ஜூலை 11..பொதுச்செயலாளர்! அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பறந்த கடிதம்! சொல்லியடிக்கும் எடப்பாடி!
சென்னை : ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்குவது மற்றும் கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய விவாதிக்க வேண்டும் என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார் கட்சியின் வருங்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்பதாக சொல்லப்படும் எடப்பாடி பழனிச்சாமி.
ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் பொதுக்குழுவில் கலந்து கொள்ள உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பும் பணியானது நடைபெற்று வருகிறது.
விக்ரம் வெற்றிக்களிப்பில் கமல்.. “அதை” வேற நியாபகப்படுத்திய வானதி! விவாதமான வாழ்த்து

அதிமுக பொதுக்குழு
வானகரத்தில் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது இந்நிலையில் அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக உறுப்பினர்களுக்கு மூன்று பக்க கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது.

மூன்று பக்க கடிதம்
வரும் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடுவதாக அக்கட்சித் தலைமை கழகத்திலிருந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மூன்று பக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்," கழகப் பொதுக்குழு உறுப்பினர்களில் , ஐந்தில் ஒரு பகுதி ( 1/5 ) எண்ணிக்கையினர் , கழகப் பொதுக்குழு கூட்டத்தை , கழக சட்ட திட்ட விதி 7 ன்படி உடனடியாகக் கூட்டுமாறு , 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் விண்ணப்பித்ததின் அடிப்படையில் இந்தப் பொதுக்குழுவானது கூட்டப்படுகிறது .

பொறுண்மை விபரங்கள்
இந்தப் பொதுக்குழுவில் தீர்மானிக்க வேண்டி பொறுண்மை விபரங்களை 2432 கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். அதன்படி , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுக் கூட்டம் 11.07.2022 - திங்கட் கிழமை காலை 9.15 மணிக்கு , திருவள்ளூர் மாவட்டம் , வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் , கழக அவைத் தலைவர் டாக்டர் அ . தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் கூட்டப்படுகிறது .

அடையாள அட்டை அவசியம்
கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடும் , தங்களுக்கான அடையாள அட்டையோடும் தவறாமல் வருகை தந்து , உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் , கண்டிப்பாக முகக் கவசம் அணிந்தும் , சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் , கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு
அன்புடன் அழைக்கிறோம்.

' பாரத் ரத்னா ' விருது
பொதுக்குழுக் கூட்டத்தில் , வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் பொறுண்மை விபரங்கள் :
1.கழக அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தல் .
2.தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கு ' பாரத் ரத்னா ' விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல் .

ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து
3. கழக ஒருங்கிணைப்பாளர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து , கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும்
4. கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது
5 கழக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது
6. கழக இடைக்காலப் பொதுச் செயலாளரை , நடைபெற உள்ள கழகப் பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்
7.கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டுதல்" என கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி உறுதி
இந்த கடிதத்தின் படி ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்படும். அதாவது ஓ பன்னீர்செல்வத்தின் முக்கிய பொறுப்பான ஒருங்கிணைப்பாளர் பறிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் பொருளாளர் பதவி பறிப்பு உள்ளிட்ட தகவல்களை வெளியிடவில்லை. ஆனாலும் அதிமுக பொது குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில் அதில் ஒரு தீர்மானமாக பொருளாளர் பதவி குறித்த தீர்மானமும் இருக்கும் என்கின்றனர் அதிமுகவினர். இதன் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க இருப்பது உறுதியாகியுள்ளது.