இன்னும் 30 வருடம்தான்.. இந்தியாவின் 30 நகரங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு வரும்.. வெளியான லிஸ்ட்
சென்னை: இன்னும், 30 வருடங்களுக்குள்.. அதாவது 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 30 நகரங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக வாட்டர் ரிஸ்க் பில்டர் (WWF) அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் திடுக்கிடும் தகவல் இடம் பெற்றுள்ளது.
சென்னை முதல் சிம்லா வரை கடந்த காலங்களில் எந்த அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது என்பதை பார்த்துள்ளோம். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் வாட்டர் ரிஸ்க் பில்டர் என்ற தண்ணீர் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்திவரும் இந்த அமைப்பின் ஆய்வு முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்படி 2050ஆம் ஆண்டுக்குள் உலகில் மொத்தம் 100 நகரங்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கலாம். இதனால் 350 மில்லியன் மக்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. இதனால் பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்படுமாம்.

முதலிடம் ஜெய்ப்பூருக்கு
சீனாவில் அதிகபட்சமாக 50 நகரங்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்த அளவில், 30 நகரங்கள் இந்த பட்டியலில் இருக்கின்றன. மிக அதிகமாக பாதிக்கப்படப் போகும் நகரம் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர். இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே நகரம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

பெங்களூர், விசாகபட்டினம், கோழிக்கோடு
இது தவிர இந்த 30 நகரங்களின் பட்டியலில், பெங்களூர், விசாகப்பட்டினம், கோழிக்கோடு, கொல்கத்தா, மும்பை, புனே, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், டெல்லி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. சென்னையை பட்டியலில் குறிப்பிடவில்லை. உலக நகரங்கள் என்று எடுத்துக்கொண்டால் சீன தலைநகர் பீஜிங் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க், துருக்கி நாட்டின் இஸ்தான்புல், ஹாங்காங், மெக்கா மற்றும் ரியோடி ஜெனிரோ நகரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. மொத்த நகரங்களில் 50 விழுக்காடு சீன நாட்டைச் சேர்ந்தது. உலக அளவில் எந்தெந்த நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதோ, அந்தந்த நகரங்களில் இப்போது 17 சதவீதமாக இருக்கும் மக்கள் தொகை 2050ம் ஆண்டுக்குள் 51 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் இந்த சர்வே கணித்துள்ளது.

நகர நீர் நிலைகள் முக்கியம்
இதுகுறித்து வாட்டர் ரிஸ்க் பில்டர் அமைப்பின், இந்தியாவுக்கான, திட்ட இயக்குனர் டாக்டர் செஜல் வோரா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வருங்காலம் நகரங்களை நம்பியிருக்கிறது. இந்தியா வேகமாக நகரமயமாகி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் நகரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே, நகரங்களில் உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாத்துக் கொள்வதும், அவற்றை பெருக்குவதும்தான் இந்த பிரச்சினைக்கான தீர்வாக இருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது.. ஏரிகளை ஆக்கிரமிச்சு, பிளாட் போட்டு வித்துராதீங்கப்பா என்பதைத்தான் அவர் சுத்தி சுத்தி சுட்டிக் காட்டியுள்ளார்.

மழை நீர் சேகரிப்பு
இந்தியாவில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் அவசியத்தையும் இந்த எச்சரிக்கை நமக்கு உணர்த்துகிறது. சமீபத்தில் ரேடியோவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மழைநீர் சேகரிப்புதான் நமது நாட்டின் நீர் நிலைகள் மற்றும் வளங்களை காப்பாற்றும் வழி. தற்போது இந்தியாவில் வெறும் 8 சதவீதம் அளவுக்கு மட்டுமே மழைநீர் சேகரிப்பு நடைபெறுகிறது என்று தெரிவித்து இருந்தார். இதை எச்சரிக்கைகளை சாதாரண செய்திகளாக கடந்து செல்லாமல், மக்கள் ஒவ்வொருவரும் மழை நீர் சேகரிப்பில் பங்களித்தால், மாபெரும் குடிநீர் தட்டுப்பாடு ஆபத்திலிருந்து நாட்டை காப்பாற்ற முடியும் என்பது திண்ணம்.