சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாட்டிய நாட்டுக் கோழி.. சுடச் சுட ரத்தப் பொரியல்.. ஆஹாஹா அந்தக் கால கிறிஸ்துமஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கிறிஸ்துமஸ் நாளிலே நினைவுகள் எங்கோ என்னை இழுக்கிறது . இது ஒரு 80ஸ், 86 கதை . 96 மாதிரி இல்லை இது வேற மாதிரி.. அப்போதெல்லாம் 80 களிலும் 90களிலும் எங்க ஊரு கிறிஸ்துமஸ் எப்படி இருந்தது தெரியுமா. இப்போது மாதிரி நிறைய ஆடை எல்லாம் கிடைக்காது. ஒரு கிறிஸ்துமஸ் என்றால் ஒரு புத்தாடை தான். இப்போ மாதிரி காலை போடுவதற்கு என்றும் மாலை போடுவதற்கு என்றும் வகை வகையாய் அப்பாக்கள் ஆடைகள் எடுத்து தருவதில்லை. அப்பா அப்படி எடுத்துத்தர நினைப்பதுமில்லை.

நினைத்தால் கூட எடுத்து தர முடியாது. ஏன்னா அப்போதைய அப்பாக்களுக்கு பிள்ளைகள் நிறையா.. அடுக்கடுக்காய் வரிசையாய் பெரிய பையன் சின்ன பையன், இளையவன், கடைக்குட்டி, நடுவில் உள்ளவன், மூத்த அக்கா, சின்ன அக்கா என்று பட்டியல் மாதிரி பிள்ளைகள் இருந்தார்களே. ஒரு வீட்டில் வரிசையாய் ஐந்து பேர் என்றால் அந்த அப்பா உருட்டி பிரட்டி தேறின ஒரு தொகையை ஒரு வழியா தயார் பண்ணி அம்மாவிடம் ஒரு கட்டை திணிப்பார். அந்தக் கட்டில் எவ்வளவு ரூபாய் இருக்குமோ தெரியாது.

அம்மாவின் சீலையை பிடித்துக் கொண்டு ஆசை ஆசையாய் கடைத்தெருவுக்கு கிளம்புவோம். பொம்மைகள் எல்லாம் வெகு அழகாய் இருக்கும் .கடைவாசலில் இருக்கும் பொம்மைகளின் ஆடைகள் பக்கம் சென்று எவ்வளவு என்று எட்டிப் பார்த்தால் வாய் தானாக பிளக்கும், அப்படியே தலை சுத்திருச்சுன்னு ரஜினி மாதிரி மாறி விடுவோம்.

அடம் பிடித்தல்

அடம் பிடித்தல்

அப்போதெல்லாம் சில ஆடைகள் ரொம்ப நல்லா இருந்தும் இது உனக்கு நல்லா இருக்காது என்று அம்மா சொல்லும் காரணத்திற்கு அந்த ஆடையின் அதிக விலை என்று தெரியாமல் அடம் பிடித்து நின்ற காலங்கள் உண்டு. அடம் பிடித்தல் என்றால் இந்தகால அடம் மாதிரி இல்லை . சரியாக அடம் பிடிக்க தெரியாது என்பதை விட அடம்பிடித்தால் கூட வேலைக்கு ஆகாது என்ற புரிதல் இருந்தது குழந்தைகளுக்கும். ஒரு வயதுக்கு பிறகு எல்லாம் கொஞ்சம் புரிபட ஆரம்பித்தபின் நாங்களே சில புரிதலுக்குப் பின் அந்த 400, 500 விலையில் உள்ள ஆடைகள் என்று பார்த்து பார்த்து வாங்க பக்குவப்பட்டு விட்டோம். இருந்தாலும் 1000 ரூபாய்க்கு மேல் உள்ள ஆடைகளை பார்க்க கொஞ்சம் ஏக்கமாகவும் இருக்கும். அப்புறம் கிறிஸ்துமஸ்க்கு ஓன்று புது வருஷத்துக்கு ஓன்று என்று இரண்டுக்கும் ஒவ்வொரு ஆடையையை வாங்கிய பின் வரும் பெரு மூச்சு சுவை இருக்கிறதே அற்புதம்.

ஓசி மணி பர்ஸ்

அப்படியே கை நிறைய துணி பை அப்புறம் ஓசியில் கிடைத்த புது வருட காலண்டர் ஓசி மணி பர்ஸ் என்று ஜோராக முடிந்திருக்கும். கடை கடையாய் ஏறி இறங்கிய அலுப்புத் தீர ஒரு முழு சாப்பாடே சாப்பிடலாம். .ஆனால் கடைத்தெருவுக்கு நடுவில் இருக்கும் பழ சர்பத் கடைக்கு போய் பழ சர்பத் வாங்கி வரிசையாய் குடிப்போம். கொஞ்சம் ஐஸ்கட்டிகளை போட்டு அப்படியே கொஞ்சம் பழம் எல்லாம் அவர் நம் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்து அதை ஒரு அரை அரைத்து கொஞ்சமா சர்பத் கலந்து அந்த சிவப்பு கலரோடு கப்பை நீட்டும் போது அந்த சர்பத்துக்கான காத்திருப்பு சுகம்.

அந்த நாள் அந்த வயதில்

அந்த நாள் அந்த வயதில்

வாங்கிய இரண்டு ஆடையில் எது ரொம்ப நல்லா இருக்கு அது கிறிஸ்துமஸ் க்கு என்று முடிவு பண்ணியபடி பேருந்து பயணம் தொடரும். பள்ளி திறந்ததும் முதல் நாள் போடும் கிறிஸ்துமஸ் ஆடை அந்த நாள் அந்த வயதில் அவ்வளவு பெரிதாய் தோன்றும் . புத்தாடை போட்டுகொண்டு எங்க வீட்டில் அந்தப் பலகாரம் அது பண்ணினாங்க இது பண்ணினாங்க அதிரசம் அச்சுமுறுக்கு எங்க மாமா வீட்டுக்கு போனோம் என்று அடுக்கி கொண்டிருப்போம்.

ஜங்ஷன்ல இறக்கியாச்சு

ஜங்ஷன்ல இறக்கியாச்சு

கிறிஸ்துமஸ் 25 என்றாலும் 24 லே களை கட்ட தொடங்குகிறது. சாயந்திரமே வந்து அப்பா ஜங்ஷன்ல இறக்கியாச்சு என்று சிரித்தபடி தகவல் சொல்லுவார். என்ன ன்னு கேட்கறீங்களா. எல்லாம் ஆடு மாடு கிடா கோழி தான். எல்லாம் தின்பதற்கு வயிறு தயாராகி இருக்கும்.(சில வகை கறி பிடிக்காதவர்களும் கறியே சாப்பிடாத சைவக்காரர்களும் மன்னியுங்கள் நடந்ததை பதிவு பண்ணுகிறேன்) இதற்காகவே வளர்க்கப்பட்டு அன்று இரவில் வெட்டப்படும் பன்றிக்கு தான் அந்த கலுங்கு ஜுங்க்ஷன்ல ரொம்ப டிமாண்ட் அதிகம் .அதிலும் கருப்பை விட வெள்ளைப் பன்றி வாங்கி வாங்க என்று வீட்டுப் பெண்கள் சொல்லி விடுவாங்க. கருப்பும் சிவப்பிலும் என்ன சுவை வித்தியாசமோ எனக்கு தெரியாது. வீட்டுக்காரர் வாங்கி வந்ததும் வெள்ளை தான் என்றதும் வெள்ளைப்பல் தெரிய சிரிப்பார்கள்.

நாட்டுக்கோழி தான்

நாட்டுக்கோழி தான்

அந்த ஜங்ஷன் அந்த பெரிய ஆலமரம் அந்த காலைப் பொழுதில் காற்று கொஞ்சம் அதிகமாகவே வீசும் ஏன்னா அன்று அம்புட்டு ஜனங்க அங்கும் இங்குமா சுத்திகிட்டு இருப்பாங்க. அப்புறம் இப்போ மாதிரி அப்போ பிராய்லர் கோழி இருந்ததில்லை. நாட்டுக்கோழி தான் . அதுவும் கடையில் சிலர்க்கு. சிலருக்கு வீட்டிலே வளர்க்கப்படும் கோழி . அதிலும் சேவல் என்றால் ஒரே கொண்டாட்டம் தான். இப்போது மாதிரி சிக்கனை வெட்டி ஒரு பையில் துண்டு துண்டா வாங்கி வருவதில்லை . அப்படியே முழு கோழி அது பக் பக் என்று ஒரு மாதிரி கத்தி கொண்டு இருக்கும். அதற்கு தெரியுமோ என்னவோ உயிர் போகப் போவது. இதை எழுதும்போது கோழி மேல வந்த இரக்கம் அப்போது வரவில்லை சத்தியமா.

வாளி தண்ணீரில் தலையை அமுக்கி முடிக்க

வாளி தண்ணீரில் தலையை அமுக்கி முடிக்க

அந்த கோழியை எப்படி கொல்வாங்க என்று இப்போ கட்டாயம் எழுத வேண்டுமா என்று யோசித்தாலும் கூட எழுதாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அந்த வயதில் அது ஒரு பெரிய ப்ராஜெக்ட் மாதிரி.ப்ராஜெக்ட் ஹெட் யாரு என்றால் வீட்டிலே தலை மகன் தான். சின்ன வாண்டுங்க எல்லாம் பின்னாடி நிக்கிற அடிமைகள் மாதிரி . முதலில் தலைமகன் பக்னு சத்தம் போடுற கோழியை மெல்ல பிடித்து வைத்து ஏற்கனவே தயாரா வைத்திருக்கிற ஒரு வாளி தண்ணீரில் தலையை அமுக்கி முடிக்க கோழியின் சத்தம் அடங்கி இருக்கும். அப்புறம் கோழியை வெந்நீரில் போட்டு எடுத்து எல்லோரும் சுற்றி உக்காருவோம். இப்போ சின்ன வாண்டுகளுக்கும் வேலை வந்திருக்கும். ஒவ்வொரு முடியாய் புடுங்க வேண்டிய தான் . அந்த நேரத்தில உருவிய முடி கோழி மேல மறுபடி ஒட்டாம இருக்க கோழியை பின்புறத்தில் தொங்கும் கம்பில் கட்டி தொங்கவிட்டு தான் வேலை செய்வாங்க. எல்லா முடியையும் எடுத்து முடிச்சி அப்புறமா இருக்கும் சின்ன சின்ன முடியெல்லாம் எடுக்க தீயில் வாட்டுவாங்க. ரொம்ப கவனமா செய்ய வேணும். கோழி இப்போ அம்மாகிட்ட போய் விடும்.

வாட்டின கோழி இப்போ ரெடி

வாட்டின கோழி இப்போ ரெடி

வாட்டின கோழி இப்போ ரெடி. இப்போ கடையில் கிடைக்கிற மாதிரி தோல் உரிச்சதா ஞாபகம் இல்லை. அப்புறம் கோழி வெட்ட இப்போது அக்கா கையில் போகும். வெட்டுற ஆளு கோழியை பிடிக்க முடியாது. அதை ஜோரா பிடித்து கொள்ள ஒரு ஆளு. அப்புறம் பக்குவமாய் வெட்ட ஒரு ஆளு.கை இரண்டு காலு அப்புறமா கழுத்து என்று வெட்ட வெட்ட எலும்பும் சதையுமா வகைப்படுத்துவர். அதிலும் முக்கியமா பச்சை கலரில் இருக்கும் பித்தப்பை வெட்டுப்பட்ட குழம்பு கசத்துப் போகுமாம். அதனால அந்த இடம் வரும்போது எல்லாம் பார்த்து பார்த்து என்று கோழி வெட்டி முடிக்கும்போது ஒரு பெரிய படம் பார்த்து முடிச்ச மாதிரி தான். இதற்கிடையில் அப்பா ஆட்டு கிடா வாங்க போயிருப்பார். அப்போதெல்லாம் இப்போ மாதிரி அண்ணன் ஒரு கிலோ என்று ஆடு வாங்குவதை விட சொந்தக்காரன் சொக்காரன் மாமா சித்தப்பா பெரியப்பா என்று எல்லாக் குடும்பங்களும் பங்கு போட்டு ஒரு ஆட்டை பிடிப்பார்கள். அதை சந்தையில் வாங்கி வருவாங்க. ஆடு வீட்டில் வெட்டியதில்லை. அதை வெட்ட தெரியாதோ என்னவோ சந்தைக் கடையிலே வெட்டி பங்குபோட்டு எல்லா மீசைக்கார்களும் (நாகர்கோவில் மீசைலே) வருவார்கள் ஜோராய்.

சுடச் சுடச் ரத்தம் வதக்கி

சுடச் சுடச் ரத்தம் வதக்கி

ஒரு பையில் ஆட்டு இறைச்சி, இன்னொரு பையில் ஆட்டு ரத்தம். இந்த ஆட்டில் தான் என்ன என்னவெல்லாம் செய்கிறார்கள். அப்பா குளிச்சிட்டு வருவார். வந்ததும் நாளிதழ் படிக்க கையில் எடுக்கும் முன்னாலே வறுவல் ரெடியா என்று குரல் கொடுக்க அங்கே சமையல் அறையில் அம்மாவின் கை வேகம் கூடும். சுடச் சுடச் பச்சைமிளகாய் வெங்காயம் போட்டு ரத்தம் வதக்கி இப்போ அது அப்படியே முட்ட வறுவல் மாதிரி அப்படியே சின்ன சின்னதாய் இருக்கும் பாருங்க.அதை எல்லாம் அப்போது கின்னத்தில் சாப்பிட்டதில்லை. அவ்வளவு சூடாய் இருக்கும் ஆளுக்கு ஒரு தட்டு பரப்பி வைப்பார்கள் அது தான் முதல் சாப்பாடு அப்பாக்கு. எல்லார் தட்டும் சீக்கிரம் காலி ஆகி இருக்கும். அப்புறமா குடல் வறுவல் , கோழி குழம்பு, ஆட்டுக்கறி அந்தக் கறி ,இந்தக் கறி என்று எல்லாக் கறியையும் சமைத்து முடிக்க மணி ஒண்ணுக்கு மேலாகும்.இப்போதேய பெண்கள் மாதிரி இத்தனை சமைக்கணுமா என்று அந்தக் காலத்து அம்மாக்கள் கேட்பதேயில்லை. எல்லோரும் வயிறு நிரம்ப சாப்பிட்டு முடித்து ராத்திரி கோவில் போன அசதியில் மதியம் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழும்ப சாயந்திரம் ஆகி இருக்கும். அப்புறம் கொஞ்சம் வெடி வெடித்து கம்பி மத்தாப்பு , சங்கு சக்கரம் ,புஸ்வானம் விட இரவுக்காக காத்திருந்து மொட்டை மாடி போய் எல்லாம் விட்டு தீர்த்து அழகாய் முடியும் கிறிஸ்துமஸ்.

சந்தோசப்படுத்தறது தான் கிறிஸ்துமஸ்

சந்தோசப்படுத்தறது தான் கிறிஸ்துமஸ்

வயிறு நிறைய சாப்பிட்டு தூங்கி வெடி வெடித்து கோவில் போய் மட்டும் முடிவதில்லை அப்போதைய கிறிஸ்துமஸ் எல்லாம். அந்த காலத்தில் நமக்கு ஆடை எடுப்பதோடு முடிவதில்லை. வீட்டுக்கு வரும் சலமைத் தொழிலாளிக்கு ஒரு வேட்டி சட்டை, பள்ளி ஆயாவுக்கு ஒரு சேலை , கோவில் வாசலில் இருப்பவர்களுக்கு துண்டு என்று இல்லாதோருக்கு துணி எடுத்து கிறிஸ்துமஸ் படி என்று வீட்டிலுள்ள தேங்காய் அரிசி வைத்து அப்பா கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷத்துக்கு அர்த்தம் புரியாத வயதிலும் அடுத்தவங்களை சந்தோசப்படுத்தறது தான் கிறிஸ்துமஸ் சொல்லாமல் சொல்லித் தந்த 80ஸ் கிறிஸ்துமஸ் காலம் அது.

- Inkpena சஹாயா

English summary
Christmas is always a memorable one to everyone, that too in our kids stage we all celebrated the festival with difference, here is a Nostalgia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X