தேமுதிகவுக்கு 17 தொகுதிகள்தான்?.. இதுதான் ஃபைனல்?.. அதிமுகவுடன் உடன்படிக்கையில் இன்று கையெழுத்து?
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸுக்கு இன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது. தேமுதிகவுக்கும் தமாகாவுக்கும் சேர்த்து 20 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகளும், பாமகவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 10 நாட்களாக தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிக 40 தொகுதிகள் கேட்டு பின்னர் 25 ஆக குறைத்து கொண்டது. ஆனால் தேமுதிகவோ வாக்கு சதவீதத்தை வைத்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக சொல்கிறது.
ராஜபாளையம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கா? நடிகை கவுதமிக்கா? அதிமுக- பாஜக மல்லுக்கட்டு பிரசாரம்

ஒதுக்கீடு
இதனால் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் முதல் 18 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கிறது. ஆனால் இதற்கு தேமுதிக உடன்படவில்லை. குறைந்தபட்சம் தங்களுக்கு 21 தொகுதிகளும் ராஜ்யசபா எம்பி பதவியும் தர வேண்டும் என தேமுதிக மீண்டும் வலியுறுத்தி வருகிறது.

தாமதம்
இது வரை அதிமுக- தேமுதிக இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இதுவரை சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் தாமதம் ஆவதால் தமாகா, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் தாமதம் நீடித்து வருகிறது.

17 சீட்டுகள்
இதனால் இன்றே தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க அதிமுக மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு 17 சீட்டு வரை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிமுக- தேமுதிக இடையே நட்சத்திர ஹோட்டலில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 தொகுதிகள்
அதே போல் தமாகாவுக்கும் 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றைய தினம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தேமுதிக, தமாகா ஆகிய இரு கட்சிகளுக்கும் சேர்த்தே 20 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இன்னும் இரு தினங்களில் தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகள் ஆகியவற்றை பிரித்து கொடுத்துவிட்டு தேர்தல் வேலைகளில் ஈடுபட அதிமுக மும்முரம் காட்டி வருகிறது.