அதிமுக கூட்டணியில் அமமுக சாத்தியமா?.. எடப்பாடியாரே ஒத்துக்கிட்டாலும் தினகரன் ஏத்துக்க மாட்டாரே!
சென்னை: அதிமுக கூட்டணியில் அமமுகவை இணைக்க பாஜக விரும்பும் நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற ஒரு இணைப்பை எடப்பாடியார் ஏற்க மாட்டார். அப்படியே அவர் ஏற்றாலும் சசிகலாவும் தினகரனும் ஏற்பார்கள் என்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பாஜகவின் அமித்ஷா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் வாக்கு சிதறலை தடுக்க அமமுகவையும் கூட்டணியில் இணையுங்கள் என அதிமுகவிடம் கூறியதாக தெரிகிறது.
இதற்கு எடப்பாடியாரோ மறுத்துவிட்டாராம். கூட்டணியில் நுழைத்தால் அதிமுகவிலும் இவர்கள் நுழைந்துவிடுவார்கள் என அதிமுக நிர்வாகிகள் கருதுவதே இந்த மறுப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

அமித்ஷா
அதிமுக கூட்டணியில் அமமுக இணைப்பு குறித்து அமித்ஷா கூறியதிலும் விஷயம் இருக்கிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அமமுக கணிசமான வாக்குகளை பெற்றது, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை முடித்துக் கொண்டு சசிகலா தமிழகம் வந்த போது மக்கள் மனதில் ஒரு அன்பான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்.

டிடிவி தினகரன்
தங்கள் ஒரே எதிரி திமுகதான் என கூறி வந்தாலும் இந்த முறை சசிகலாவும் தினகரனும் இணைந்து அதிமுக ஓட்டுக்களை சிதறடித்து தங்களின் செல்வாக்கை அதிமுக தொண்டர்களுக்கு காட்டுவர் என தெரிகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அமித்ஷா அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் இதற்கு எடப்பாடியாரே ஒப்புக் கொண்டாலும் டிடிவி தினகரன் ஒப்புக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது.

எதிர்க்கட்சிகள்
பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விலையேற்றத்தை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. இதனால் அத்திசாவசிய பொருட்களின் விலை உயரும் என பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். மத்திய அரசின் இயலாமையை கண்டித்து எதிர்க்கட்சிகள் கண்டன அறிக்கை விட்டுள்ளார்கள்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு
அதில் டிடிவி தினகரனும் ஒருவர். பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் சிலிண்டர் விலையையும் திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறிருக்கையில் அவர் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைந்தால் நிச்சயம் அமமுக தலைத் தூக்க முடியாது என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.

சசிகலா
ஜெயலலிதாவுடன் இத்தனை ஆண்டுகள் பயணித்த சசிகலாவும் இது போன்ற அரசியல் நெளிவு சுளிவுகளை தினகரனுக்கு சொல்லித் தராமல் இருந்திருக்க மாட்டார். இதனால் அமமுக தலைமையில் புதிய அணி உருவாகும் என்றே தெரிகிறது. அதிமுக. திமுக கூட்டணியில் அதிருப்தியில் உள்ள கட்சிகள் அமமுகவில் இணையலாம் என அரசியல் நோக்காளர்கள் தெரிவித்துள்ளார்கள்.