுவதுதான். பெட்ரோல் ஒழுகி எப்போது வேண்டுமானாலும் தீப்பிடிக்கும் அபாயம் உண்டு. அதனால்தான் இந்த கட்டரை, ஓட்டுநர் சீட் பெல்ட்டுக்கு கீழே லாக் செய்து கையை விட்டதும் எடுக்கும்படி வைத்திருக்க வேண்டும். எந்தப் பொருள் உள்ளே கிடந்தாலும் பரவாயில்லை என போட்டுவிட்டு வெளியேற வேண்டும். கரிக்கட்டையாகி விட்டால் எது இருந்து என்ன பயன்? எல்லா இடங்களிலும் விபத்து நடந்தால் உடனே உதவ மக்கள் இருக்கமாட்டார்கள். பல இடங்களில் விபத்து நடந்ததை விடிந்த பிறகே மக்கள் பார்த்த கதைகள் ஏராளம்.

10 மீட்டர் நைலான் கயிறு

10 மீட்டர் நைலான் கயிறு

நைலான் கயிறு ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும். 10 மீட்டர் அளவுக்கு வாங்கி வைத்து கொள்ள வேண்டும். உங்களது வண்டியில் உள்ள Tow hook-இன் அகலத்தைப் பார்த்துவிட்டு அதில் நுழையும் தடிமனில் வாங்கவும். சுண்டுவிரல் தடிமனில் இருந்தால் துணி காயப்போட மட்டுமே பயன்படும்; அதில் காரைக் கட்டி இழுத்தால் அறுந்துவிடும். பெரிய கார்களில் towing hook தனியாகக் கொடுத்திருப்பார்கள். அதை எடுத்து ஒருமுறையாவது முன்னும் பின்னும் மாட்டிப் பார்க்கவும். சிலர் அதை வீசி விடுவதுண்டு. எங்காவது சேற்றில் சிக்கி நிற்கும்போது இறங்கி ஹூக் எங்கே இருக்கிறது, எப்படி மாட்டுவது என்று முழிக்கக் கூடாது. கண்ட இடத்தில் மாட்டி வண்டியை இழுத்தால் ஏதாவது உள்பாகங்கள் உடைய வாய்ப்புண்டு.

விசில்

விசில்

காருக்கு எதற்கு விசில் என்று கேட்கக்கூடாது. 20 முதல் 200 ரூபாய் வரை உங்களுக்குப் பிடித்த விலையில் ஒரு விசிலை வாங்கி டேஷ்போர்டில் போட்டு வைக்கவும். சாவிக் கொத்தில் மாட்டியும் வைக்கலாம்.
யாரும் பார்க்க வாய்ப்பில்லாத பள்ளத்தில் வண்டி உருண்டு, நாமும் மாட்டிக்கொண்டால் அப்படியே கிடக்க வேண்டியதுதான். ஏதாவது வண்டி சத்தமோ வெளிச்சமோ வந்தால் விசில் அடித்து அவர்களது கவனத்தை ஈர்த்து நமது இருப்பிடத்தைத் தெரிவிக்க முடியும். (ஒருமுறை சென்னையில் இருந்து மசினகுடிக்கு சுற்றுலா வந்த ஐந்து இளைஞர்களது கார் கல்லட்டி மலைப்பாதையில் உருண்டு கீழே விழுந்துவிட்டது. நான்கு நாட்கள் எந்த தொடர்பும் இல்லாததால் அவர்களது குடும்பத்தினர் புகார் செய்து, காவல்துறையினர் அவர்களது செல் டவர் சிக்னலை வைத்து மலைப்பாதையில் தேடிக் கண்டுபிடித்தனர். நான்கு பேர் இறந்து உடல்கள் அழுகிய நிலையில் கிடக்க, ஒரு பையன் காருக்குள்ளே மாட்டிய நிலையில் உயிரோடு கிடந்திருக்கிறான். ஐந்தாவது நாள் மீட்டனர். சில நேரங்களில் - காவலர்கள் இல்லாதபோது - போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதை ஒழுங்குபடுத்தவும் விசில், 5in1 டார்ச் போன்றவை பயன்படும்.

ஜம்ப் ஸ்டார்ட் கேபிள்

ஜம்ப் ஸ்டார்ட் கேபிள்

தரமான ஜம்ப் ஸ்டார்ட் கேபிள் ஒன்றை அவசியம் வண்டி டிக்கியில் வைத்திருக்கவும். பேட்டரி இறங்கிவிட்டால் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது எல்லா இடங்களிலும் சாத்தியம் இல்லை. எப்படி ஜம்ப் ஸ்டார்ட் செய்வது என்று அனுபவம் மிக்க ஓட்டுநர்களைக் கேட்கலாம், யூடிபில் ஏதாவது வீடியோ பார்த்தும் தெரிந்துகொள்ளலாம். இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமில்லை.

ஏபிசி வகை தீயணைப்பான்

ஏபிசி வகை தீயணைப்பான்

ஒரு கிலோ எடையில் ரீஃபில் பண்ணக்கூடிய ABC வகைத் தீயணைப்பானை வாங்கி ஓட்டுநருக்கு அடுத்த இருக்கையின் அடியில் பின்னால் இருந்து உள்ளே தள்ளி கட்டி வைக்கவும். Loose object-ஆக எங்கேயும் கிடக்கக்கூடாது. ஓட்டுநர் முகத்துக்கு அருகில் உள்ள தூணில் வைப்பதும் தவறு. விபத்து ஏற்படும்போது பறந்துவந்து கபாலத்தை உடைத்துவிடும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை காலாவதி தேதி முடிந்தவுடன் அம்புக்குறி பச்சையின் மீது காட்டினாலும் ரீஃபில் செய்யவும். அந்த ரீஃபில் நேரத்தில் தீயணைப்பானை எப்படி பயன்படுத்துவது என்று குழந்தைகளுக்கோ, அலுவலகத்தில் உள்ளவர்களுக்கோ செயல்முறை விளக்கம் காட்ட உள்ளே இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் தீயணைப்பான்களை தவிர்ப்பது நல்லது. அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறிதான்.

முதலுதவிப் பெட்டி

முதலுதவிப் பெட்டி

கார் வாங்கும்போது தரப்படும் முதலுதவிப் பெட்டியோடு அப்படியே மறந்துவிடுவது பலரது பழக்கம். தனியாக ஒரு தரமான பெட்டி வாங்கி, ஒவ்வொரு பொருளையும் மெடிக்கலில் காலாவதி நாளைப் பார்த்துவிட்டு வாங்கி அதில் போட்டு வைக்கவும். ரெடிமேட் முதலுதவிப் பெட்டிகளைத் தவிர்க்கவும். மெடிக்கல்களில் கேட்டாலே என்னென்ன தேவை என்று சொல்வார்கள். வருடம் ஒருமுறை அதைப் பார்த்து காலாவதியானவற்றை எடுத்துவிட்டு அப்கிரேடு செய்யவும். பஞ்சு, கையுறை, கட்டுத் துணிகள் போன்றவை நிறையவே இருக்கட்டும். நாம் போகுமிடமெல்லாம் வரக்கூடிய முதலுதவிப் பெட்டி என்பதால் கஞ்சத்தனம் பண்ணாமல் நிறைய வாங்கி வைக்கவும்.

குடை

குடை

தினசரி காரை எடுத்துக்கொண்டு அதிக தூரம் செல்வபவராக இருந்தால் தனியாக ஒரு குடையைக் காருக்கென்றே டிக்கியில் வைத்திருங்கள். மழைக்காலத்தில் தினமும் வீட்டிலிருந்து கிளம்பும்போது மறக்காமல் குடையை எடுத்துச்செல்வது சாத்தியமில்லை. பிரேக்டவுன் ஆகி நிற்பது என்பது எப்போதுமே நாம் எதிர்பாராத நேரத்தில்தான் நடக்கும். மொபைலில் சார்ஜ் இருக்காது, சார்ஜ் போட வண்டியில் கேபிள் இருக்காது, பின்னிரவு நேரமாகியிருக்கும், மழை கொட்டும், மின்சாரம் இருக்காது, அக்கம்பத்தில் ஒரு கிலோமீட்டருக்கு யாருமே இல்லாத இடமாக இருக்கும், பசி வயிற்றைக் கிள்ளும், குடிக்கத் தண்ணீரும் இருக்காது. அப்படி ஒரு நேரத்தில்தான் மேலே பார்த்த பலவும் எப்படிப் பயன்படும் என்பதை உணர முடியும்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

வண்டியின் RC, காப்பீடு, PUC, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றின் நகல் கட்டாயம் வண்டிக்குள்ளேயே இருக்க வேண்டும். வருடம் ஒருமுறை புதிய நகல்களை வைத்துவிட்டு பழையதை அப்புறப்படுத்தவும். ஒரிஜினல் தேவையா இல்லையா என்கிற பஞ்சாயத்து அப்புறம்தான். வண்டியில் அலுவலக வயர்லெஸ், ஹாம் ரேடியோ போன்றவற்றை வைத்திருந்தால் கண்டிப்பாக அதற்குரிய ஆவணங்களின் ஒரு பிரதி இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தமிழ்நாடு எல்லையைத் தாண்டிவிட்டால் ஆவணங்கள் மட்டுமே பேசும். ஒரு சிறிய தரமான பிளாஸ்டிக் பெட்டி வாங்கி அதில் முதலுதவிப் பெட்டி, குடை, ஜம்ப் ஸ்டார்ட் கேபிள், கயிறு, wheel choke போன்றவற்றைப் போட்டு வைக்கவும். டிக்கியிலும் loose object-களாக எதுவும் கிடக்கக்கூடாது.

பெட்டி, உறைகளில்...

பெட்டி, உறைகளில்...

ஒவ்வொருவரின் தொழிலுக்கேற்ப சில கருவிகளை அன்றாடம் எடுத்துச்செல்ல வேண்டி வரும். அவற்றை அதற்குரிய பெட்டி, உறைகளில் வைத்து முறையாக வைத்து எடுத்துச்செல்ல வேண்டும். இல்லாவிட்டால் சோதனைச் சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு தர்மசங்கடம் ஏற்படும். அரிவாள், கத்தி போன்றவற்றை சீட்டுக்கு அடியில் சொருகி வைத்திருப்பதை எல்லாம் தவிர்க்க வேண்டும்; அது சட்டப்படி குற்றமாகும். டேஷ்போர்டில் கத்தி, திருப்புளி, ஆணி, ஸ்பூன், ஃபோர்க், இரும்புக் கம்பித் துண்டு போன்றவற்றை கண்டிப்பாக வைக்கக்கூடாது. பின் சீட்டின் மேல் டிபன் பாக்ஸ், லேப்டாப் என எதுவுமே இருக்கக்கூடாது. விபத்து ஏற்படும்போது அவை projectile ஆக மாறி திடீரென பறந்துவந்து ஆளைக் கொன்றுவிடும். டிக்கியில் ஏதாவது கனமான பொருளை வைத்தால் கண்டிப்பாக தரமான கயிறு போட்டு கீழே ஏதாவது ஒரு இடத்தில் கட்டி வைக்கவும். 'பரவால்ல விடு' என்று சொல்லி கிளம்பிச்சென்று விபத்துக்குளாகி டிக்கியில் இருந்த சாமான்கள் பின்சீட்டைக் கிழித்துக்கொண்டு சென்று முன் சீட்டில் இருந்தவர்களையும் காலி செய்த சம்பவங்கள் நிறைய உண்டு.

நிம்மதி பறிக்கும் அதிபுத்திசாலிதனம்

நிம்மதி பறிக்கும் அதிபுத்திசாலிதனம்

விபத்து அல்லாத பெரும்பாலான பிரேக்டவுன்கள் டயர் அல்லது பேட்டரி தொடர்பாகவே இருக்கும். எனவே டயர், பேட்டரி பராமரிப்பில் கஞ்சத்தனம் கூடாது. பஞ்சரான டயர், ஒட்ட முடியாத அளவுக்கு சேதமாகிவிட்டது என்று பஞ்சர் கடையில் சொன்னால் கவுரவமாகச் சென்று புதிய டயர் மாற்றிக்கொள்ள வேண்டும். அதை அடுத்தடுத்த பஞ்சர் கடைகளுக்கு எடுத்துச்சென்று வல்கனைஸ் பண்ணி சரி பண்ணும் அதிபுத்திசாலித்தனம் ஒரு நாளைக்கு மொத்த குடும்பத்தின் நிம்மதியையும் பறித்துவிடும். 'அதெல்லாம் நமக்கு நடக்காது' என்கிற அதீதத் தன்னம்பிக்கைக்குப் பெயர் குருட்டு நம்பிக்கை. அந்தக் குருட்டு நம்பிக்கை ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் நம்மை படுகுழியில் தள்ளிவிடும்.

 பாதுகாப்புக்கு நாமே பொறுப்பு

பாதுகாப்புக்கு நாமே பொறுப்பு

நமது பாதுகாப்புக்கும், நம்மை நம்பிக் காரில் உட்கார்ந்து வருபவர்களது பாதுகாப்புக்கும் நாமே பொறுப்பு. எதையெல்லாம் நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமோ, எதையெல்லாம் முன்கூட்டியே கணித்துத் தவிர்க்க முடியுமோ அதையெல்லாம் செய்துவிட வேண்டும். அதற்கு மேல் நடப்பதற்கு யார்தான் என்ன செய்ய முடியும்? வாழ்தல் இனிது. கூடி வாழ்தல் அதனினும் இனிதல்லவா?'' என குறிப்பிட்டுள்ளார்.

English summary
In the present era car travel has become an inevitable one. The number of people who buy and use their own car is increasing day by day than those who travel in rental cars. It has been reported that car travel can be done safely if the 10 key features are followed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X