தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் பிளஸ் ஒரு ராஜ்யசபாசீட்-அதிமுகவின் பைனல் மெசேஜ்-ஏற்குமா? தனித்து போட்டியா?
சென்னை: பாஜகவுக்கு 20 ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் பிளஸ் ஒரு ராஜ்யசபா சீட் என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறதாம் அதிமுக. தேமுதிக இதனை ஏற்குமா? அல்லது தனித்துப் போட்டியிடுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. வன்னியர் உள்ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று அமல்படுத்தியதால் குறைவான தொகுதிகளாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வதாக அக்கட்சி அறிவித்தது.

பாஜகவுக்கு 20 தொகுதிகள்
இதையடுத்து 40 தொகுதிகள் கேட்டு அடம் பிடித்த பாஜகவுக்கு 20 தொகுதிகள்தான் என உறுதி செய்தது அதிமுக. இதற்கான ஒப்பந்தம் நேற்று இரவு கையெழுத்தானது. இருந்தபோதும் தாங்கள் கேட்கும் 10 தொகுதிகளை அப்படியே தந்தாக வேண்டும் என்ற நிபந்தனையை பாஜக விதித்திருக்கிறதாம்.

முரசு புறக்கணிப்பு
இந்த நிலையில் பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தேமுதிகவின் முரசு சின்னம் இடம்பெறவில்லை. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கிறதா? இல்லையா? என்கிற குழப்பம் தொடருகிறது. இதனிடையே தேமுதிக தனித்துப் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

தேமுதிகவுக்கு 12
தற்போது தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் பிளஸ் 1 ராஜ்யசபா சீட் என்கிற நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளது. இதனை தேமுதிக ஏற்றுக் கொண்டு அதிமுக கூட்டணியில் நீடிக்கப் போகிறதா? என்பதுதான் கேள்வி.

ஏற்குமா தேமுதிக?
லோக்சபா தேர்தலின் போது திமுக, அதிமுக இரு கட்சிகளிடமும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது தேமுதிக. ஒருகட்டத்தில் திமுக கையை விரித்துவிட அதிமுகதான் பரிதாபப்பட்டு 4 தொகுதிகளை கொடுத்தது. இப்போது அதிமுக அணியில் தொடக்கம் முதலே முரண்டுபிடிக்கும் தேமுதிக, அதிமுகவின் இந்த தொகுதி பங்கீட்டை ஏற்குமா? இல்லை தனித்துப் போட்டியிடுமா? என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு.