அக்னிபாத்.. ராணுவத்திற்கு துரோகம்..மக்கள் பணத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி..கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
சென்னை: அக்னிபாத் திட்டம் என்பது நம்முடைய ராணுவத்திற்கு செய்யக்கூடிய ஒரு துரோகம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர் எஸ் எஸ் ஒரு ராணுவத்தை தயார் செய்ய விரும்புகிறது என்றும் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விருத்தாசலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே .எஸ் .அழகிரி பங்கேற்றார். ஆர்பாட்டத்தில் பேசிய அவர், இந்திய ராணுவம் வலிமையும் வீரமும் மிக்க மிகுந்த பயிற்சி பெற்ற வீரர்கள் கொண்ட ஒரு ராணுவம்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து இந்திய ராணுவத்தினுடைய திறமை, அதன் படைப்பிரிவுகளினுடைய பலம் உலகமே அறிந்த ஒன்று. ஆனால் அந்த ராணுவத்திற்கு நான்கு ஆண்டுகள் மட்டும் ஆள் சேர்க்கின்ற இந்தத் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி உருவாக்குகிறது.
அக்னிபாத்.. மாணவர்களை மதக் கலவரத்தில் ஈடுபடுத்த மோடி திட்டம்..கார்த்தி சிதம்பரம் பகீர்

ஆர்.எஸ்.எஸ் ராணுவம்
நான்கு ஆண்டுகளில் ஒரு ராணுவத்தில் ஒரு இளைஞராக எதையும் அறிந்து கொள்ள முடியாது. அவர்கள் எதற்கு செய்கிறார்கள் என்றால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர் எஸ் எஸ் ஒரு ராணுவத்தை தயார் செய்ய விரும்புகிறது. ஆர்எஸ்எஸ் இன் ராணுவமாக பிற்காலத்தில் அது போகும் அவங்களாக அதில் போய் தான் போய் சேருவார்கள்.

மக்கள் பணத்தில் பயிற்சி
அவர்களுக்கான பயிற்சியை இன்றைக்கு மக்கள் பணத்தில் மோடி அவர்கள் செய்கிறார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது தவறு அவருடைய பிற திட்டங்களை போல இதுவும் இந்தியாவிற்கு மிகப்பெரும் தீமையை ஏற்படுத்தும் என்பதை கூறிக் கொள்கிறேன்.

எமர்ஜென்சி காலம்
மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் எமர்ஜென்சியின் இருண்ட காலத்தை மறந்து விடக்கூடாது என்று கூறியிருக்கிறார். எமர்ஜென்சி நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகுது இது வந்து அத்தைக்கு மீசை மொளச்சா அப்படி என்று ஒரு பழமொழி உண்டு. எமர்ஜென்சி முடிந்து எவ்வளவு காலம் ஆகிறது. அதற்காக இந்திராகாந்தி அவர்கள் தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள், அதன்பிறகு பல தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன, இன்றைக்கு போய் அதைப் பேசுவதில் பொருள் என்ன இருக்கிறது? இன்றைக்கு அவரிடம் பேச எந்த பொருளும் இல்லை, எனவே அதை அவர் திரும்ப பேசுகிறார் அது கண்டிக்கத்தக்கது... அது பொருத்தமானதல்ல.

எய்ம்ஸ் மருத்துவமனை
இரண்டாவதாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டி ஏழு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரைக்கும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை, நாடு வேகமாக முன்னேறுகிறது மோடி ஆட்சியில் என்று சொல்றாங்க, ஆனால் தமிழ்நாட்டில் ஒரு மருத்துவமனை 7 ஆண்டு காலமாக அடிக்கல் நாட்டி அப்படியே இருக்கிறது என்று சொன்னால். பாரதிய ஜனதாவினுடைய வேகம். இந்த வேகம் தான். தமிழ்நாடு பாரதிய ஜனதா இதற்கு முயற்சி செய்து எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்டி கொடுக்க வேண்டும்.

தமிழகம் புறக்கணிப்பு
இதற்காக அவர்கள் செயல்பட்டால் மிக நல்லது. இதை விட்டுவிட்டு. திமுக அரசில் அது சொத்தை என்று சொல்லிக் கொண்டிருப்பது ஏற்புடையது அல்ல பொருத்தமானதும் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே துறையில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. வந்தே மாதரம் என்கின்ற ஒரு ரயில்வே திட்டம் வந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதுல ஒரு ரயில் கூட சேர்க்கவில்லை, எல்லாமே வடமாநிலங்களில் தான் நடைபெறுகிறது.

தமிழகம் புறக்கணிப்பு
தமிழ்நாடு ஒரு முக்கியமான கேந்திரம். இந்த மாநிலத்திலும் ரயில்வே திட்டங்கள் வர வேண்டும், ரயில்வே திட்டங்கள் இங்கே புறக்கணிக்கப்பட்டால் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம் புறக்கணிக்கப்படும், தமிழ்நாட்டுக்கு தொழிற்சாலைகள் வருவது தடைப்படும் எனவே அது ஒரு முக்கியமான திட்டம் அந்த ரயில்களை தமிழகத்தில் இயக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். எல்லாவற்றையும் விட முக்கியம் இந்த விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்கிற இந்த சாலை எட்டு வருடமாக பாஜக ஆட்சியில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சாலையை அவர்களால் போடமுடியவில்லை,எட்டாண்டு காலமாக இந்த சாலை பணி நடைபெறுகிறது. அரசாங்கம் எங்கே வேகமாக செயல்படுகிறது? சாலைப் போக்குவரத்து அமைச்சர் அதை தெளிவுபடுத்த வேண்டாமா...? எனவே அது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.