அடடே திரைக்கதையில் எதிர்பாராத ட்விஸ்ட்! சசிகலா ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் சந்திப்பு! கைகோர்க்கும் டிடிவி?
சென்னை : அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றுவது 90% உறுதியாகியுள்ள நிலையில் திரைக்கதையில் ஏற்பட்ட திடீர் திருப்பம் போல சசிகலாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணைய இருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவம் போல மிக கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தி வந்த இயக்கமான அதிமுக மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை.
முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் எதிரானவர்கள் எடுத்து கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது.
எடப்பாடி பேரை சொன்னது ஒரே ஒருத்தர்தான்.. ஓப்பனாக போட்டு உடைத்த ஓ.பன்னீர்செல்வம்.. யார் அவர்?

ஒற்றைத் தலைமை
ஓபிஎஸ் நீக்கம், சசிகலா பொதுச் செயலராக பதவி ஏற்பு, அவர் சிறை சென்றது , பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தம், கட்சி ஒன்றிணைந்து என அடுத்தடுத்து பல திருப்பங்களை சந்தித்து அதிமுக ஒருவழியாக நான்கு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து அதிமுக சந்தித்து 4 தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் தற்போதைய ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சிக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் உறுதி
ஒற்றைத் தலைமை தான் வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி அடம்பிடிக்க அதற்கு இடம் கொடுக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் உறுதியுடன் இருக்கிறார். இதற்காக கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக கட்சிக்குள்ளே ஒரு கலவரம் வெடித்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட கட்சியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றி விட்டதாகவே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் செல்லாமல் எடப்பாடி தரப்பில் தஞ்சமடைந்துள்ளனர்.

அடுத்தடுத்து திருப்பம்
ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளும், நடுநிலை வகித்த சில நிர்வாகிகளும் இதனை கண்டு சற்றே அதிர்ச்சி அடைந்து எடப்பாடி பக்கம் சாய திட்டமிட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து பல திருப்பங்களை சந்தித்து வருகிறது அதிமுக. நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்துள்ள ஓபிஎஸ் தற்போது சசிகலாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பலமுறை சசிகலா குறித்த கேள்விகளின் போது மென்மையான பதில்களை அளித்து வந்தார் ஓபிஎஸ். நேற்று வெளியிட்ட நாளிதழ் விளம்பரத்தில் கூட கட்சிக்குள் வரும் அனைவரையும் வரவேற்க வேண்டும் என சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரது பெயரை குறிப்பிடாமல் குறிப்பிடப்பட்டிருந்தார்.

சசிகலா ஆதரவாளர்கள்
இதனிடையே சசிகலாவின் முக்கிய ஆதரவாளர்கள் சிலர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியுள்ளனர். ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஓபிஎஸ் சந்தித்துப் பேசிய புகழேந்தி உள்ளிட்ட சிலரின் ஏற்பாட்டின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியில் உள்ள சில அதிகாரங்களை பயன்படுத்தி இறுதிக்கட்ட அழுத்தத்தை எடப்பாடி தரப்புக்கு தர ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாகவே இந்த சந்திப்பு நடந்து இருப்பதாக கூறுகின்றனர்.

அதிமுகவில் பரபரப்பு
சென்னையில், சசிகலா ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசிய நிலையில், சசிகலாவின் பாதையில் பயணிக்க தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுகவில் மீண்டும் சசிகலா எனும் புயல் வீச வாய்ப்பிருப்பதால், அதனை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வந்தாலும் சற்றே அதிர்ச்சியில் உள்ளதாக ர.ர.க்கள் கூறுகின்றனர். எப்படி எனினும் சசிகலா களமிறங்கினால் அதிமுக எனும் மைதானத்தில் ஆட்டம் சூடு பிடிக்க போவது உறுதி.