மழையோடு தொடங்கி மழையோடு முடிந்த அக்னி நட்சத்திரம்..மதுரையில் கரைபுரண்ட வெள்ளம்
சென்னை: கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகள் குளமாக மாறின. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் காலம் கடந்த மே 4ம் தேதி தொடங்கியது. அதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அக்னி நட்சத்திரத்தில் இன்னும் அதிகமாக வெயில் பதிவாகக் கூடும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
கத்திரி வெயில் தொடங்கியதுமே தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. இது மக்களை சற்றே மகிழ்ச்சி அடைய செய்தது. ஆசானி புயல் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்தது. இதை தொடர்ந்து வறண்ட வானிலை நிலவத் தொடங்கியது.
சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்... வெப்பச்சலனத்தால் லேசான மழையும் பெய்யுமாம்

சுட்டெரித்த வெயில்
கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வெயில் பதிவானது. 103 டிகிரிக்கு மேல் வெப்பம் இருந்தால் பொதுமக்கள் பகல் நேரங்க ளில் வெளியில் நடமாட முடியாத நிலை இருந்தது.இதன் காரணமாக வெப்பத்தை தணிக்கும் வகையில் நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர் மோர் உள்ளிட்ட குளிர் பானங்கள் மற்றும் பழ வகைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர்.

கோடை மழை
இந்தநிலையில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் தாக்கம் இருந்தாலும் மாலை நேரங்களில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. பலத்த இடி மின்னலுடன் சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெப்பநிலை எப்படி
அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தாலும் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப தாக்கம் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த அக்னி நட்சத்திர காலத்தில் அதிகபட்சமாக கடந்த மே 6ம் தேதி வேலூரில் 105.98 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 30ம் தேதி இதைவிட அதிகமாக வேலூரில் 108 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.

சுட்டெரித்த சூரியன்
தமிழகத்தில் அதிகபட்சமாகத் திருத்தணியில் 108.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. அடுத்தபடியாக வேலூர் 106.8, திருச்சி 104.7, மதுரை விமான நிலையம் 104, கரூர் பரமத்தி 103.6, கடலூர் 103.2, நாமக்கல் 103.1, சேலம் 102.7, பரங்கிப்பேட்டை 102.2, சென்னை மீனம்பாக்கம் 101.6, புதுச்சேரி 101.3, மதுரை 101.1, பாளையங்கோட்டை 100.4 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது. மேலும் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்தாலும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

மதுரையில் பகலில் வெயில்
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. இரவிலும் அதே வெப்பசலனம் காணப்பட்டதால், மதுரை மக்கள் மழைக்காக ஏங்கி காத்திருந்தனர். இந்தநிலையில் அக்னி நட்சத்திர நிறைவு நாளான நேற்றும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி இருந்தது. இதனால் பகல் நேரங்களில் சாலையில் நடமாடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது.

வெளுத்து வாங்கிய மழை
மாலை 6 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இடி- மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 7 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழையாக பெய்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மதுரை பெரியார் பஸ் நிலையம், எல்லீஸ்நகர் சாலை, காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையின் காரணமாக நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை
விருதுநகரிலும் மாலை 5 மணி முதல் 7 மணிவரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. மழையோடு தொடங்கி மழையோடு முடிந்துள்ளது அக்னி நட்சத்திர காலம். கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இதமான காலநிலை நிலவும் என்றும், சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சில தினங்களில் பருவமழை தொடங்க இருப்பதால் விவசாய பணிகளை தொடங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகிறார்கள்.