இதுதான் தமிழ்நாடு.. எங்கேயும் இப்படி பார்க்க முடியாது.. இணையத்தில் வைரலாகும் செம புகைப்படம்!
சென்னை; கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று சென்னையில் சிறிய கோவில் ஒன்றில் செய்யப்பட்டு இருந்த அலங்காரம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
இந்தியாவில் அரசியல் பிரச்சனைகள், சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் அரசியல் எப்போதுமே வேறு மாதிரிதான் இருக்கும். இந்திய சுதந்திரத்திற்கு பின் பாகிஸ்தான் பிரிவினையால் நாடு முழுக்க பல இடங்களில் மத மோதல்கள் ஏற்பட்ட போதும் கூட தமிழ்நாடு அமைதியாகவே இருந்தது.
தேசிய அளவில் பல இடங்களில் மத பிரச்சனைகள், மோதல்கள் நடந்த போதும் கூட தமிழ்நாடு அதில் எல்லாம் ஐக்கியம் ஆகாமல் தனித்தே இருந்திருக்கிறது.
அப்போ டெல்டா..இப்போ ஓமிக்ரான்.. புதுசா இது என்ன டெல்மிக்ரான்? என்ன செய்யும்? முழு விளக்கம்

தேசிய நீரோட்டம்
தேசிய அளவிலான அரசியல் நீரோட்டத்தில் தமிழ்நாடு இணையாமல் வலுவான மாநில கட்சிகளுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பதற்கும் இது ஒரு காரணமாக இருந்திருக்கிறது. மதத்தை வைத்து தமிழ்நாட்டில் அத்தனை எளிதாக வாக்கு கேட்க முடியாது, அரசியல் செய்ய முடியாது என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தெரிந்த விஷயம்தான். தமிழ்நாட்டில் அரசியல் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது.

அரசியல் மதம்
மதம் தாண்டி வாழ்வியல் ரீதியாகவும் அனைத்து மதங்களையும் அனுசரித்து போக கூடிய மாநிலம்தான் தமிழ்நாடு. ரம்ஜான் வந்தால் பிரியாணி கேட்டு இந்துக்கள் படை எடுப்பதும், கிறிஸ்துமஸ் தினத்திற்கு கேக் பகிர்ந்து கொள்வதும், தீபாவளிக்கு மற்ற மதத்தினர் வாழ்த்து சொல்வதும், விழாக்களை ஒன்றாக கொண்டாடுவதும் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்க கூடிய நிகழ்வுகள்.

எப்படி?
கடந்த வருடம் கார்த்திகை தீபத்தின் போது கன்னியாகுமரியில் இருக்கும் சர்ச் ஒன்றில் முன்பக்கம் முழுக்க விளக்கு ஏற்றப்பட்டு கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டதும் தேசிய அளவில் கவனம் பெற்றது.ஆங்காங்கே சிறு சிறு மத மோதல்கள் நடந்தாலும் எல்லா மதத்தினரும் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கும் சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று கோவில் ஒன்றில் செய்யப்பட்டு இருந்த அலங்காரம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

என்ன அலங்காரம்
சென்னையில் இருக்கும் சிறிய கோவில் ஒன்றில் இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் முகப்பில் கிறிஸ்துமஸ் சாண்டா புகைப்படம் கோலமாக வரையப்பட்டுள்ளது. அதோடு கோவிலின் முகப்பில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்த கோவிலை நிர்வாகம் செய்யும் நிர்வாகிகள் இந்த கோலத்தை வரைந்து உள்ளனர். இதுதான் வைரலாகி உள்ளது.

பாராட்டு
இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி எல்லாம் நடக்கும். ஒரு இந்து கோவிலில் கிறிஸ்துமஸ் சாண்டா கோலத்தை பார்க்கும் அளவிற்கு மத ஒற்றுமையை தமிழ்நாட்டில்தான் பார்க்க முடியும். இது மிகவும் சிறப்பாக விஷயம் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.