சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தரம் தாழ்ந்த விமர்சனங்களை இயக்குகிறது பாஜக... திமுக தலைமையிலான கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: தரம் தாழ்ந்த, ஆரோக்கியமற்ற, தனி நபர் விமர்சனங்களை திரைமறைவிலிருந்து இயக்கி, நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாக திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பரபரப்பு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வினரும், அ.தி.மு.க.வினரும் அளிக்கும் புகார்களின் மீது பாய்ந்து ஓடி நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, எதிர்க்கட்சிகள் அளிக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் இந்தக் கூட்டம் முன் வைத்துள்ளது.

மேலும், தமிழக அரசு மற்றும் பாஜகவுக்கு கண்டனம், நீட் தேர்வு ரத்து, என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்களும் திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மகாராஷ்டிராவில் ஸ்டார்ட்.. உத்தவ் தாக்ரேவை கலாய்க்கும் துணை முதல்வர் அஜித் பவார்! ட்வீட்டை பாருங்கமகாராஷ்டிராவில் ஸ்டார்ட்.. உத்தவ் தாக்ரேவை கலாய்க்கும் துணை முதல்வர் அஜித் பவார்! ட்வீட்டை பாருங்க

அரசுக்குக் கண்டனம்

அரசுக்குக் கண்டனம்

தொடக்கத்திலிருந்தே, முதலமைச்சரிடமும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும், கொரோனா பெருநோய்த் தொற்று பரவல் குறித்து வெளியிடுவதிலும் சொல்வதிலும் ஒரு வகையான தயக்கம் நீடித்து வருகிறது; மருத்துவ விஞ்ஞானிகள் பலரும் சமூகப் பரவல் என்று கருத்து அறிவித்ததற்குப் பிறகும் அதை ஏற்றுக் கொள்வதிலே தடுமாற்றம் காணப்படுகின்றது. பரிசோதனைகள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை நாள்தோறும் மாவட்ட வாரியாக வெளியிடுக என்று கோரிக்கை விடுத்தும் அதற்கு அரசு செவிமடுக்கவில்லை.

கொரோனா மரணங்களைப் போல, ஒவ்வொன்றையும் உட்புகுந்து ஆழமாக விசாரித்துப் பார்த்தால், இன்னும் எத்தனையோ குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வரும். இத்தகைய குளறுபடிகள் வேண்டுமென்றே செயற்கையாக ஆளுந்தரப்பினரால் உருவாக்கப்பட்டவை என்று தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டுகிறது. இந்தக் கொள்ளை நோயிலும், திட்டமிட்டு கொள்முதல் முறைகேடுகளைச் செய்த அ.தி.மு.க. அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

5000 ரூபாய் பண உதவி

5000 ரூபாய் பண உதவி

மார்ச் மாதம் துவங்கிய ஊரடங்கு கடந்த 125 நாட்களாக இன்றுவரை தொடர்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நிலை நீடிக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதலமைச்சரே கூறிவிட்ட நிலையில், மக்கள்- தனியார் அலுவலக வேலைக்கோ, தினக்கூலித் தொழிலுக்கோ முழுமையாகச் செல்ல முடியாமல் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்ச் மாதம் நிலைகுலைந்த அவர்களது வாழ்வாதாரம் இன்னும் நிமிரவில்லை. வேலை இழப்பைத் தாங்க முடியாத குடும்பங்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி பசி - பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஆகவே மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொருளாதார ரீதியாக உடனடியாக உதவிட வேண்டியது, பொறுப்புள்ள அரசின் கடமை என்று கருதித்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்கனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் ரொக்கமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் - மத்திய அரசு 7500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஏழை எளியோர் கையில் கொடுக்கப்படும் நிவாரணப் பணம் அவர்களுக்கு வாங்கும் சக்தியை உருவாக்கி, பொருளாதார சுழற்சிக்கு உதவிடும் என்பதை உணர வேண்டும் என்றும்; அ.தி.மு.க. அரசை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

நிதியுதவி வழங்கிடுக

நிதியுதவி வழங்கிடுக

கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் சிகிச்சையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மக்கள் நல்வாழ்வுத்துறையின் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் முன்கள வீரர்களாக நின்று இரவு பகலாக மகத்தான பணியை ஆற்றி வருவதற்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பாராட்டுதலையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், உயிர்த் தியாகம் செய்தோரின் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு - அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிதியை மேலும் தாமதப்படுத்தாமல் வழங்கிட வேண்டும் என்றும், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் உரிய அடிப்படை பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அ.தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

உரிய நிதி வழங்கிடுக

உரிய நிதி வழங்கிடுக

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று ஏழு மாதங்களுக்கு மேலாகியும்- ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும் விதத்திலும்- நிதி ஒதுக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் விதத்திலும் ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.க. அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மட்டுமின்றி- அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்களே உள்ளக் குமுறலுக்குள்ளாகும் விதத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கும் ‘ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழான குடிநீர்த் திட்டப் பணிகளைக்கூட ஊராட்சி மன்றங்களிடமிருந்து பறித்து- மாவட்ட அளவில் டெண்டர் விடுவதும், 14வது நிதிக்குழு உள்ளாட்சி மன்றங்களுக்கு அளித்துள்ள அதிகாரங்களை அபகரிப்பதும் மிகுந்த வேதனைக்குரியது.

காவல்துறை அவலம்

காவல்துறை அவலம்

சமூக வலைதளங்களில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்படும் பண்பாடற்ற - அநாகரிகமான- வெறுப்புணர்வைத் தூண்டி பொது அமைதியைக் கெடுக்கும் தனிமனிதத் தாக்குதல்கள்; மாநிலத்தில் சமூக, மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் சதிச் செயலாகவே அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கருதுகிறது. அதுபோன்ற அருவருக்கத்தக்க, தரம்தாழ்ந்த அவதூறுகள் - விமர்சனங்கள் குறித்துப் புகாரளித்தால் அ.தி.மு.க. அரசு அவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பது - பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத- சமூக விரோதச் செயலுக்கு அ.தி.மு.க. அரசும் கூட்டு சேர்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

சமூகநீதியின் சுடர் விளக்காக தமிழக மக்கள் மனதில் என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு "காவி பூசுவது"; சாதாரண சாமான்ய உழைக்கும் மக்களுக்காக சித்தாந்த ரீதியாகப் போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தையே அசிங்கப்படுத்துவது; அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்துவது போன்ற சம்பவங்கள் அ.தி.மு.க. அரசின் அனுசரணையோடு அரங்கேறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்தப் பிரச்சினைகளிலிருந்து பொது கவனத்தை திசை திருப்பும் நோக்கில், மதவெறியைத் தூண்டும் பொய்ப் பிரச்சாரங்களிலும், காரியங்களிலும் இறங்குகிறார்கள். இதுபோன்ற தரம் தாழ்ந்த - ஆரோக்கியமற்ற - தனி நபர் விமர்சனங்களை திரைமறைவிலிருந்து இயக்கி, நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தும் பா.ஜ.க.விற்கும் இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பா.ஜ.க.வினரும், அ.தி.மு.க.வினரும் அளிக்கும் புகார்களின் மீது பாய்ந்து ஓடி நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, எதிர்க்கட்சிகள்- ஊடகத்தினர் அளிக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவும் ஒருதலைப்பட்சமாகவும், நடுநிலையாளர்களாக உள்ள ஊடகவியலாளர்கள் ஆணோ/பெண்ணோ அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது என்று புகார் அளித்தால் அந்தப் புகாரை அலட்சியப்படுத்துவது போன்று செயல்படுவது- சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய தமிழகக் காவல்துறை தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறி விலகிச் செல்கிறது என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறது.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

மண்டல் கமிஷன் பரிந்துரைத்து - ‘சமூகநீதிக் காவலர்' மறைந்த வி.பி.சிங் அறிவித்து - உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வால் உறுதி செய்யப்பட்டும் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் நடைமுறைப்படுத்திய மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான 27 சதவீத இடஒதுக்கீடு பா.ஜ.க. ஆட்சியில் முறையாக வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வருவதை இக்கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டைச் சீர்குலைக்க திட்டமிட்டுச் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. பட்டியிலன மக்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வழங்கி 3 சதவீத இடஒதுக்கீட்டை மறுப்பது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

"நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆர்வமின்மை மற்றும் தொடர் நடவடிக்கை இன்மை ஆகியவற்றின் காரணமாக, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்டு- அடுத்த வாய்ப்பாக அந்த மசோதாக்களை திரும்பவும் நிறைவேற்றி அனுப்பி சட்டமாக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் அதிகாரத்தையும் பறிகொடுத்த அ.தி.மு.க. அரசு, தற்போது அந்த "நீட்" தேர்வு மசோதாக்கள் குறித்தே பேசுவதை அறவே கைவிட்டு விட்டது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து - மாணவி அனிதா உள்ளிட்ட மாணவ - மாணவிகளின் தற்கொலைக்குக் காரணமான "நீட்" தேர்வை பா.ஜ.க. அரசும் கைவிடுவதாக இல்லை. பா.ஜ.க.வின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தில், அ.தி.மு.க. அரசும் இதற்குமேல் அதுபற்றி வாய் திறந்து வலியுறுத்துவதாகத் தெரியவில்லை என்பதை இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

இந்நிலையில், "கொரோனா பேரிடர் காலத்திலும் செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடக்கும்" என்ற மத்திய அரசின் அறிவிப்பைக்கூட எதிர்த்து இன்று வரை முதலமைச்சர் வழக்கம்போல கடிதமும் எழுதவில்லை; கோரிக்கையும் விடுக்க மனமில்லை. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள "நீட்" தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்திட வேண்டும் என்றும், "இந்த ஆண்டு முதல் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசையும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

திரும்பப் பெறுக!

திரும்பப் பெறுக!

கொரோனா பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்தி விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மின்சார திருத்தச்சட்ட மசோதா 2020; அத்தியாவசிய திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய அவசரச் சட்டங்களை நாடாளுமன்ற அமர்வில் இல்லாத நேரத்தில் நிறைவேற்றிய மத்திய அரசை இந்தக் கூட்டம் கண்டிப்பதோடு- இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

அதுமட்டுமில்லாமல், தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களே திகட்டும் அளவுக்கு திருப்திப்படுத்துவதற்கு, "புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020"-ஐ வெளியிட்டு- அதன்மீது "கருத்துக் கேட்பு" என ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

கழுத்து நெரிப்பு

கழுத்து நெரிப்பு


அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துரிமையைத் தொடர்ந்து நசுக்கி வரும் மத்திய ஆளுங்கட்சியினரான பா.ஜ.க.வினர், தமிழக ஊடகச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் செயல்படத் தொடங்கி இருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்களில் விவாதத் தலைப்புகள் தொடங்கி, நெறியாளர் - பங்கேற்பாளர்களைத் தீர்மானிப்பது வரை, தங்களின் அதிகாரக் கட்டளைக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்கு இங்குள்ள அ.தி.மு.க. அரசும் துணை போகிறது.

பா.ஜ.க. - அ.தி.மு.க.வின் கட்டளைகளுக்குப் பணிந்து, நடுநிலையைக் காவுகொடுக்கும் ஊடகங்கள், காலப் போக்கில் இருந்த இடம் தெரியாமல் மங்கி மறைந்துவிடும். அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்சி', கருத்துத் தணிக்கை காலகட்டத்திற்கு தமிழகத்தைப் பின்னோக்கி இழுக்க நினைப்பது, எள்ளளவும் பலிக்காது. அப்படியே பா.ஜ.க. - அ.தி.மு.க.வின் அழுத்தம், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல் ஆகியவற்றிற்குப் பயந்து, பணிந்து, ஜனநாயக நெறிகளையும், கருத்துச் சுதந்திரத்தையும், நடுநிலையையும்; ஊடகங்கள், இரண்டாம்பட்சமாகக் கருதி, பின்னிடத்திற்குத் தள்ளும் கடினமான முடிவை மேற்கொள்ளுமானால், தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அத்தகைய ஊடகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறக்கணித்திட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படும்.

English summary
all party meeting allegation, bjp directs substandard reviews
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X