சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு.. பல வழிகளில் போராட்டம்.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை சட்டரீதியாகவும், போராட்டங்கள் வழியாகவும் எதிர்க்கப்படும் என திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து அனைத்துக்கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு, இன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

இதில், திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

All parties under Dravidar Kazhagam decides doing protest against 10% reservation

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

உயர்ஜாதியினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கி யோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வழிகோலும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் 103 ஆவது திருத்தமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசர அவசரமாக இரண்டே நாளில் (8.1.2019 மற்றும் 9.1.2019) நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது (12.1.2019).

இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டதே இட ஒதுக்கீட்டுக்காகத்தான்.

1928இல் அமுலான வகுப்புவாரி உரிமை செல்லாது என்று உச்சநீதிமன்றம் 1950இல் கொடுத்த தீர்ப்பினை எதிர்த்து இடஒதுக்கீடே சட்டப்படி செல்லாது என்ற நிலையை மாற்றிட தந்தை பெரியார் தலைமையில் எழுந்த மாபெரும் மக்கள் போராட்டம் - கிளர்ச்சிக் காரண மாகவே இந்திய அரசியல் சட்டத் திருத்தத்தின் முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் 1951 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேறி 15(4) என்ற புதிய பிரிவு இணைக்கப்பட்டது.

15(4) என்று முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணர்ந்தபோது பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் பி.ஆர்.அம்பேத்கர் எல்லாம் பல உறுப்பினர்களுடன் விவாதித்தபோதும், அதற்கு முன்பே அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்பற்றிய விரிவான 340 அய் எழுதும்போதே - எந்தெந்த வரையறைச் சொற்கள் (விவாதிக்கப்பட்டு பின் போடப்பட்டதோ) அதே சொற்களைத்தான் ''Socially and Educationally'' என்று கையாளப்பட்டதை அப்படியே 15(4) என்ற புதுப்பிரிவை பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்திலும் இடம்பெறச் செய்யப்பட்டது.

அப்போது சில உறுப்பினர்கள் 'Economically' என் றும் இணைத்து, அந்த அளவுகோலையும் சேர்க்க வேண்டும் என்று வாதாடியபோது, பிரதமர் நேரு பொரு ளாதார அளவுகோல் என்பது அவ்வப்போது ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது (Elastic); அது திட்டவட்டமான அளவுகோல் அல்ல. அது குழப்பத் திற்கு ஆளாக்கும் என்று விளக்கிய நிலையில், அரசியல் நிர்ணய சபை, முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தின்போது நடைபெற்ற விவாதங்களிலும் தெளி வாக்கப்பட்ட பிறகுதான், பொருளாதார அளவுகோல் கைவிடப்பட்டது. (நாடாளுமன்றத்தில் பொருளாதார அளவு கோலுக்கு ஆதரவாக 5 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் பதிவாயின). 340 ஆவது பிரிவிலிருந்த Socially and educationally சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்' என்ற சொற்றொடர்களே இடம்பெற்றது என்பது வரலாறு.

பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மண்டல் குழு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் (இந்திரா சகானி வழக்கில்) 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 13(1), 14, 15, 15(4) ஆகிய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டியே அத்தீர்ப்பு வழங்கப்பட்டது (16.11.1992).

சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்குத் தொடர்ந்துள்ளது. திராவிடர் கழகத்தின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.
உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக வழக்குத் தொடுக்கப்பட உள்ளது. அதன்பின் குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியின்போது பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதி யினருக்கு இட ஒதுக்கீடுக்கு வழி செய்யும் வகையில் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது (1.5.2016).
அதை எதிர்த்து "தயாராம் வர்மா எதிர் குஜராத் மாநில அரசு'' என்ற வழக்கிலும் அது செல்லாது என்று உயர்நீதிமன்றத்தால் திட்டவட்டமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டது (4.8.2016).

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமாகவும் மத்திய பாஜக அரசு பொருளாதார அடிப்படையில் உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு இப்போது வழங்கி இருப்பது இந்த நாட்டின் பெரும்பாலான மக்களான தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகவும் அதே நேரத்தில் உயர்ஜாதியினருக்கு ஆதரவாகவும், அக்கறையுடனும் சிந்திக்கக் கூடிய, செயல்படக்கூடிய அரசாக இருக்கிறது என்பதை இந்த அனைத்துக் கட்சிகளின், அமைப்புகளின் கூட்டம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள இட ஒதுக்கீடு சதவிகித அளவில் தாழ்த்தப்பட்டோரும், மலைவாழ் மக்களும் இதர பிற்படுத்தப்பட்டோரும் இடங்களைப் பெறாத நிலைதான் இன்றுவரை தொடர்கிறது. இந்த நிலையில், மக்கள் தொகையில் தங்களுக்குரிய எண்ணிக்கை விகிதாசாரத்தைவிட பல மடங்கு இடங்களைக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில், உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் எந்த வகையில் கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதற்கான எந்தவித புள்ளி விவரங்களும் கணக்கெடுப்புகளும், நியாயங்களும் இல்லாத நிலையில், விஞ்ஞான அளவீடுகளுக்கும் இடம் இல்லாமல் அவர்களுக்கு 10 விழுக்காடு பொத்தாம் பொதுவாக அளிப்பது சட்ட விரோதமாகும். நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானதாகும்.

இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள் என்ற அளவுகோலில் பொருளாதார அளவுகோலையும் இப்பொழுது உள்ளே திணித்தால், அனுமதித்தால் அடுத்து, தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலும் {15(4) 16(4)} பொருளாதார அளவுகோலையும் திணிக்கும் ஆபத்து இருக்கிறது என்பதையும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தொலைநோக்குடனும், எச்சரிக்கையுடனும் தெரிவித்துக் கொள்கிறது. உயர் ஜாதிக்காரர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக அவர்களை வீக்கர் செக்சன் என்று குறிப்பிடுவது அப் பட்டமான மோசடியாகும். கல்வி, வேலை வாய்ப்புகளில் உயர்ஜாதியினர் ஏழை - பணக்காரர் வேறுபாடின்றி பெரும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை. தகவல் அறியும் உரிமையின்கீழ் பெறப்பட்ட தகவலும் அதனை உறுதிப்படுத்துகிறது. சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் மத்திய பாஜக அரசின் - உயர் ஜாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் கூட்டம் மத்திய அரசை வற்புறுத்துகிறது.

கிரீமிலேயரை இட ஒதுக்கீட்டில் எந்த வகையிலும் இடம்பெறச் செய்யக்கூடாது என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மத்திய அரசுக்கு இதற்கான அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில், எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் கீழ்க்கண்ட வகைகளில் செயல்படுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

1. நீதிமன்றங்கள் வழியாக செயல்படுவது

2. மக்கள் மத்தியில் பிரச்சாரம் - போராட்டம் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - சென்னையில் மாபெரும் பேரணி (தேதி பின்னர் அறிவிக்கப்படும்).

3. துண்டறிக்கைகள் இயக்கம் நடத்துவது

4. தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற் படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரை இணைத்து நாடு தழுவிய அளவில் பொதுக்கூட்டங்கள்

5. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லுதல்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
All opposition parties under Dravidar Kazhagam decides doing protest against 10% reservation for economically weaker section.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X