1300 கிலோ போதை பொருட்கள் அழிப்பு.. 2 கோடி.. 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்- சென்னை போலீஸ் தடதட!
சென்னை : சென்னையில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட 1,300 கிலோ போதைப் பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இணை ஆணையர் ரம்யா பாரதி முன்னிலையில், 1,300 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் எரிக்கப்பட்டன.
3 பேரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி! டிடிவி + ஓபிஎஸ் + சசிகலா.. சட்டுனு மாறும் ரூட்.. அதிமுக அப்செட்?
இவை அனைத்தும், சென்னை மாநகர போலீசாரால் கைப்பற்றப்பட்டு, அழிப்பதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருட்கள்
சென்னையில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்காக, வடக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.வி.ரம்யா பாரதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், 68 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 1,300 கிலோ கஞ்சா, 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைப் பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்றனர். நீதிமன்ற உத்தரவின்படி இந்த போதைப்பொருட்கள் எரியூட்டி அழிக்கப்பட்டது.

எரியூட்டி அழிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள தென்மேல்பாக்கம் கிராமத்தில் போதைப் பொருட்கள் மற்றும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ரூ.2 கோடி மதிப்பிலான 1350 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் நேற்று எரிக்கப்பட்டன.

சங்கர் ஜிவால்
இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையில் கடந்த 5 மாதங்களில் போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட 404 வழக்குகள் தொடர்பாக 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் விற்பனைக்குப் பயன்படுத்திய 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு
கடந்த 5 மாதங்களில் 400 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 700-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் போதைப்பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இன்னும் 2,000 கிலோ போதைப் பொருட்கள் இருப்பில் உள்ளன. முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி வாங்கிய பிறகு, அவை அழிக்கப்படும்.

கடைகளுக்கு சீல்
தமிழகத்தில் போதைப் பொருட்களை எந்த வயதினர் அதிகம் பயன்படுத்துகின்றனர், எந்த வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு இணைந்து ஆய்வு மேற்கொள்ளும். சென்னையில் போதைப் பொருட்களை விற்ற100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.