சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்னக்கிளி ஒன்ன தேடுதே.. 76ல் வீச ஆரம்பித்த தென்றல்.. இன்னும் வீரியம் குறையாத.. "ராஜா"ங்கம்!

அன்னக்கிளி திரைப்படம் வெளியான இன்றைய தினத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: 1976 ஆம் ஆண்டு இதே நாள் வெளியான படம் "அன்னக்கிளி"... இளையராஜா இசையில் வெளியாகி, 44 வருடங்கள் கடந்தும் இந்த படத்தை தமிழக மக்கள் இன்னமும் மறக்கவில்லை.. அன்னக்கிளி படத்தின் வெற்றி, சிறப்புகளை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வதில் "ஒன் இந்தியா தமிழ்" பெருமை கொள்கிறது.

அந்த சமயம் கலர் படங்கள் பெருமளவு தலைதூக்கி விட்டன.. கலர் படம் என்றால் கெத்தும் கூட.. வெகுஜனங்கள் அத்தகைய படங்கள் மீது அப்படி ஒரு நாட்டம் கொண்டிருந்தனர். கலர் கலராக போஸ்டர்களை சுவற்றில் பார்த்தாலே, அன்றைக்கே அந்த படத்துக்கு முண்டியடித்து கொண்டு ஓடுவார்கள்... இதனால் மெல்ல பிளாக் & ஒயிட் படங்களையும் மறக்க ஆரம்பித்தனர்!!
இப்படிப்பட்ட ஒரு தருணத்தில்தான், கறுப்பு வெள்ளை படமாக அன்னக்கிளி வெளியானது.. இந்த படத்தை தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என அனைத்து தமிழர்களையும் சுண்டியிழுக்க முக்கிய காரணகர்த்தா இசைஞானி இளையராஜா என்ற ஆளுமைதான்.

முன்னேற்றத்தில் கோட்டை.. கொரோனாவில் 8-ம் இடத்திலிருந்து 2வது இடத்தை எட்டி பிடித்த தமிழகம்.. கமல்முன்னேற்றத்தில் கோட்டை.. கொரோனாவில் 8-ம் இடத்திலிருந்து 2வது இடத்தை எட்டி பிடித்த தமிழகம்.. கமல்

அன்னக்கிளி

அன்னக்கிளி

முதல் படத்திலேயே காட்டாற்று வெள்ளம்போல் தெறித்துக் கொண்டு வந்து, மக்களின் ஜீவ நாடிகளில் கலந்துவிட்டார் இளையராஜா. அவரது இசையமைப்பில் அன்னக்கிளி திரைப்பாடல் முதல்முதலாக வெளியான நாள்தான் இன்று! எம்எஸ்வி, சங்கர் கணேஷ் போன்றோர் கோலோச்சிய நேரம்.. இருவருமே இசை துறையில் பலமாக இருந்தனர்.. அதனால் இசையமைப்பாளர்கள் அறிமுகம் என்பதே அரிதுதான்... அப்படியே ஒன்றிரண்டு பேர் வந்தாலும் மத்தாய்ப்பாய் தோன்றி மறைந்து போய்விடுவர்.

 உச்சத்தில் ராஜா

உச்சத்தில் ராஜா

இந்த சமயத்தில்தான் பண்ணைபுரத்து புயல், சமகால இசையமைப்பாளர்களான குமார், வேதா போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, எவராலும் தொட முடியாத உயரத்தில் போய் உட்கார்ந்து கொண்டு 2 தலைமுறைகளுக்கு மேல் இசை உலகை இன்னமும் ஆண்டு கொண்டிருக்கிறது!! இதுவரை இளையராஜாவுக்கு கிடைத்த பாராட்டுக்கள் அத்தனையும் மறைந்த தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலத்துக்குதான் போய் சேர வேண்டும்... அதுதான் நியாயமும், அடிப்படை தர்மமும் கூட!!

 பஞ்சு அருணாசலம்

பஞ்சு அருணாசலம்

இளையராஜாவின் திறமையை கண்டறிந்து அதனை தக்க சமயத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பஞ்சு அருணாசலத்துக்கே உரியது... இளையராஜா வேண்டவே வேண்டாம் என்று பலதரப்பட்ட எதிர்ப்புகள் பஞ்சு அருணாசலத்துக்கு வந்தன.. "புது பையன் நமக்கு தேவையில்லை, ஆளைப்பார்த்தால் ஒழுங்கா மியூசிக் போடற ஆளா தெரியலயே, எதுக்கு புதுமுயற்சியில இறங்கிட்டு, வேற ஆளை பார்க்கலாம்" என்று எதிர்ப்பு கணைகள் பஞ்சு அருணாசலத்தை துளைத்தெடுத்தன. ஒருகட்டத்தில், மனதை மாற்றக்கூடிய நிலைக்கும் அவரே தள்ளப்பட்டார்.

 கதறி அழுதார்

கதறி அழுதார்

கடைசியில், 'திறமையில் நம்பிக்கை' என்ற ஒன்றினில் உறுதியாக இருந்து, எதிர்ப்புகளுக்கு மத்தியில் இசையமைப்பாளராக இளையராஜாவை அன்னக்கிளியில் அறிமுகப்படுத்தினார் பஞ்சு அருணாசலம். அதற்கான நன்றியை அவருக்கு பல தருணங்களில் இளையராஜா நா தழுதழுக்க வெளிப்படுத்தியிருக்கிறார்.. முதல் நாள் ஏவிஎம்-ல் ரிக்கார்டிங் ஆரம்பம்.. "அன்னக்கிளி உன்னத்தேடுதே" என்ற பாடலை முதலில் பாட வைக்க லதா மங்கேஷ்கரைதான் முயற்சி செய்தனர்.. ஆனால் அது முடியாமல் போகவும்தான் ஜானகியை வைத்து பாட முடிவானது.. முதல் பாட்டை ஆரம்பிக்கும்போதே கரண்ட் கட்!!

 கரண்ட் கட்

கரண்ட் கட்

"நல்ல சகுனம்" என்று அங்கிருந்தவர் சிலர் கிண்டல் அடிக்க... இது இளையராஜா காதில் அப்பட்டமாக விழ... முதன்முதலாக இசையமைக்கும்போது இப்படி விளக்குகள் அணைந்துவிட்டதே என்ற வேதனை இளையராஜாவுக்கு மனம் முழுக்க வேதனை அப்பி, ஒரு ஓரமாய் போய் இடிந்து உட்கார்ந்து விட்டார். ஆனால் ஜானகிதான் இளையராஜாவை தேற்றியிருக்கிறார். "தம்பி... இதெல்லாம் சகஜம்ப்பா. கரண்ட் போறதுனால ஒன்னும் கிடையாது, சாதாரணமாக எடுத்துக் கொள்ள பார்" என்று சொல்லியிருக்கிறார். சிறிது நேரத்தில் கரண்ட் வந்த பிறகும் இளையராஜாவுக்கு அதிலிருந்து மீளவில்லை. இதனால், தான் பாடிய அன்னக்கிளி உன்ன தேடுதே பாட்டை தானே முன்னின்று ஆர்க்கெஸ்ட்ராவை ஒருங்கிணைத்தார் (Conduct) ஜானகிதான் என்பது பலரும் அறியாத உண்மை!

 பதிவாகவில்லை

பதிவாகவில்லை

அவரது மேற்பார்வையில்தான் அந்த முழு பாடல் பதிவு செய்யப்பட்டது. இதையெல்லாம் ஒரு ஓரமாகவே வாடிய முகத்துடன் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தார் இளையராஜா. தன்னை ஒருவழியாக ஆசுவாசப்படுத்தி கொண்டு, இதுவரை ரெக்கார்டிங் ஆன பாட்டை கேட்கலாம் என்று ரெக்கார்டை அழுத்தினார்.. இளையராஜா உட்பட எல்லோருமே அந்த பாட்டை கேட்க ஆர்வத்துடன் இருந்தனர்.. ஆனால், ஆச்சரியம்... ரிக்கார்டிங்கில் ஒரு சத்தமும் வரவில்லை. ரெக்கார்ட் செய்ததே அப்போது பதிவாகவில்லை என்பது தெரியவந்தது.. இப்போது இளையராஜா வெடித்து வெடித்து சத்தம் போட்டு ஸ்டுடியோவில் கதறி அழ தொடங்கிவிட்டார்.

 ஹிந்தி பாடல்கள்

ஹிந்தி பாடல்கள்

3வது முறையாகவும் ரிக்கார்டிங் செய்தது சொதப்ப.. 4வது முறை முயற்சியில்தான் பாடல் மீண்டும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது... படமும் வெளியானது... அனைத்து பாடல்களுமே பட்டைய கிளப்பியது... எம்ஜிஆர், சிவாஜி பாடல்களுடன் சேர்த்து, ஹிந்தி பாடல்களான ஆராதனா, பாபி போன்ற படங்களின் பாடல்களை மொழியும், அர்த்தமும் ஒன்றும் விளங்காமல் தமிழக மக்கள் முனகிக்கொண்டிருந்த நேரத்தில் அன்னக்கிளி மொத்தத்தையும் புரட்டி போட்டது. இதனால் வடநாட்டு இசைக்கலைஞர்களான ஆர்.டி.பர்மன், நௌஷத் அலி, லதா மங்கேஷ்கர் போன்றோரும் தமிழகத்தை திரும்பி பார்த்து அதிசயத்து புருவங்களை உயர்த்தினர் என்றால் அது அன்னக்கிளியின் பாடல்களால்தான்!!

 குடும்ப உறுப்பினர்

குடும்ப உறுப்பினர்

இந்த பாடல்களை கேட்க கேட்க, தமிழக மக்களுக்கு ஏதோ ஒரு புது உணர்வு தென்பட்டது... யாரோ ஒருத்தர் தனக்காகவே, தன் மனசுக்கு பிடிச்ச மாதிரியே மியூசிக் போட்டிருக்கிறாரே என்று ஒவ்வொருவருமே தனிப்பட்ட முறையில் உணர்ந்தனர்.. இலங்கை வானொலியில் இசை இளையராஜா என்றாலே குஷியாகிவிட்டனர்.. அப்போது பெரும்பாலான மக்களுக்கு இளையராஜா எப்படி இருப்பார் என்றே தெரியாது.. ஆனால் "இசை-இளையராஜா" என்ற பெயர் குடும்ப உறுப்பினர் போல நெருக்கத்தை தந்தது. அவரது இசை என்ன வகையானது, என்ன கருவிகள், என்ன மாடுலேஷன்களில் உள்ளன என்ற இந்த ஆராய்ச்சிக்குள் எல்லாம் மக்கள் இறங்கவில்லை.. அவர்கள் உணர்ந்ததெல்லாம் ஆழ்மனதில் ஊடுருவி ரத்த நாளங்களில் கலந்துவிட்ட ராகங்களையும், அதன் இனிமையையும்தான்.

 சுத்த சம்பா பச்சரிசி

சுத்த சம்பா பச்சரிசி

அப்போதுவரை எந்த கல்யாண வீடாக இருந்தாலும் சரி, "வாராயென் தோழி வாராயோ, மணமகளே மருமகளே வா வா" போன்ற 60'களின் பாடல்களே பிரதானமாக ஒலித்தது.. ஆனால், சுத்த சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்" என்ற பாடல் ஒவ்வொரு கிராமத்து கீத்து வீட்டையும் பொளந்து கட்டி கொண்டு எதிரொலித்தது.. வீட்டு பந்தங்களை எல்லாம் துள்ளி குதித்து ஆட்டம் போட வைத்தது. உலக்கையில் நெல் குத்தும் "உஸ் உஸ்" சத்தமும், முல்லை வெள்ளி போல அன்னமும், வெள்ளி நூலாக இடியாப்பமும், பஞ்சு பஞ்சாக பணியாரமும் என அத்தனை கிராமத்து ஐட்டங்களும் பாடல் வழியாக மூக்கை துளைத்தன.

 பெண்ணின் ஏக்கம்

பெண்ணின் ஏக்கம்

இதில் பெரும் வரவேற்பை பெற்றது "அன்னக்கிளி உன்ன தேடுதே" என்ற ஜானகியின் பாடல்தான்.. துவக்கத்தின் ஹம்மிங் கேட்டாலே அப்படியே அசையாமல் நின்று கேட்ட சில மக்களும் உண்டு.. ஒரு பெண்ணின் ஏக்கம், தவிப்பு, நினைவுகள், நீளும் தனிமை என அத்தனை பாங்கையும் கொண்டு தனித்தனியாக பிரித்து, திகட்டாத வண்ணம் அள்ளி தந்திருந்தார் ஜானகி.

மச்சானை பார்த்தீங்களா

மச்சானை பார்த்தீங்களா

அடுத்த பாடல் "லாலி லாலிலோ".. இந்த ஹம்மிங்கை ஜானகி பாட ஆரம்பிக்கும்போதே உடம்பெல்லாம் பரவசம் இழைந்தோடும். புல்லாங்குழல், தபேலாவிற்கு நடுவில் புகுந்து "மச்சானை பார்த்தீங்களா" என்ற ஒரு கேள்வியை ஜானகி கேட்டதும் கிராம மக்கள் திகைத்து விக்கித்து ரசித்தனர்.. இந்த பாடலில் மறக்கடிக்கப்பட்டு கொண்டிருந்த பறையை நுழைத்து சாதித்தார் இளையராஜா.. கிட்டத்தட்ட அது குத்து பாட்டு போலத்தான்.. ஒரு குத்து பாட்டில் பறை சத்தமா? என்று யாருமே லாஜிக் பார்க்கவில்லை.. குறிப்பாக சென்ட்டிமென்ட் பார்க்கவில்லை.. இப்படி ஒரு நவீனத்தை இசையில் அப்போதே சேர்த்தே புகுத்தினார் ராஜா!

 உப்புக் காற்று

உப்புக் காற்று

சொந்தமில்லை, பந்தமில்லை என்று பி.சுசிலாவின் சோக பாடல், அதுவரை தேக்கி வைத்திருக்கும் கண்ணீரை உடைத்து கொண்டு வெளியே வரவைத்தது.. இந்த படம் வெளியாகி ஒரு வாரம் இருக்கும்.. இளையாஜா மெரினா பீச் பக்கம் வாக்கிங் சென்றிருக்கிறார்.. அந்த சமயத்தில் உப்பு காற்றில் அன்னக்கிளி பாடல்கள் தவழ்ந்து வந்ததை கண்டு விக்கித்து கண்களில் நீர் வழிய நின்றார். ஒரு வாரம் இல்லாத சந்தோஷத்தை அந்த கணம் உணர்ந்தார். பொதுவாக நம் தமிழ் மக்கள், காதல், இனிமை, ஏக்கம், தவிப்பு, தாய்மை, இயற்கை, சோகம், பக்தி என போன்ற உணர்வுகளில் பின்னிப் பிணைந்தவர்கள்... அதனால்தானோ என்னவோ தங்களது வாழ்வில், ஏதாவது ஒரு உணர்வுடன் இளையராஜாவின் ஏதாவது ஒரு பாடலுடன் தொடர்புடையதாகவே பந்தம் நீடித்து வருகிறது.

 வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை

நம் மாநிலத்தில் எவ்வளவோ பிரிவுகளும், சாதிகளும், கிடந்தாலும், இளையராஜா என்று வந்துவிட்டால் அனைத்துமே சமநிலையாகி விடுகிறது! அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் இணைப்பு புள்ளிதான் இளையராஜா.. இன்னும் எளிமையாக சொல்லப்போனால் "வேற்றுமையில் ஒற்றுமை"யை இளையராஜா பாட்டின்மூலம் காணலாம்-உணரலாம்... அதனால்தான் அன்னக்கிளி பட பாடல் பதிவாகி இன்றோடு 44 வருடங்கள் கடந்தும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எத்தனையோ தருணங்களில், எத்தனையோ மனித மனங்களின் காயங்களுக்கு இளையராஜாவின் பாடல்கள் மருந்தாகின... மருந்தாகி கொண்டிருக்கின்றன.. இனியும் இனிய மருந்தாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

English summary
44 years of annakili relesae and ilayaraja debut
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X