என்னது 4 தலைநகரமா?.. திரும்பி பார்க்க வைத்த பாமகவின் "பளீர்" வாக்குறுதி.. ராமதாஸின் தரமான பிளான்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாமக வெளியிட்டு இருக்கும் தேர்தல் வாக்குறுதி அறிக்கை பெரிய கவனத்தை பெற்றுள்ளது.. எப்போதும் போல பல தொலைநோக்கு திட்டங்களோடு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக இந்த சட்டசபை தேர்தலில் 23 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த 23 தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலையும் பாமக அதிமுகவிடம் கொடுத்துவிட்டது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு மக்களை கவரும் வகையில் பாமக தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
சமூக நீதி, பெண் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு ஆகியவை மீது பாமக அதிக கவனம் செலுத்தி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது. கொஞ்சமமும் எதிர்பார்க்காத சில முக்கியமான அறிவிப்புகளும் கூட பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

அறிக்கை
பாமக இன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் சென்னை உட்பட 4 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிர்வாக வசதிக்காக 2ஆவது தலைநகராகத் திருச்சியும், 3ஆவது தலைநகரமாக மதுரையும் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் தொழில் தலைநகரமாகக் கோயம்புத்தூர் அறிவிக்கப்படும், என்று கூறப்பட்டுள்ளது.

மாவட்டங்கள்
அதோடு தமிழ்நாட்டில் அண்மையில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களும் மறுசீரமைக்கப்படும். புதிய மாவட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். ஒரு மாவட்டத்தில் 12 இலட்சம் பேர் வாழும் வகையில் மாவட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.

தணிக்கை
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு, மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். புதிய அரசு பதவியேற்று ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

ஸ்மார்ட் சிட்டி
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட பணிகள் தவிர, மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நகரங்களிலும் திட்டமிட்ட வகையில் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் மக்கள் நெரிசலும், மக்கள் அடர்த்தியும் குறைக்கப்படும். தமிழகத்தில் அனைத்து நகரங்களையும், சிறுநகரங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று பாமக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்ஜிஆர்
திருச்சியை தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவாக இருந்தது. இந்த நிலையில் அந்த கனவை மீண்டும் பாமக கையில் எடுத்துள்ளது. அதோடு திருச்சி மட்டுமில்லாமல் மதுரை, கோவையையும் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று பாமக கூறியுள்ளது. பாமகவின் இந்த வாக்குறுதி கவனத்தை ஈர்த்துள்ளது.

எப்படி
ஏனென்றால் ஆந்திர பிரதேசத்தில் இதேபோல் மூன்று தலைநகரங்களை கொண்டு வர வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து அது பெரிய சர்ச்சையானது. ஆனால் அதே போன்ற திட்டத்தை துணிச்சலாக பாமக அறிவித்துள்ளது. டெல்டா மக்கள், தென்மாவட்ட மக்கள், கொங்கு பகுதி மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் திட்டமிட்டு இந்த அறிவிப்பை பாமக வெளியிட்டுள்ளது.

சென்னை
சென்னையில் மட்டும் வளர்ச்சி குவிய கூடாது பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்பதில் கருத்தில் கொண்டு பாமகவின் அறிக்கை அமைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் இருக்கும் வன்னியர் உட்பட எம்பிசி மக்களின் வாக்குகளையும் பாமக கவனத்தில் கொண்டு உள்ளது. ஆனால் நடைமுறை ரீதியாக இந்த அறிவிப்பு செயலுக்கு வருமா என்பது சந்தேகம்தான்!