சென்னை உட்பட 9 மாவட்டங்கள்! கொரோனா பரவல் ரொம்பவே மோசம்.. லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு சான்ஸ்?
சென்னை: தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டது. அப்போது கேஸ்கள் மிக வேகமாக அதிகரித்தாலும் கூட, தீவிர பாதிப்பு குறைவாகவே இருந்தது.
டெல்டாவை போல மூச்சுத் திணறல், ஆக்சிஜன் தேவை போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படவில்லை. மேலும், கொரோனா பாதிப்பும் விரைவாகக் கட்டுக்குள் வந்தது.
மீண்டும் ஷிப்ட் முறையில் வகுப்புகள்? - கொரோனா பரவல் தீவிரமடைவதால் பள்ளிகள் அவசர ஆலோசனை!

ஓமிக்ரான்
ஓமிக்ரான் கொரோனாவுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் கூட மெல்ல முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து மக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதால் பொருளாதார நடவடிக்கைகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது.

அதிகரிப்பு
இந்தச் சூழலில் சில மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர், தற்போது கொரோனா பாதிப்பு உலகில் பல நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சுமார் 110 நாடுகளில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நாட்டில் நேற்று 13,086 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்தனர். அதேபோல இப்போது ஆக்டிவ் கேஸ்களும் 1,14,475ஆக உள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டிலும் கூட கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாநிலத்தில் 2654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 15,616ஆக அதிகரித்து உள்ளது. நல்வாய்ப்பாக மாநிலத்தில் கொரோனா உயிரிழப்புகள் எதுவும் இல்லை. வரும் நாட்களில் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காரணம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவ BA4, BA5 வகை ஓமிக்ரான் கொரோனாவே முக்கிய காரணமாக இருக்கும் என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சரும் கூறி இருந்தார். இதற்கிடையே விரைவில் பண்டிகை காலம் தொடங்க நிலையில், கொரோனா அதிகரிப்பதால் மருத்துவ வசதி, மருந்துகள் இருப்பு ஆகியவற்றை தயாராக வைத்து இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதி இருந்தார்.

மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
மாநிலத்தில் வழக்கம் போல தலைநகர் சென்னையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1066 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 375 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி கேஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட பாசிட்டிவ் விகிதம் சற்று அச்சமூட்டும் வகையிலேயே உள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
தமிழ்நாட்டில் இப்போது பாசிட்டிவ் விகிதம் 8%ஆக உள்ளது. அதிகபட்சமாக விருதுநகரில் பாசிட்டிவ் விகிதம் 14.9ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து நெல்லையில் 13.4, செங்கல்பட்டில் 12.8, சென்னையில் 12ஆக பாசிட்டிவ் விகிதம் உள்ளது. இதைத் தவிரக் கோவை (11.4), குமரி (10.5), மதுரை (10.4) ரானிப்பேட்டே (11.6) திருவள்ளூர் (11.5) மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 10% தாண்டி உள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பரிசோதனையில் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறதோ அதுதான், பாசிட்டிவ் விகிதம் ஆகும்.

ஏன் முக்கியம்
பாசிட்டிவ் விகிதம் ஏன் முக்கியம் என்றால் மத்திய அரசு அதை பொறுத்தே கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்தாலும் கூட 40 சதவீதத்திற்கும் அதிகமாக மருத்துவ படுக்கை நிரம்பினாலோ பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் மட்டுமே கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசு அறிவுறுத்தல் உள்ளது.

கட்டுப்பாடுகள் வருமா
இப்போது பல மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 10 சதவிகிதத்தைத் தாண்டி உள்ள நிலையில், பண்டிகை காலமும் விரைவில் தொடங்க உள்ளதால் வரும் நாட்கள் மிகவும் முக்கியம் ஆகும். இப்போது பாசிட்டிவ் விகிதம் அதிகமாக இருக்க டெஸ்டிங் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். டெஸ்டிங் அதிகப்படுத்தப்பட்டால் துல்லியமாக வைரஸ் பாதிப்பு எப்படி உள்ளது என்பதை நமக்குத் தெரியும். அதேநேரம் கொரோனா பரவல் கையை மீறிச் செல்லும் அளவுக்கு இருப்பதாகத் தமிழக அரசு கருதினால் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.