சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செந்தூரபூவே.. தூரமாக ஏன் போனாய்.. ஜில்லென்ற காற்றே.. ஏன் கரைந்து போனாய்.. "மயிலு" மறைந்த நாள்..இன்று

நடிகை ஸ்ரீதேவி நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு பாட்டை கேட்டதுமே டக்கென அந்த நடிகையின் முகம், நம் கண்முன் வருகிறது என்றால்.. அதற்கு என்ன காரணமாக இருக்கும்.. ஸ்ரீதேவி அதில் நடித்தார் என்பதைவிட.. இன்று அந்த ஓவியத்தின் நினைவுநாள்!

பொதுவாக சிலரைப் பற்றி நாம் நினைப்பதே இல்லை. ஏதாவது ஒரு சமயத்தில் பார்க்கிறபோதுகூட பெரிதாக அதை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் திடீரென்று அவர்கள் இயற்கை எய்துகிறபோதுதான் நெஞ்சம் பதைக்கிறது. மனசு கிடந்து அடிக்கிறது.

எங்கோ ஓரிடத்தில் - இந்த பூமிப்பந்தின் ஒரு மூலையில் அவர்களும் நன்றாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் நம் அடி மனதில் ஒரு குரல் ரகசியமாக ஒலித்துக்கொண்டே இருக்கும். அத்தகையவர்களின் மரண செய்தி நம் காதில் விழுந்த பிறகுதான் நம்மையும் அறியாமல் கண்கள் துளிர்க்கின்றன.. அதில் ஒருவர்தான் நடிகை ஸ்ரீதேவி.

காமராஜர்

காமராஜர்

ஸ்ரீதேவியின் அப்பா அய்யப்பனும் கவியரசு கண்ணதாசனும் நண்பர்கள்... இவர்கள் 2 பேரும் அடிக்கடி காமராஜர் வீட்டில் சந்திப்பார்கள்... அப்படி ஒருமுறை குழந்தை ஸ்ரீதேவியுடன் காமராஜர் வீட்டுக்கு அய்யப்பன் சென்றபோது, ஸ்ரீதேவியின் துறுதுறு குறும்பு, அரும்புகள் காமராஜரை வியக்க வைத்தன... கண்ணதாசனிடம், "இந்த குழந்தையை சினிமாவில் நடிக்க வையேன்'' என்று சொல்லவும்.. அதன்படியே துணைவன் படத்தில் 4 வயதில் அறிமுகமானார் ஸ்ரீதேவி!!

அப்பாவித்தனம்

அப்பாவித்தனம்

கூர்மையான மூக்கு.. பளிங்கு முகத்தில் ஊசலாடிய கண்கள் மீன்கள்... சுருண்டு விழும் கேசம்.. கிறங்கி போகும் மொத்த அழகையும் வாரி தன்னிடத்தே வைத்து கொண்டவர் ஸ்ரீதேவி. வளர்ந்த போதும் அப்பாவித்தனமான குழந்தை முகம் ஸ்ரீதேவியை விட்டு போகவே இல்லை.. அந்த கால படங்களில் ஒரு வெள்ளை கலரில் மூக்குத்தி அணிந்திருப்பார் ஸ்ரீதேவி.. அது 7 வெள்ளை கற்கள் பதித்தது. கமல், ரஜினியுடன் ஸ்ரீதேவியை பார்க்கும்போதெல்லாம் இந்த வெள்ளை கலர் மூக்குத்திதான் ரசிகர்கள் கண்ணில் படும்.. இதில்தான் அன்றைய இளைஞர்கள் விழுந்தேவிட்டனர்! 70 மற்றும் 80களில் ஒவ்வொரு ஆண்மகனும் தனக்கு ஸ்ரீதேவி போலவே பெண் வேண்டும் என்று கேட்குமளவு அனைத்து தரப்பு மக்களையும் தன் அழகினால் சுண்டியிழுத்தார்.

மூன்று முடிச்சு

மூன்று முடிச்சு

13 வயது பெண் குழந்தைகள் ஸ்கூலுக்கு போகும் வயது.. ஆனால் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. ரொம்பவும் சிக்கலான கதைதான் "மூன்று முடிச்சு".. படத்தின் ஜீவநாடியே ஸ்ரீதேவிதான். நிர்மலமான அந்த முகத்தில்தான் எவ்வளவு உணர்ச்சிகள்... எவ்வளவு குமுறல்கள்... எவ்வளவு வேதனைகள்... இதில் தன்னை முழுமையாக சித்தரித்த திறமை மிகவும் அபூர்வமானது. விழிகளும். உதடுகளும், துடிக்கும் கன்னங்களும், வழிந்தோடும் கண்ணீரும் எண்ணற்ற செய்திகளை உணர்வுகளை நம் முன்னே கொண்டு வந்து கொட்டியது.

16 வயதினிலே

16 வயதினிலே

இதற்கு அடுத்தாற்போல், 1977ம் ஆண்டு வெளிவந்த "16 வயதினிலே" தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் இன்றுவரை நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள படம். ஸ்டுடியோக்களிலிருந்து சினிமாவை கிராமங்களின் தெருக்களில் நடமாத்த வைத்த முதல் படம். மண்வாசனையை ரசிகர்கள் நுகர்ந்த முதல் படம்... திரைப்படம் என்றாலே இப்படியெல்லாம்தான் இருக்கும் என்னும் மாயையை சுக்குநூறாக உடைத்தெறிந்த படம். இயக்குனராக வரவேண்டும் என்ற கனவுடன் 'மயிலு' என்ற பெயரில் கதை எழுதி... திரையுலகில் காலடி எடுத்து வைத்த பாரதிராஜாவுக்கு... கதாபாத்திரத்திற்கேற்றார்போல், வயதிற்கேற்றார்போல் கனக்கச்சிதமாக பொருந்தியவர் ஸ்ரீதேவி... பின்பு 16 வயதினிலே என்ற பெயரில் ஸ்ரீதேவியை மயிலுவாகவே நடமாடவிட்டார்.

மயிலு

மயிலு

குழந்தைத்தனமான ஒரு பெண்... வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் பக்குவத்துடன் எப்படி கையாள்கிறாள் என்பதில் மயிலின் மிளிர்ந்த நடிப்பும், சப்பாணியின் அரை நிர்வாண உடையும், பரட்டையின் புது ஸ்டைலும், குருவம்மாளின் யதார்த்தமும்... மயிலுவை 'மைல்'... 'மைல்' என்றழைத்த டாக்டரின் தமிழ் உச்சரிப்பும் இளையராஜாவின் கிராமிய இசை ஆளுமையும்... செந்தூரபூவே பாடலில், ஸ்லோமோஷன் காட்சி எடுக்க பட்ஜெட் பற்றாக்குறைவால், மயிலுவை மெதுவாக ஓடவிட்டு படம்பிடித்த நிவாஸின் ஒளிப்பதிவும், கிராமிய வாழ்வியலை நம் கண்முன்விரிய செய்தது. "என்னோட பேரு குயில் இல்ல... மயில்! என்று சொன்னதுமே பல படங்களில் ஸ்ரீதேவி நடித்தாலும், எல்லோருடைய மனசிலும் மயிலு மழையென நிரம்பி சிலிர்க்க வைத்து விட்டாள்.

நடிப்பு

நடிப்பு

தமது இளமை பொங்கும் அழகினாலும் அற்புதமான குணசித்திர நடிப்பாலும் தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்படங்களில் முதலிடத்தை பிடித்தார். பாலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவரென்ற அந்தஸ்த்தையும் பெற்றார். தமிழ்நாட்டிலிருந்து ஹிந்தி சினிமாவுக்கு போய் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திய வஹிதா ரஹ்மான், வைஜெயந்திமாலா, ஹேமமாலினி-க்கு பிறகு ஸ்ரீதேவிதான்..

சோதனை

சோதனை

கம்மியான பேச்சு.. ஜாக்கிரதையான வார்த்தை உதிர்த்தல்.. மென்மை போக்கு.. கொண்டவர் ஸ்ரீதேவி... எந்த உச்சத்துக்கு போனபோதும் கர்வம் இருந்ததில்லை... அதே அப்பாவித்தனம்.. அதே குழந்தை முகம்.. நிரம்பியிருந்தது.... அதே சமயம், அதுவே அவரது மைனஸாகவும் இருந்தது காலத்தின் சோதனை என்றுதான் சொல்ல வேண்டும்தான்! ஸ்ரீதேவி அணுக முடியாதவராகவே இருந்திருக்கிறார்.

குழப்பம்

குழப்பம்

யார் சொன்னார்களோ, என்ன சொன்னார்களோ, எப்படி இந்த திருமணம் நடந்து முடிந்ததோ தெரியவில்லை.. நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா வீட்டில் கல்யாண அறிவிப்பை சொன்னபோது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியைவிட குழப்பம்தான் அதிகமானது.. இறுதிகாலத்தில்கூட அவருக்கு என்னதான் பிரச்சனை.. அவருக்கான சுதந்திர எல்லைகள் வரையறுக்கப்பட்டதா.. மறுக்கப்பட்டதா.. அவமானங்களை சந்தித்தாரா.. வேறு ஏதேனும் நிர்ப்பந்தமா.. ஓட்டல் ரூம் பாத்டப்பில் விழுந்து உயிர் போக வேண்டுமா..குழப்பத்தோடு குழப்பமாகவே உயிர் பிரிந்துள்ளது.. அவரது திருமணம் முதல் இறப்பு வரை எல்லாமே புதிர்தான்.. மர்மம்தான்.. அவர் எப்படி இறந்தார் என்பதை அவரை படைத்த ஆண்டவனிடத்திலேயே விட்டுவிடலாம்!!

நடன அசைவு

நடன அசைவு

ஆனால், நிறைய அழுத்தமான... அதே சமயம் நம் மனசில் இருந்து நீங்காத படைப்புகளை தந்துவிட்டு போயுள்ளார் இந்த பெண் கலைஞர்.. இவைகளை அசைபோட காலம் நமக்கு போறாது.. துறுதுறு நடிப்பு, நளினமான நடன அசைவுகள், அவரது சிறு சிறு நுணுக்களில்கூட நடிப்பை வெளிப்படுத்தும் பாங்கு... என பக்குவப்பட்ட நடிகை என்பதை அரை நூற்றாண்டு காலங்களில் நிரூபித்திருக்கிறார்.

சித்திரம்

சித்திரம்

ஆபாசத்தில் புரண்டு நெளியும் பல நடிகைகளுக்கு மத்தியில் துள்ளியோடும் அழகிய மான்குட்டியாக திகழ்ந்தார் தங்கத்தாரகை ஸ்ரீதேவி. தரமும், கண்ணியமும், பக்குவமும் அவரது நடிப்பில் இழைந்திருக்கும். ஆபாசமோ, அருவருப்போ துளியும் இடம் பெறாது. அத்தகைய ஆரோக்கிய கதாபாத்திரம் அவரது ஒவ்வொரு படங்களிலும் வியாபித்திருக்கும். காலம் எவ்வளவோ கடந்து போனாலும், ரசனைகளின் சித்திரங்கள் காலங்காலமாக நம் கூடவே பயணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆதர்ச கதாநாயகி

ஆதர்ச கதாநாயகி

ஸ்ரீதேவி ஒரு நடிகை மட்டுமல்ல... பண்பட்ட நடிப்பிற்குரிய ஒரு பயிற்சிக் கல்லூரியும் ஆவார். ஸ்ரீதேவி என்னும் தேவதை... 16 வயதினிலே மயிலுவாக, ஜானி அர்ச்சனாவாக, மூன்றாம்பிறை விஜியாக, வாழ்வே மாயம் தேவியாக.... மட்டுமல்லாமல்... தமிழ் சினிமாவின் ஆதர்ச கதாநாயாகியாக இன்னும் நூற்றாண்டு காலம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்பார்.. எனினும்... இப்படிப்பட்ட கலாசித்திரத்தை இன்று இழந்துவிட்டோம்.. ‘மூன்றாம் பிறை' படத்தில் வரும் வரிகளைதான் சொல்ல வேண்டி உள்ளது... "ஏனோ தெய்வம் சதிசெய்தது பேதை போல விதி செய்தது..."!!

English summary
the famous indian actress Sridevis Death second Anniversary today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X