உஷார்.. டெல்டா + ஓமைக்ரான்.. இரண்டும் கலந்த கலவை! தமிழ்நாட்டில் 90 பேருக்கு பாதிப்பு.. அறிகுறி என்ன?
சென்னை: கொரோனா மாதிரிகளான டெல்டாவும் ஓமைக்ரானும் சேர்ந்து உருவான புதிய மாதிரியான டெல்டாக்ரான் வைரஸால் தமிழ்நாட்டில் 90 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஓமைக்ரான் பரவலின் வேகம் இந்தியாவில் குறைந்த நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் டெல்டாக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இந்தியாவில் மட்டும் 568 பேருக்கு டெல்டாகிரான் மாதிரி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உல்லாச வீடியோவை காட்டி.. 6 மாதங்களாக 22 வயது பெண் பலாத்காரம்.. திமுக நிர்வாகிகள் உள்பட 8 பேர் கைது
இந்தியாவிலேயே டெல்டாகிரானால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கர்நாடகாதான். அங்கு மட்டும் 221 பேருக்கு டெல்டாகிரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 90 பேருக்கு தொற்று உறுதி
டெல்டாகிரான் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் கர்நாடகாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழ்நாடு. இங்கு இதுவரை 90 பேரிடம் டெல்டாகிரான் மாதிரி தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மகாராஷ்டிராவில் 66 பேருக்கும் குஜராத்தில் 33 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 32 பேருக்கும், தெலுங்கானாவில் 25 பேருக்கும், டெல்லியில் 20 பேருக்கும் டெல்டாகிரான் உறுதியாகி உள்ளது.

என்ன அறிகுறி?
டெல்டாகிரான் மாதிரி கொரோனா வைரஸ் கணித்ததைபோலவே அதிதீவிர வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் பிரிட்டன் மருத்துவ அறிஞர்கள், அதிக உடல் வெப்பத்துடன் கடுமையான காய்ச்சல் இருக்கும் எனவும், சாதாரணமாக தொடுவதன் மூலமே உடல் சூட்டை உணர முடியும் என தெரிவித்துள்ளனர்.

கடுமையான இருமல்
அதுபோல் இதுவரை வந்த கொரோனா மாதிரிகளை விட இது அதிக இருமலை ஏற்படுத்தும் என்றும், ஒரு மணி நேரத்துக்கும் மேல் தொடர் இருமல், ஒரு நாளைக்கு மூன்று முறை இதுபோல் நடக்கும் எனவும் கூறியுள்ளனர். சுவைக்கும் திறன் மற்றும் நுகரும் திறன் செயலிழக்கவோ அல்லது மாற்றமடையவோ செய்யும் என மருத்துவ அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.

டெல்டாகிரான் கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பிரான்ஸை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரிடம் இருந்து பெறப்பட்ட சளி மாதிரியை ஆய்வு செய்த பாரிஸில் உள்ள பாடெர் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள், அதன் மரபணு டெல்டாவை ஒத்து இருந்ததையும், வெளித்தோற்றம் ஓமைக்ரான் போல் இருந்ததையும் கண்டுபிடித்தனர். ஒரே பகுதியில் ஒரே காலக்கட்டத்தில் இருவேறு மாதிரிகள் பரவும்போது இதுபோல் இணைந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் பிலிப் கால்சன். இதேபோன்று மேலும் 2 இணைவு கொரோனா வைரஸ் மாதிரிகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சித் தகவலையும் அவர் கூறி இருக்கிறார்.