சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யார்... யாருடன் எப்போது..? தேர்தல் காலங்களில் பாமகவின் திகைக்க வைக்கும் கூட்டணி வரலாறு

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு-வீடியோ

    சென்னை:லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன், பாமக கூட்டணி அமைத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த காலங்களில் தேர்தலின் போது யார், யாருடன் கூட்டணி பற்றிய வரலாற்றை சற்றே புரட்டி பார்க்கலாம்.

    தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் முதல் கட்சியாக அதிமுகவில் இணைந்து 7 தொகுதிகளையும்... போனசாக ஒரு ராஜ்யசபா தொகுதியையும் அள்ளி ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறது பாமக.

    திராவிட கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டணி என்று முழங்கிவிட்டு.. தற்போது மீண்டும் அதிமுகவுடன் பாமக கை கோர்த்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த காலங்களில் பல தேர்தல்களில் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருக்கிறது.

    ஆளுமைகள் மறைந்த தேர்தல்

    ஆளுமைகள் மறைந்த தேர்தல்

    ஆனால்... இருபெரும் ஆளுமைகள், தலைவர்களான கருணாநிதி , ஜெயலலிதா ஆகியோர் இல்லாத தேர்தல்.. தமிழகத்துக்கு மட்டுமல்ல... தேசிய அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆக... பாமகவின் வருகை எந்தளவுக்கு பிளஸ் என்பது அடுத்து வரும் காலங்களில் தெரிய வரும்.

    30 ஆண்டுகள் கடந்தது

    30 ஆண்டுகள் கடந்தது

    பாமக உருவாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் முடிந்துவிட்டது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை வைத்துள்ளது. அந்த வாக்கு வங்கி தான் பாமகவின் மவுசை ஒவ்வொரு தேர்தலின் போது அதிகரித்து வருகிறது.

    10 லட்சம் பேர் திரண்டனர்

    10 லட்சம் பேர் திரண்டனர்

    1980களில் வன்னியர் சங்கமாக உருவாகி... அதன் பின்னர் பாட்டாளி மக்களின் உரிமைகளை வென்றெடுக்க, அதிகாரம் பெற டாக்டர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை 16.7.1989ம் ஆண்டு தொடங்கினார். சென்னையில் சீரணி அரங்கத்தில் நடைபெற்ற கட்சியின் தொடக்க விழாவில் 10 லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர். அப்போதைய காலக்கட்டத்தில் தமிழக வரலாற்றில் ஒரு கட்சி தொடக்க விழாவில் இவ்வளவு பேர் கலந்து கொண்டது அதுவே முதன் முறை என்றும் கூட பேசப்பட்டது.

    முதன்முறையாக போட்டி

    முதன்முறையாக போட்டி

    அந்த ஆண்டின் அடுத்த சில மாதங்களிலேயே லோக்சபா தேர்தல் வந்தது.அதன் பின்னர் 1991ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டாலும்.. 1996ம் ஆண்டில்தான் முதன் முறையாக இந்த கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது. அப்போது மதிமுக, மறைந்த முன்னாள் அமைச்சரும் தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கியருமான வாழப்பாடி ராமமூர்த்தி தலைமை வகித்த திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாமக லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது.

    வெற்றி கிட்டவில்லை

    வெற்றி கிட்டவில்லை

    15 தொகுதிகளில் பாமக போட்டியிட்டாலும் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. மத்தியில் தேவ கௌடாவின் ஆட்சி கவிழ 1998ம் ஆண்டு மீண்டும் தேர்தல். தமிழகத்திலோ.. திமுக ஆட்சி. ஆகையால்.. அப்போது அதிமுகவுடன் கை கோர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது பாமக.

    அடையாளப்படுத்திய அதிமுக

    அடையாளப்படுத்திய அதிமுக

    இந்தத் தேர்தலில் பாமக 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அந்த தேர்தல் வழியாக லோக்சபா எம்பியாகவும், தேசிய அளவில் பாமக என்ற கட்சியை அடையாளப்படுத்தியவரும் மறைந்த ஜெயலலிதா என்பது பலர் அறியாதது. அந்த கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது, வாஜ்பாய் பிரதமரானார்.

    பாஜகவுடன் கைகோர்ப்பு

    பாஜகவுடன் கைகோர்ப்பு

    அந்த ஆட்சி 13 மாதங்களில் முடிவுக்கு வர, யாரும் எதிர்பாராத வகையில் திமுக பாஜகவுடன் கை கோர்த்தது. அதற்கு முன்னரே.. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பாமக தேர்தலிலும் அதையே தொடர்ந்தது. 8 தொகுதிகளில் களம் கண்ட பாமக, 5ல் ஜெயித்தது. அந்த கூட்டணியும் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைக்க ... வாஜ்பாய் 3வது முறையாக பிரதமரானார்.

    திமுகவுடன் கூட்டணி

    திமுகவுடன் கூட்டணி

    அந்த ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகளை கடந்தது. 2004ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் பாமக, திமுகவுடன் கூட்டணி வைத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டது. 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளிலும் அழகாக வெற்றிபெற்றது. மத்தியிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்க... சிறந்த பொருளதார நிபுணரான மன்மோகன் சிங் பிரதமராக பதவி ஏற்றார்.

    6 தொகுதிகளில் பாமக தோல்வி

    6 தொகுதிகளில் பாமக தோல்வி

    அதன் பின்னர்... மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து... 2009ம் ஆண்டில் அதிமுகவுடன் கடைசி கட்டத்தில் கூட்டணி வைத்து பாமக லோக்சபா தேர்தலை சந்தித்தது. 6 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாமல் படுதோல்வியை சந்தித்தது.

    2014ல் பாமக கூட்டணி

    2014ல் பாமக கூட்டணி

    அதிமுக தலைமையில் உருவான இந்த கூட்டணி, அதன் பின்னர் தேசிய கட்சிகளுடனான கூட்டணியில் சேராமல், தேர்தலுக்குப் பின்பே பாஜகவுக்கு ஆதரவு அளித்தது. 2014ம் ஆண்டில் பாமக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் பாஜக,தேமுதிக,மதிமுக,ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து தமிழகத்தில் கூட்டணி அமைத்தது.

    அதிமுக அமோக வெற்றி

    அதிமுக அமோக வெற்றி

    ஆனால்... அந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வண்ணம்... தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றிபெற்றது. மீதமுள்ள 2 தொகுதிகளில் ஒன்றில் பாமகவும், மற்றொன்றில் பாஜகவும் வெற்றிபெற்றன. பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்றார். மத்தியில் பாஜகதான் ஆட்சியும் அமைத்தது... மோடி பிரதமராக பதவி ஏற்றார்.

    பாமக அரசியல் நிலைப்பாடு

    பாமக அரசியல் நிலைப்பாடு

    ஆக... பாமகவின் தேர்தல் கூட்டணி வரலாறு... அந்தந்த தருணங்களில் காணப்படும் அரசியல் நிலைப்பாடுகளை ஒட்டியே இருக்கும் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. பாமக, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல முறை இரு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை... தனித்தே தான் போட்டி... என்றும் கூறி வந்துள்ளது.

    அதிமுக மீது விமர்சனம்

    அதிமுக மீது விமர்சனம்

    ஓரிரு சட்டசபை தேர்தல்களில் அது போன்று நடந்து கொண்டாலும் லோக்சபா தேர்தல்களில் கூட்டணியுடன் தான் களம் கண்டுள்ளது. அப்போது அன்புமணி ராமதாஸ், வேலு உள்ளிட்டோரும் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தற்போது அதிமுகவை, திமுகவை காட்டிலும்... குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிகளவு பாமக விமர்சித்திருக்கிறது.

    ஆளுநரிடம் புகார் மனு

    ஆளுநரிடம் புகார் மனு

    ஒரு கட்டத்தில் ஊழல் ஆட்சி... கமிஷன் ஆட்சி... தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று கிடையாது என்று முழங்கிய பாமக... உச்சகட்டமாக ஆளுநரிடம் புகார் பட்டியல் ஒன்றையும் அளித்தது. ஆனால்... அதற்கு பிறகு.. தேர்தல் காலம் நெருங்கி வர... வர... அதிமுக, பாமகவை நெருங்கி வந்தது.

    வாக்கு வங்கி வித்தியாசம்

    வாக்கு வங்கி வித்தியாசம்

    ஏனெனில்... கடந்த கால லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகளை அலசிய அதிமுக... தோல்வியை சந்தித்தாலும் இருகட்சிகளின் வாக்கு வங்கிகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்று கருதியது. இதன் பின்னர் தான்... பாமகவுடன் பேச்சுவார்த்தையை மெதுவாக ஆரம்பித்து தற்போது வெற்றி கோட்டை எட்டி பிடித்துள்ளது.

    மக்களின் முடிவு

    மக்களின் முடிவு

    ஆக மொத்தம்...தனி ஆவர்த்தனம் செய்து வந்தாலும்.. இறுதியில் சந்தர்ப்பவாத அரசியல் என்ற வட்டத்துக்குள் பாமக தம்மை நுழைத்துக் கொள்ளும் என்பது இம்முறை மீண்டும் உருவாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். யாரோடு யார் என்று எப்படி இருந்தாலும் முடிவு... என்பது மக்களின் கைகளில் தாம் இருக்கும் என்பதே நிதர்சனம்.

    English summary
    With the AIADMK in the Lok Sabha elections, the formation of the PMK coalition has provoked the politics of Tamil Nadu and in the past elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X