சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5ஜி ஏலத்தில் ரூ3 லட்சம் கோடி இழப்பு- பாஜக முகத்திரையை கிழித்து எறிய போராடுவோம்: சீமான்

Google Oneindia Tamil News

சென்னை : ரூ3 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய 5ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக, மத்திய பாஜக அரசின் முகத்திரையைக் கிழித்தெறிய ஜனநாயகப் பேராற்றல்கள், ஒரே அணியில் திரண்டு போராட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

அதிவேகத்தொலைத்தொடர்பு சேவைக்கான ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக கடந்த சூலை 26 முதல் ஆகஸ்ட் 1 வரையில் நடைபெற்ற ஏலத்தில் அடிப்படை மதிப்பீட்டுத் தொகையைவிடப் பல மடங்கு குறைவான தொகையே பெறப்பட்டிருப்பது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளையும், கொதிநிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

5ஜி அலைக்கற்றை சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்? ராஜ்யசபாவில் வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில் 5ஜி அலைக்கற்றை சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்? ராஜ்யசபாவில் வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்

 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு

5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு

4.3 இலட்சம் கோடி ரூபாய் அடிப்படை மதிப்பீட்டுத்தொகையாக அறிவிக்கப்பட்ட நிலையில், 40 சுற்றுகளாக ஏழு நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் இதுவரை 71 விழுக்காடு விற்கப்பட்டுவிட்டபோதிலும் வெறும் 1 இலட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்திருப்பது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரும் ஊழலும், முறைகேடும் நடந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.

 ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றைத் தொலைத்தொடர்புச் சேவையானது முந்தைய நான்காம் தலைமுறைத் தொலைத்தொடர்பைவிட 20 மடங்குவரை அதிவேகமாக இயங்குமெனக் கணிக்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஐந்தாம் தலைமுறை இணையச்சேவை தொடங்குமெனக் கூறப்பட்ட நிலையில், அதற்கான ஏலம் தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது.

 ஏலத்தில் கௌதம் அதானி நிறுவனம்

ஏலத்தில் கௌதம் அதானி நிறுவனம்

அதிகத்தொகைக்கு ஏலமெடுக்கும் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படுமெனும் முறையின் அடிப்படையில், தனியார் நிறுவனங்களான ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி குழுமம் என நான்கு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று முக்கால்வாசி அலைக்கற்றையை ஏலமெடுத்திருக்கின்றன. இதில் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் பங்கேற்காததும், தொலைத்தொடர்பில் எவ்வித முன்னனுபவமும் இல்லாத நிலையிலும் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கௌதம் அதானிக்குச் சொந்தமான ஏ.டி.என்.எல். நிறுவனம் பங்கேற்று ஏலமெடுத்திருப்பதும் மிகப்பெரும் மோசடித்தனமாகும். மேலும், தனியார் நிறுவனங்கள், ஏலத்தொகையை 20 ஆண்டுகளுக்குத் தவணை முறையில் செலுத்திக்கொள்ளலாம் என சலுகையளித்திருப்பதன் மூலம், அலைக்கற்றை ஒதுக்கீட்டை பாஜக அரசு யாருக்காக நடத்துகிறது? என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிந்துகொள்ளலாம்.

 தனியார் நிறுவனங்களுக்கே முக்கியத்துவம்

தனியார் நிறுவனங்களுக்கே முக்கியத்துவம்

மக்களால் நிர்மாணிக்கப்பட்ட ஓர் அரசுக்கு சேவை மட்டும்தான் இலக்காக இருக்க முடியும். ஆனால், தனிப்பெரும் முதலாளிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இலாபமீட்டுதல் மட்டும்தான் நோக்கமாக இருக்கும். முந்தைய பாஜக ஆட்சியில், அரசுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்க தனியொரு அமைச்சகத்தை வைத்திருந்தார் அன்றைய பிரதமர் வாஜ்பாய். இன்றைய பிரதமர் நரேந்திர மோடியோ, அதனையே தனது முழுநேரப்பணியாகக் கொண்டு, தனியார்மயத்தைத் தேசியமயமாக்கி வருகிறார்.

 அம்பானி, அதனானிக்கு முன்னுரிமை

அம்பானி, அதனானிக்கு முன்னுரிமை

அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லை வளர்த்தெடுக்க அக்கறைகாட்டாது, அம்பானியின் நிறுவனத்தையும், அதானியின் குழுமத்தையும் தாங்கிப் பிடிப்பதேன் பிரதமரே? இதுதான் நீங்கள் சொல்கிற வளர்ச்சியா? பி.எஸ்.என்.எல்.க்கு அலைக்கற்றையைப் பெறுவதற்கானக் கட்டமைப்பு இல்லையெனும் பொருத்தமற்ற வாதத்தை ஏற்பதாக வைத்துக்கொண்டாலும், அதே கேள்வியை அதானி குழுமத்துக்குப் பொருத்திப் பார்ப்பார்களா நாட்டையாளும் ஆட்சியாளர்கள்? அதானியின் ஏ.டி.என்.எல். நிறுவனத்துக்கு எந்தக் கட்டமைப்பு இருக்கிறது?

தனியார்மயமாக்கல்

தனியார்மயமாக்கல்

பொது மக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, நாட்டிற்கு உயிரோட்டமாகத் திகழும் அதிமுக்கியத்துறைகளின் இயக்கத்திற்கும், பயன்பாட்டுக்குமான ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையை மொத்தமாகத் தனியார்வசம் தள்ளிவிடுவதுதான் தேசப்பக்தியா நியாயமார்களே? மக்களின் நிதிப்பங்களிப்பான வரி வருவாயைத் தனியாருக்கு மானியமாகவும், சலுகையாகவும், கடனாகவும் அளித்துவிட்டு, இலட்சம் கோடி வாராக்கடன்களையும் சத்தமின்றி தள்ளுபடி செய்துவிட்டு, நாட்டின் சனநாயகத் தூண்களான பொதுத்துறை நிறுவனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியார்மயமாக்கிவிட்டு, இந்தியக்கொடியை சுதந்திர நாளில் வீட்டில் ஏற்ற மக்களைக்கோருவதன் மூலம் நாடும், நாட்டு மக்களும் உயர்ந்து விடுவார்களா பெருமக்களே? என்ன ஏமாற்று நாடகம் இது?

 நாட்டு மக்கள் உணரவேண்டும்

நாட்டு மக்கள் உணரவேண்டும்

நாட்டு மக்களை கைதட்டச்சொல்லியும், வீட்டுவாசலில் விளக்கேற்றச்சொல்லியும் வலியுறுத்தி, கொரோனா நோய்த்தொற்றை முற்றாக ஒழித்த பிரதமர் மோடியின் சிந்தனையில் விளைந்த மற்றுமொரு சூத்திரமா இது? பொருளாதாரத்தை மீட்டெடுக்க மோடி தொடுக்கும் மற்றொரு துல்லியத்தாக்குதலா இது? கேலிக்கூத்து! தனிப்பெரு முதலாளிகளை ஊட்டி வளர்த்து, நாட்டின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களை திவாலாக்கி, நாட்டு மக்களை ஓட்டாண்டிகளாக ஆக்குவதுதான் பிரதமர் மோடி உருவாக்க எத்தனிக்கிற புதிய இந்தியா என்பதை இனியாவது நாட்டு மக்கள் உணர்ந்து தெளிய வேண்டும்.

 அம்பானியும், அதானியும் இரு கண்கள்

அம்பானியும், அதானியும் இரு கண்கள்

பிரான்சு நாட்டிடமிருந்து ரபேல் போர் விமானங்களை சந்தை விலையைவிட அதிகப்படியான விலைக்கு வாங்கியதோடு, விமானத்துறையில் எவ்வித முன்அனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை, விமானங்களைத் தயாரிக்கும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராக இணைத்தது பாஜக ஆரசு. இன்றைக்கு அலைக்கற்றை ஏலத்தில் அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லைச் சேர்க்காது, அதானியின் நிறுவனத்தைச் சேர்த்துக்கொண்டதுபோல, அன்றைக்கு ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தைச் சேர்க்காது, அம்பானியின் ரிலையன்சை சேர்த்துக்கொண்டது பாஜக அரசு. இதில் வியப்பென்ன இருக்கிறது? அம்பானியும், அதானியும்தானே பிரதமர் மோடியின் இரு கண்கள். அவர்களுக்குச் செய்யாது யாருக்குச் செய்வது?

 நாட்டுக்குப் பெரும் பொருளாதார இழப்பு

நாட்டுக்குப் பெரும் பொருளாதார இழப்பு

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில் அதிகபட்சமாக 6 இலட்சம் கோடி ரூபாய் வரை கிடைக்குமென ஒன்றிய அரசின் தரப்பிலேயே அனுமானிக்கப்பட்ட நிலையில், 71 விழுக்காடு அலைக்கற்றை விற்கப்பட்டும், 1 இலட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாயே கிடைத்திருக்கிறதெனும்போது, ஒப்பீட்டளவில் இது மிக மிகக் குறைவான தொகையேயாகும். அடிமாட்டு விலைக்கு அலைக்கற்றையை விற்று, அதனையும் தவணை முறையில் செலுத்தத் தனிப்பெரு முதலாளிகளுக்கு வாய்ப்பேற்படுத்தித் தந்திருப்பதன் மூலம் 3 இலட்சம் கோடிக்கு மேல் நாட்டுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது.

 பாஜக அரசு பச்சைத்துரோகம்

பாஜக அரசு பச்சைத்துரோகம்

நாட்டின் எல்லையைக் காக்கும் இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதைக்கூட நிறுத்தி, பணத்தை மிச்சம்பிடிக்க, 'அக்னி பாத்' திட்டம் கொண்டுவரப்படும் இழிநிலை வாய்க்கப்பெற்ற இந்நாட்டில், பல இலட்சம் கோடி ரூபாயை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இலகுவதாக இழக்கச் செய்வதென்பது ஒட்டுமொத்த நாட்டுக்கே பாஜக அரசு செய்யும் பச்சைத்துரோகமாகும்.

 பாஜக அரசுக்கு எதிராக அணி திரளுவோம்

பாஜக அரசுக்கு எதிராக அணி திரளுவோம்

ஆகவே, தனிப்பெரு முதலாளிகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கத் தரகுவேலை செய்யும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசின் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனிப்பெரு முதலாளிகளுக்குச் சாதகமாக நிகழ்ந்தேறியுள்ள 3 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான மிகப்பெரும் முறைகேட்டை நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துரைத்து, பாஜக ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய அணிதிரள வேண்டுமென சனநாயகப் பேராற்றல்களுக்கும், இளைஞர் பெருமக்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக அறைகூவல் விடுப்பதாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Tamilar Katchi Coordinator Seeman has called for everyone to unite against the central BJP government regarding the misuse of 5G spectrum.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X