• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு முதல் முறை.. வீதிக்கு வரும் அதிமுக.. 28ம் தேதி மாநிலம் முழுக்க போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக, அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவதற்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

ஜூலை 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் , ஊராட்சி ஆகிய பகுதிகளில், தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமை குரல் ஒலிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இது தொடர்பாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம்

மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம்

"விடியல்" தரப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசே! வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களை வஞ்சிக்காதே தமிழ் நாட்டு வாக்காளர்களின் உள்ளக் குமுறல்களை உலகுக்கு உரக்கச் சொல்லி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் உரிமைக் குரல் முழக்கம். தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலினும், அவருடைய மகன் திரு. உதயநிதி ஸ்டாலினும், திரு. மு.க. ஸ்டாலினின் தங்கை திருமதி கனிமொழியும், மாமன் மகன் திரு. தயாநிதியும், தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் "நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஊரெங்கும் பிரச்சாரம் செய்தார்கள். நீட் தேர்வை ரத்து செய்வது என்ற சூத்திரம் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று சத்தியம் செய்தார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் தி.மு.க-வின் மூத்த தலைவர்களும், பிரச்சார வியூக ஆலோசகரின் அறிவுரையின்படி தயாரான தேர்தல் அறிக்கையும் "நீட்" தேர்வு ரத்து செய்யப்படுவது 'உறுதி, உறுதி, உறுதியோ உறுதி" என்று ஒவ்வொரு கூட்டத்திலும் முழங்கியதைக் கேட்டு சரி. ஏதோ செய்வார்கள் போலிருக்கிறது என்று தமிழ் நாட்டு வாக்காளர்கள் நம்பி வாக்களித்தார்கள். சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் தி.மு.க. இப்போது "நீட்" தேர்வுக்கு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, "நீட்" தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. எத்தனை பெரிய நம்பிக்கை துரோகத்தை தமிழ் நாட்டு மாணவர்களுக்கு இழைத்திருக்கிறது திமுக-வும், அது அமைத்திருக்கும் அரசும்!

அடிப்படை தேவை பொருட்கள் விலை

அடிப்படை தேவை பொருட்கள் விலை

எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களின் விலையும், கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்வது வாடிக்கையாகிவிட்டது. பொருளாதாரமும் புரியாமல், மக்களின் துன்ப, துயரங்களும் தெரியாமல், மனம் போனபடி தி.மு.க. செயல்படுவதுதான் இந்த அவல நிலைக்குக் காரணம். கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து, வருமானம் சுருங்கிப் போய் அல்லல்படும் மக்களின் துயரத்தைப் போக்க தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

தங்களுடைய ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல் விலையை ரூ. 5/-ம், டீசல் விலையை ரூ.4/-ம் குறைப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100/- மானியம் தருவதாகவும் வாக்களித்த தி.மு.க. இதுவரை தனது வாக்குறுதியைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறது. நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை தமிழ் நாட்டு வாக்காளர்களுக்கு, குறிப்பாக தமிழ் நாட்டுப் பெண்களுக்கு அளித்த தி.மு.க. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நாணயமான செயல், அதுவே அரசியல் நாகரீகமும் கூட. மாறாக தி.மு.க. அவற்றைப் பற்றி பேசாமல் அணில் ஓடுவதால் மின்சாரம் தடைபடுகிறது" என்று கூச்சமின்றி பேசுகிறது. தமிழ் நாடெங்கும் பலமுறை மின்வெட்டு நாள்தோறும் நடைபெறுகிறது.

விவசாயிகள் பிரச்சினை

விவசாயிகள் பிரச்சினை

தமிழ் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எண்ணற்ற வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியுள்ளது. ஆனால், அவற்றுள் ஒன்றினைக்கூட இன்று வரை நிறைவேற்றவில்லை. விதை வித்துக்கள், உரம் போன்ற இடுபொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும். தடையில்லா மின்சாரம் வழங்கப்படவும் இதுவரை எதையும் செய்திராத தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கும், அலட்சியமும் பெரும் பொருளாதார சீர்குலையிலும், கிராமப்புற ஏழ்பையிலும் கொண்டுபோய் விடும் என்று எச்சரிக்கிறோம்.

நெல்மணி அழுகுகிறது

நெல்மணி அழுகுகிறது

ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி செய்திகளில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முனைத்து விளாகிப் போவதையும் அரும்பாடுபட்டு விதைத்து, அறுத்து விற்பனைக்குக் கொண்டுவந்த விவசாயி தன் உழைப்பின் கனியான நெல்மணிகள் அழுகிப்போவதைக் கண்டு அழுது துடிப்பதையும் காணும்போது தாங்க முடியாத துக்கமும், சோகமும் காண்போருக்குள் எழுகிறது. முறைகேடுகளும், வஞ்ச வாவண்யங்களும் இல்லாமல் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும்.

காவிரி விவகாரத்தில் அச்சுறுத்தல்

காவிரி விவகாரத்தில் அச்சுறுத்தல்

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ் நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டதற்கு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான் முழுமுதற் காரணம். தி.மு.க-வின் கடந்த கால ஆட்சியின்போது கர்நாடகத்தில் பல புதிய அணைகள் கட்டப்பட்டதையும், அதனால் தமிழகத்திற்கு இயற்கையாக காவிரியில் வந்திருக்க வேண்டிய தண்ணீரின் அளவு பெருமளவு குறைந்து போளதையும் வரலாற்றின் பக்கங்களில் பார்க்க முடிகிறது. வட தமிழகத்தின் நீர் ஆதாரங்களில் முக்கியமானதான தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான பார்கண்டேய ஆற்றின் குறுக்கே பெரும் அணையை தற்போது கர்நாடகம் கட்டியிருக்கிறது. அது பற்றி திமுக அரசு வாய் திறக்க மறுக்கிறது. காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட வர முடியாத அளவுக்கு மேகதாட்டு என்ற இடத்தில் பிரம்மாண்டமான அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் சூழ்நிலையில் இப்போதாவது தி.மு.க. அரசு விழிப்புடனும், முளைப்புடனும் செயல்பட்டு புதிய அணைகள் கட்டப்படுவதை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தமிழகம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்து, அச்சுறுத்தல், அநீதி.

வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு

வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு

"அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்றும் "நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காந்திருந்து பாரு ராஜா ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு நோளை நிமிர்த்து - அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து" என்றும்; புரட்சித்தலைவரின் பாடல்களை ஒவ்வொரு நாளும் கேட்டு வளர்ந்து வரும் நாங்கள், "ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே" என்று போர் பரணி பாடும் நிலைக்கு கழகத்தினர் மீது திமுக அரசு பொய் வழக்கு போடும் மலிவான அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிடலாம். ஒழித்துவிடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும். இது போன்ற அடக்குமுறைகளை எவ்வாம் தாங்கி வலுப்பெற்ற இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகவே. இந்த பிற்போக்குத் தனற்தைக் கைவிட்டு நேர்யைாகயும், திறமையாகவும் ஆட்சி செய்ய திமுக முன் வரட்டும். தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காகவும், தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படவும் மேற்சொன்ன கோரிக்கைகளை தி.மு.க. அரசின் கவனத்திற்குக் கொண்டுவர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விழைகிறது.

28ம் தேதி போராட்டம்

28ம் தேதி போராட்டம்

திமுக அரசின் மெத்தனப்போக்கை களையவும், அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவி சாய்க்கச் செய்யவும் வருகின்ற 28.7.2021 புதன் கிழமை அன்று காலை 10 மணி . அளவில் கழக உடன்பிறப்புகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ் நாட்டு மக்களின் உரிமைக் குரல்களாய் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கூடி குரல் எழுப்புவோம். அது ஆளுவோரின் செவிப்பறையை சென்று சேரட்டும். நாம் வாழ்வதெல்லாம் மக்களுக்காகவே! நம் முழக்கமெல்லாம் எல்லோரும் எல்லாமும் பெறுவதற்காகவே! இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

English summary
After MK Stalin government comes to power in Tamil Nadu, for the first time AIADMK doing mass protest against the government on July 28 over the failure of the DMK government in various issues including NEET exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X