அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்.. செயற்கை சுவாசத்தில் சிகிச்சை
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக பொருளாளருமான வெற்றிவேல், அதிமுகவிலிருந்தபடி டிடிவி தினகரனுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.
எனவே சபாநாயகர் அவர் எம்எல்ஏ பதவியை பறித்தார். உச்சநீதிமன்றத்திலும் சபாநாயகர் உத்தரவு செல்லுபடியானது. இடைத் தேர்தலில் இவரால் வெற்றி பெற முடியவில்லை.
துணை நோய் இருப்பவர்களை அதிகமாக கொல்லும் கொரோனா அரக்கன்...ஆய்வில் புதிய பூகம்பம்!!

வீட்டு தனிமை
இருப்பினும் அமமுக கட்சியின் பொருளாளராக தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் இருந்தார். இந்த நிலையில், கடந்த 6ம் தேதி வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அவர் முதலிலேயே மருத்துவமனையில் சேராமல் வீட்டில் இருந்தது பிரச்சினையை அதிகரித்துவிட்டது.

மருத்துவமனையில் அனுமதி
ஏனெனில், திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், போரூரிலுள்ள, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு செயற்கை சுவாசம் மூலம், சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

கண்காணிப்பு
வெற்றிவேல் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர். இணை நோய்களும் உள்ளன. வயது மூப்பும் பிரச்சினை. எனவே, அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்
இந்த நிலையில், மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவர் உடல்நலம் குறித்து டிடிவி தினகரன் விசாரித்துள்ளாராம். தங்கத் தமிழ்ச் செல்வன் போன்ற ஆதரவாளர்கள் கட்சி மாறியபோதும், வெற்றிவேல்தான், டிடிவி தினகரனின் வலதுகரம் போல செயல்பட்டவர்.