பொங்கல் பரிசு பொருள் கொள்முதலில் 500 கோடி ஊழல் என உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!
சென்னை: பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியதில் 500 கோடி ஊழல் நடைபெற்றதாகக் கூறி, சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் விழாவை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்களைக் கொண்ட பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ரோஜா நடனமாடியதாக வீடியோ.. மார்ஃபிங் செய்த 3 பேரை லபக்கிய போலீஸ்
அதன்படி மாநிலம் முழுவதும் பயனாளிகளுக்குக் கரும்பு உட்படப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வரும் ஜன. 31 வரை இந்த பொங்கல் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ 500 கோடி ஊழல்
இருப்பினும், தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு சில பொருட்கள் தரமற்ற முறையிலும் எடைக் குறைவாகவும் இருப்பதாக அதிமுக தலைவர்கள் பலரும் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் அவர்கள் விமர்சித்தனர். இந்தச் சூழலில் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியதில் 500 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எடை குறைவு
சுமார் ரூ 1,297 கோடி செலவில் 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், 21 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பல ரேஷன் கடைகளில் குறைந்த அளவிலான பொருட்களே வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பல்லி & ஊசி
மேலும், தரம் குறைந்த மளிகை பொருட்களைக் கொள்முதல் செய்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பல இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்லி மற்றும் ஊசி போன்ற அபாயகரமான பொருட்கள் இருந்தது குறித்தும், பல பாக்கெட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது குறித்தும் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை தேவை
கரும்பு கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில், விவசாயிகளுக்கு முழுமையாகக் கொடுக்காமல், 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைகேட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாகவும், போலீஸ் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். மேற்கொண்டு பொங்கல் பரிசு வழங்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.