நாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்
சென்னை: நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 71ஆவது குடியரசு தினம் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்பார்.

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள காந்தி சிலை முன் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். இதையடுத்து, சென்னையில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுமார் 15 ஆயிரம் காவலர்கள் சென்னையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் தற்போது பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், மாநிலத்திலுள்ள முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையிலும் ஈடுபட்டனர். இந்த ஒத்திகையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் நடைமேடைகளில், தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும், மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலம் முழுதும் உள்ள ரயில் நிலையங்களிலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனைக்கு பின்ரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். விருதுநகர் ரயில்வே நிலையத்தில் பாதுகாப்புப் பணிக்காக 50க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டு உள்ளார்கள்