பள்ளி மாணவர்களிடம் பரவும் சா(தீ).. 15 நாட்களுக்குள் 3வது சம்பவம் - தடுக்குமா தமிழ்நாடு அரசு?
சென்னை: பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறுவதாக ஒரு பக்கம் சர்ச்சைகள் வந்துகொண்டிருக்க மறுபக்கம், சாதி ரீதியாக மாணவர்கள் மோதிக்கொள்வது தொடர்கதையாகி இருக்கிறது.
தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல் என ஆண்டாண்டு காலமாக தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களின் முதல் பக்கங்களில் குறிப்பிடப்பட்டு வருகின்றன.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் சாதியத்தின் ஆபத்து குறித்தும் பாடங்கள் உள்ளன.
டாக்டராக வேண்டிய பழங்குடி மாணவர்..பொய் வழக்கில் வாழ்க்கையை அழித்த போலீஸ்! 13 ஆண்டுக்கு பின் விடுதலை

சாதி வெறியர்களாகும் மாணவர்கள்
இதனால் ஒரு பக்கம் மாணவர்கள் பகுத்தறிவு வாதிகளாக சமூகநீதி கொள்கை உடையவர்களாக உருவானாலும் மறுபக்கம் சில மாணவர்கள் மோசமான சமூக பின்னணி, சில பெற்றோர், சில ஆசிரியர்களின் தவறான போதனைகளால் சாதி வெறியர்களாக வளர்ந்து வருகின்றனர். சாதியத்தையும், அதன் பெருமையையும் பேசும் திரைப்படங்கள், யூடியூப் வீடியோக்களும் இதற்கு காரணம் எனலாம்.

பள்ளிகளில் சாதிவெறி சம்பவங்கள்
இப்போதெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறார்கள் என்று ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் கள எதார்த்தம் அறியாமல் ஒரு தரப்பினர் பதிவுகளை வெளியிட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம் எதிர்கால இந்தியாவின் தூண்கள் என கருதப்படும் மாணவர்கள் பள்ளிகளில் சாதிக்கு ஒரு நிறம் என கையில் கயிறு கட்டி சென்று சக மாணவனை சாதி ரீதியாக இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நெல்லை மாணவர் கொலை
உச்சக்கட்டமாக குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கும் இடையே கையில் சமுதாய ரீதியாக கயிறு கட்டுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக செல்வசூர்யா என்ற மாணவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

கடலூர் வன்முறை
அடுத்த சில நாட்களிலேயே கடலூர் மாவட்டம் வெள்ளக்கரை அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர் சாதியை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறி இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் T.புதுப்பாளையம், வண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த வெளிநபர்கள் உள்ளே புகுந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.

நெருப்பில் தள்ளப்பட்ட மாணவன்
இந்த நிலையில் நேற்று திண்டிவனம் அருகே இருளர் சமுதாயத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் சுந்தர்ராஜனை சக மாணவர்கள் சாதிபெயரை சொல்லி நெருப்பில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 6 ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் தொடர்ந்து சக மாணவர்களால் இழிவுபடுத்தப்பட்டு வந்த நிலையில் தலைமை ஆசிரியரிடம் புகாரளித்ததால் கோபமடைந்த 3 மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு உட்பட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அரசின் கடமை
பழமைவாதத்தை விரட்டி நவீன கருத்துக்களையும் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் அறிவையும் கற்றுத்தர வேண்டிய பள்ளிகள் இப்படி சாதிவெறியர்களின் கூடாரங்களாக மாறுவது பள்ளிகள், கல்வியின் மீதான நம்பிக்கையையே சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பள்ளிகளில் சாதிய கொடுமைகள் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும், மாணவர்கள் மத்தியில் சாதி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.