• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எப்படி இருந்த நடிகர் விவேக்... 1982-ல் மதுரையில் கல்லூரி காலத்தில்.... வைரலாகும் போட்டோ

|

சென்னை: தமிழ்ச் சமூகத்தை பேரதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டு சென்றிருக்கிறார் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக். நடிகர் விவேக் தொடர்பான நினைவுகளை படங்களை அவரது கல்லூரி கால நண்பர்கள் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். இதில் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் 1982-ம் ஆண்டு விவேக்கின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

  நடிகர் Vivek -க்கு இறுதி அஞ்சலி செலுத்திய Director Shankar, Arun Vijay, Santhanam | RIP Vivek

  நடிகர் விவேக் மறைவு தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை மட்டுமல்ல அனைவரையும் உலுக்கியும் எடுத்திருக்கிறது. விவேக்கின் மறைவை நம்ப முடியாமல் தமிழ் திரை உலகம், ரசிகர்கள் மட்டுமல்ல.. அவரது நண்பர்களும் தவித்து வருகின்றனர்.

  மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

  இந்தப் படம் என்னிடம் இல்லை. இன்று தான் கிடைத்தது. நன்றி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் .

  ஒருவரை இழந்த பிறகுதான் அவரோடு எடுத்த படம் நம்மிடம் இல்லை என்ற உணர்வே வருகிறது.

  விவேகானந்தனாக என்னோடு அறிமுகமான விவேக்குடன் மூன்று மாதங்கள் மதுரையில் கழித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.

  Actor Viveks 1982 Photo goes viral in Social Media

  போய் வாருங்கள் விவேக்!

  ஜென்ராம் பகிர்ந்த படம் இதுதான்... ( இடமிருந்து 4-வதாக இருப்பவர் விவேக் என்ற அன்றைய விவேகானந்தன்)

  அமெரிக்கன் கல்லூரியில் அசத்திய விவேக்

  இதேபோல் ஓவியர் ரவிக்குமார் தமது சமூக வலைதளப் பக்கத்தில், அமெரிக்கன் கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவரது பதிவு:

  1980-83 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்தபோது, கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் மூத்தவர் விவேக். ஓவியர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், நாடகக் கலைஞர்கள் என்று இருந்த அப்போதைய கல்லூரியின் கலைக்குழுவில்தான் விவேக்கோடு நிறைந்த நட்பு.

  அதற்கும் முன்னால் விவேக்கின் எழுத்து, கல்லூரி ஆண்டு மலரின் மூலமாக அறிமுகம். மயிர்ப்படகு என்பது அந்தக் கவிதையின் தலைப்பு என நினைக்கிறேன்... எங்கள் ஐயா சுதானந்தா எங்களையெல்லாம் எப்போதும் இழுத்துக் கொண்டு அலைவார். புதிய புதிய கருப்பொருள்களை, உத்திகளை, உருவாக்க முறைகளை முன் வைப்பார். நாங்கள் அப்போது, சுவர்ப் பத்திரிக்கை ஒன்றை நடத்திவந்தோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு பெரிய போர்டில் கவிதை, ஆக்கங்களை, புகைப்படங்கள், ஓவியங்கள் போன்றவற்றோடு தாளில் வண்ண வண்ணமாக எழுதி ஒட்டி வைப்போம். அதிலும் விவேக் சிறப்பாகப் பங்கெடுப்பார். மாணவர்களின் படைப்பாக்க ஆற்றலை வளர்த்தது அந்தச் சுவர்ப் பத்திரிக்கை.

  அப்படித்தான் அப்போது வந்த கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நடந்த பல்வேறு கலை நிகழ்வுகளில் நாங்கள் இணைந்து பங்கேற்றுக் கலக்கினோம்... புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய "Around world in 80 days" நூலைப்போலவே நூலின் தலைப்பு ரொம்பப் புகழ் பெற்றது. எங்களை அந்தத் தலைப்பு ரொம்பவே அந்த நேரம் ஈர்த்தது. அதனை ஒட்டி, எங்கள் கல்லூரிக் கலைக்குழு "Around Madurai in 15 Minutes" என்றொரு நாடகத்தை உருவாக்க நினைத்தது. அதற்கு விதை போட்டவர் தமிழ்த்துறைப் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா.

  நாடகம் உருவானதே ஒரு கூட்டு முயற்சியில், அனைவரும் கல்லூரி வளாகத்தில் மெயின் ஹால் கட்டிடம் அருகிலுள்ள ஒரு பெரிய மரத்தடி நிழலில் வட்டாக அமர்ந்து, மதுரையின் பல்வேறு காட்சிப் படிமங்களை, சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம். அதில் அதி சுவாரசியமாய் இருந்த, மதுரையில் கிராமத்தன்மை மற்றும் நகரத் தன்மையை வெளிப்படுத்தும், நடிப்புக்கும் வாய்ப்பளிக்கும், பார்வையாளருக்கும் சுவாரசியத்தைத் தரக்கூடியதாகச் சிலவற்றைத் தேர்வு செய்து, அதனை நாடகமாக்கினோம். மதுரையில் தெருவோரத்தில் லேகியம் விற்பவர்கள், டவுன் ஹால் ரோட்டில் புல்லாங்குழல் வாசிப்பவர், தெருவோரம் அமர்ந்து ஆர்மோனியம் வாசித்தபடி யாசகம் கேட்கும் கண்தெரியாத இசைஞர்கள், புரோட்டாக் கடை, நவீன இசை நிகழ்வுகள் நடக்கும் கேசி ரெஸ்டாரெண்ட் இன்றும் இதுபோன்ற சிலவற்றைறேத் தேர்ந்து அவற்றைக் காட்சிப் படிமமாக்கி, நாடக நிகழ்வாக்கினோம். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பஞ்ச். கடைசியில், இசையின் உச்சம் போல, கண்தெரியாத தெருப்பாடகன் பாடலும், கோசி ரெஸ்ட்டாரெண்டில் வண்ண விளக்குகள் படபடக்க நடக்கும் நவீன ஆங்கில இசையும் மாற்றி மாற்றிக் கட்ஷாட் வடிவத்தில் அமைத்தோம்.

  இடது புறம் ஸ்பாட் லைட் வெளிச்சம் தெருப்பாடகன் மீது படும் போது அவன் பாடுவான்... அப்படியே விளக்கணைந்து அந்த நொடியே வண்ணங்கள் மிளிய வலதுபுறம் கோசி ரெஸ்டாரெண்டடின் ஆங்கிலப் பாடகன் பாடுவான்... இரண்டு மூன்று முறை இது மாறி மாறி வேகமெடுக்கும்... தெருப்பாடகனாக நடித்தது நான். ஆங்கில இசைஞனாக நடித்தது விவேக். அதற்கான ஒத்திகை மூன்று நாட்கள் மெயின் ஹாலில் நடந்தது. மெயின் ஹால் முழுக்க அவரவர் பாத்திரங்களை ஆங்காங்கே நடித்தும், படித்தும், பாடியும் அசைந்தும் கொண்டிந்தனர். எனக்கு, தியாகராஜ பாகவதரின் "தீன கருணா கரனே நடராஜா நீல கண்டனே..." பாடலை மனப்பாடம் செய்யச் சுதானந்தா சொல்லியிருந்தார். அதனையும், ஆர்மோனியம் வாசிப்பது போன்ற பாவனை செய்து கொண்டே பாட வேண்டும். பாகவதர் குரல் உச்சஸ்தாயி... என்றாலும் அந்த வயதில் கத்திக் கத்தி... பாகவதர் போல ஒரு ஸ்தாயியை நானும் தொட்டுப் பாட ஆரம்பித்தேன்...

  நாடக நிகழ்வின் உச்சமாக அந்தக் காட்சி பட்டையைக் கிளப்பியது. அதிலும் விவேக் அனாயசமாக நகைச்சுவை ததும்பும் உடலசைவுடன், நவீன உடையுடன், ஆங்கில இசைப் பாடலைப் பாடி அசத்திவிட்டார். எனக்கு மஞ்சள் ஒளி ஸ்பாட் லைட்டும், விவேக்குக்குப் பல வண்ணமாய் மிளிரும் விளக்கொளியும் மாறி மாறி இசையோடு வழங்கப்பட்ட போது, பார்வையாளர்களின் கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆனது... அப்புறம் கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பு மதுரை அண்ணா நகரில் அப்போது விவேக் குடியிருந்த வீட்டுக்கு ஒரு முறை நண்பர்களோடு சென்றோம். அதற்கப்புறம் ஒரு முறை நேரில் பார்த்தது. அளவுக்கதிமாக நடிப்புத் தாகத்தில் சென்னை சென்று, பார்த்த வேலையை விட்டு, ஒரு கலைஞனாக, அதுவும் நகைச்சுவைக் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தி, சின்னக் கலைவாணர் என்கிற கிடைத்தற்கரிய பட்டமும் பெற்று, மேலும் மேலும் வளர்ந்த விவேக்... இப்படித் திடுதிப்பென மறைந்து போனது... என்னத்தைச் சொல்ல...

  என்றாலும் தமிழ் மக்களின் வாழ்வோடு உன் நகைச்சுவை, தமிழ் எப்போதும் கலந்திருக்கும் நண்பா.. சென்று வா... பசுமை மாறாக கல்லூரிக்கால நினைவுகளுடன்... -ஓவியன் இரவிக்குமார். இவ்வாறு ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.

  English summary
  Actor Vivek's 1982 Photo who was passed away today went viral in Social Medias.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X