எடப்பாடி பிரதமரை வரவேற்க ஏர்போர்ட் போனாலும்.. இது ‘மிஸ்ஸிங்’.. எங்கப்பா தொண்டர்களும், கொடியும்?
சென்னை : பிரதமர் மோடியை முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். ஆனால், வழி நெடுக எங்குமே அதிமுக கொடி காணப்படவில்லை.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்திற்கே சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு வணக்கம் வைத்ததும் அவரது கைகளைப் பிடித்து தோளைக் தட்டிக்கொடுத்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி.

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் விமானப்படை தளத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக, அவர் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வரும் வழி நெடுக பா.ஜ.க தொண்டர்கள், பாஜக கொடிகளோடு இருபுறங்களிலும் திரண்டிருந்தனர். திமுக தொண்டர்களும் திமுக கொடிகளோடு, இந்த விழாவில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.
பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் திரண்ட பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜக கொடிகளுடன் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து வாகனத்தில் எழுந்து நின்று தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார் பிரதமர் மோடி.
கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், அதிமுக கட்சிக் கொடிகள் எங்கும் காணப்படவில்லை. மற்ற கூட்டணிக் கட்சிகளின் கொடிகளும் எங்குமே கண்ணில் படவில்லை. பிரதமர் மோடி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின்போது சென்னை வருகை தரும்போது பா.ஜ.க, அ.தி.மு.க கொடிகளோடு தொண்டர்கள் குவிந்திருப்பார்கள். இப்போதும் கூட்டணியில் இருந்தாலும் கூட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.