ஆந்திர எம்.எல்.ஏ மகன் அபிநய் செய்த "காரியம்..'' திண்டாடிப்போன திருப்பதி விமான நிலையம்!
சென்னை: திருப்பதி விமான நிலையத்துக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துணை மேயர் துண்டித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் எம்.எல்.ஏ கருணாகர் ரெட்டி. இவரது மகன் அபநய் ரெட்டி, திருப்பதி நகரத்தின் துணை மேயராக இருக்கிறார். திருப்பதி விமான நிலையம் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் குடியிருப்புக்கான நீர் விநியோகத்தை அபிநய் ரெட்டி துண்டித்ததாக கூறப்படுகிறது.
ரேணிகுண்டா விமான நிலைய மேலாளர் சுனிலுக்கும், திருப்பதி துணை மேயரான அபிநய் ரெட்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது. திருப்பதி விமான நிலையத்தில் இருந்து இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
திருப்பதி சர்வதேச விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். திருமலை வெங்கடாஜலபதியை வழிபட பெரும்பாலான வி.ஐ.பி-க்கள் திருப்பதி விமான நிலையம் வழியாகத்தான் வருவார்கள். நாட்டின் தலைவர்கள், அமைச்சர்கள் என எல்லோரும் அடிக்கடி வந்து செல்லும் இடம் திருப்பதி விமானநிலையம். அதனால் எப்போதும் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.
இது எந்த வகையில் நியாயம்?.. சென்னை- திருப்பதி

அபிநய் ரெட்டி
தேசிய அளவிலான கபடி போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநில அமைச்சர் போட்சா சத்தியநாராயணா திருப்பதி வந்தார். அவருடன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியும் விமான நிலையம் வந்தார். போட்சா சத்தியநாராயணா மற்றும் சுப்பா ரெட்டியை வரவேற்க அபிநய் ரெட்டி விமான நிலையம் சென்றிருந்தார்.

அனுமதி மறுப்பு
ஆனால், விமான நிலைய மேலாளர் சுனில், அபிநய் ரெட்டி மற்றும் அவரது உதவியாளரைத் தடுத்து நிறுத்தி, விமான நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் துணை மேயர் அபிநய் ரெட்டிக்கும் விமான நிலைய மேலாளருகும் இடையே கடும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

குடிநீர் விநியோகம்
இதையடுத்து அபிநய் ரெட்டி விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், திருப்பதி விமான நிலையம் மற்றும் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் குடியிருப்புக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இது திருப்பதியில் விவாதமாக மாறியிருக்கிறது.

விமர்சனம்
எதிர்க்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், "விமான நிலையம் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது ஒய்எஸ்ஆர்சிபியின் அராஜக ஆட்சிக்கு சான்றாகும். இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று அபிநய் ரெட்டியை விமர்சித்திருக்கிறார். இதற்கு காரணம் அபிநய் தான் என்ற கோணத்திலும் ட்வீட் செய்திருக்கிறார்.

தவிக்கும் குடியிருப்புவாசிகள்
விமான நிலைய குடியிருப்புவாசிகள் வடிகால் பிரச்னை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வடிகால் நீர் தெலுங்கு கங்கை நீரை மாசுபடுத்துகிறது என்று திருப்பதி முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்திருக்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள் தவித்துவருகின்றனர். மேலும் திருப்பதி விமான நிலைய அதிகாரிகள் நெறிமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என தலைவர்கள் அபிநய் ரெட்டிக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள்.