அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ல் கூடுமா? ஈபிஎஸ் பொதுச்செயலாளர் கனவு என்னவாகும்? ஓபிஎஸ் நெக்ஸ்ட் மூவ்?
சென்னை: அதிமுகவின் புதிய பொதுக்குழு ஜூலை 11-ந் தேதி கூடும்; அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி மகுடம் சூட்டுவார் என அவரது கோஷ்டி நம்பிக்கையின் உச்சத்தில் இருக்கிறது; ஆனால் எப்படியாவது ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவை தடுத்தாக வேண்டும் என வியூகம் வகுத்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறது ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி.
கர்நாடகாவில் கோயில் நிதி “ரூ.20 கோடி” சுருட்டிய 5 பூசாரிகள்.. போலி இணையதளம் நடத்தி ”சதுரங்க வேட்டை”
சென்னையில் அதிமுக பொதுக்குழு கடந்த 23-ந் தேதி வரலாறு காணாத குழப்பங்கள், வன்முறைகளுடன் முடிவடைந்தது. அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் தொடங்கிய 30 நிமிடத்தில் முடித்து வைக்கப்பட்ட முதல் பொதுக்குழு இது. அத்துடன் கட்சியின் தீர்மானக் குழு உருவாக்கிய தீர்மானங்களையே பொதுக்குழு ஒட்டுமொத்தமாக நிராகரித்த வினோதமும் நிகழ்ந்தது.

ஜூலை 11 பொதுக்குழு
மேலும் அதிமுகவின் புதிய பொதுக்குழு ஜூலை 11-ல் கூடும் என எடப்பாடி பழனிசாமி கோஷ்டி அறிவித்துள்ளது. அதிமுகவின் புதிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் தமிழ் மகன் உசேன் தேர்வே செல்லாது என்பதால் அவர் கூட்டும் பொதுக்குழு எப்படி சட்டப்பூர்வமானது என்கிற கேள்வியை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முன்வைக்கிறது.

ஈபிஎஸ்க்கு பொதுச்செயலர் பதவி
அதேநேரத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை முன்மொழிந்ததே ஓ.பன்னீர்செல்வம்தான்; அதுவும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டிய பொதுக்குழுவில் தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதனால் தமிழ் மகன் உசேன் தேர்வும் செல்லும்; அவர் அறிவித்த ஜூலை 11 பொதுக்குழுவும் செல்லும் என்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் பொதுச்செயலாளராக முடிசூட்டுவது என்கிற கனவுடன் இருக்கிறது அந்த கோஷ்டி.

டெல்லியில் ஓபிஎஸ்
இதனிடையே டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் திரெளபதி முர்மு நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் ஓபிஎஸ், தம்பிதுரை (எடப்பாடி கோஷ்டி) இருவரும் பங்கேற்றனர். டெல்லியில் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு புகார் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக, சசிகலா
இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையத்தின் தலையீட்டை விட பாஜக மேலிடத்தின் பஞ்சாயத்து தமக்கு சாதகமாக இருக்கும்; ஆகையால் பாஜக மேலிடத் தலைவர்களை இந்த பஞ்சாயத்தில் இழுத்துவிடுவது என்பதுதான் ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியின் வியூகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு கோஷ்டிகள் இப்படி அடித்துக் கொண்டிருக்க சசிகலாவோ, ஜூன் 26 முதல் புரட்சி பயணம் என ஒன்றை அறிவித்து மேலும் பரபரப்பை கூட்டியுள்ளார்.