அம்மாவின் கட்சியை மீட்டெடுப்போம்.. ஓபிஎஸ் உடன் அரசியல் ரீதியாக சந்திப்பு இல்லை.. டிடிவி தினகரன்!
சென்னை: அதிமுக கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம், ஆனால் அதிமுக அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தில் உள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் அமமுகவை வலுப்படுத்த செயல்பட்டு வருகிறோம். ஆட்சி, அதிகாரம், பணம், பதவி என எல்லாவற்றையும் கடந்து தான் என்னுடன் பலர் உடன் நிற்கிறார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுக விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், அதிமுகவில் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. அதிமுக அழிவுப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பது போல் தற்போதைய நிகழ்வு உள்ளது. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். தேர்தலில் வெற்றிபெற்று அம்மாவின் கட்சியை மீட்டெடுப்போம். அம்மாவின் சிங்கக்குட்டிகள் நாங்கள். ஓபிஎஸ் உடன் நட்பு ரீதியான சந்திப்பு இருந்ததே தவிர, அரசியல் ரீதியான சந்திப்புகள் இல்லை.
தர்மயுத்தம் தொடங்கியபோது நண்பர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திந்தேன். அதன் பிறகு சந்திக்கவில்லை. பதவி கொடுத்த பின்புதான் எடப்பாடி பழனிச்சாமியின் உண்மையான குணம் தெரிந்தது. ஆட்சியில் இருந்த வரை பிரச்னையின்றி இருந்தார்கள். இப்போது இன்னும்கூட அதிமுகவில் எனது ஸ்லீப்பர்செல்கள் இருக்கின்றனர். அதிமுகவின் தற்போதைய நிலையைப் பார்க்க வருத்தமாக உள்ளது. எனக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் நரிக்கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம். தேர்தல் வெற்றியின் மூலம் நாங்கள் அதிமுகவை மீட்டெடுப்போம். அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று சசிகலா மேற்கொண்டுள்ள புரட்சிப் பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
ஐபிஎல் வீரர்களை ஏலத்தில் எடுப்பது போல், ஒவ்வொரு நிர்வாகிகளையும் ரூ.4 கோடி, ரூ.5 கோடி என விலைக்கு வாங்க நினைத்தனர். எனக்கு ஓபிஎஸ், இபிஎஸ், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் யார் மீதும் வருத்தமில்லை. அதிமுக தலைமை பதவி தொண்டர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.