அப்பல்லோ மருத்துவமனை அட்வைஸ்.. ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பு டிச.31-ல் வெளியாகாது?
சென்னை: ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் பெயரை டிசம்பர் 31-ல் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. மேலும் கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் ரஜினிகாந்த் தற்போது ஈடுபடவும் வாய்ப்பில்லை.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜனவரி மாதத்தில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ல் வெளியிடப்படும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இதனையடுத்து ரஜினிகாந்த் கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகள் வேகமெடுத்தன.
ரஜினி டிஸ்சார்ஜ்.. அப்பல்லோ ஒன்னு சொல்லுது.. அண்ணன் ஒன்னு சொல்றாரே.. எனிவே ரசிகர்கள் ஹேப்பி

ஐதராபாத் படப்பிடிப்பு ரத்து
இன்னொரு பக்கம் ஐதராபாத்தில் அண்ணாத்தே படப் படிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்றார். அந்த படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஐதராபாத் மருத்துவமனையில் ரஜினி
இந்நிலையில் திடீரென ரஜினிகாந்த் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது. ரஜினிகாந்த் உடல்நலம் குறித்த அப்டேட்டுகளையும் ஐதராபாத் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது.

மருத்துவமனை அட்வைஸ்
இதனிடையே இன்று பகலில் வெளியிட்ட மருத்துவ குறிப்பில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. மேலும் ஒருவாரத்துக்கு முழுமையான ஓய்வு தேவை; அழுத்தம் தரக்கூடிய பணிகளை செய்யக் கூடாது; கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலையை தவிர்க்க வேண்டும் எனவும் அந்த மருத்துவ குறிப்பில் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருந்தது.

கட்சி அறிவிப்பு, நடவடிக்கைகள் இல்லை
இதனடிப்படையில் ரஜினிகாந்த் ஏற்கனவே கூறியபடி டிசம்பர் 31-ந் தேதி புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் கட்சி சார்ந்த எந்த ஒரு நடவடிக்கைகளையும் ரஜினிகாந்த் உடனே மேற்கொள்ளமாட்டார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குவது மேலும் தாமதமாகும் என்றே தெரிகிறது.