தமிழ்நாட்டில் 3000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. சென்னையுடன் போட்டிபோடும் “அந்த” ஒரு மாவட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,743 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கி உள்ளது.
கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மீண்டும் எகிறிய கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. முழு விபரம் இதோ!

உயரும் பாதிப்பு
அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஜூன் மாதம் முதல் தினசரி கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கியது. தமிழ்நாட்டில் 200-க்கும் குறைவாக இருந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 23 ஆம் தேதி 1,000 ஐ தண்டியது. இப்படி படிப்படியாக அதிகரித்து நேற்று ஒரேநாளில் 2,662 பேர் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு கொரோனா நிலவரம்
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,743 ஆக அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,90,834 ஆக அதிகரித்து இருக்கிறது.

சென்னை பாதிப்பு
சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,062 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 3 வாரங்களில் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண் உயிரிழந்தார். இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,027 ஆகவே அதிகரித்து உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 403 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குணமடைந்தவர்கள்
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,717 ஆக அதிகரித்து இருக்கிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 1,791 பேர் இன்று குணமடைந்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,35,090 ஆக உயர்ந்துள்ளது.