பாமக ஜாதிக்கட்சி இல்லை! முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அன்புமணி ராமதாஸ்! அடுத்தது என்ன?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி ஜாதிக்கட்சி இல்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் சாதித் தலைவர் மட்டுமில்லை என்றும் இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ராமதாசும் ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
பாமக தலைவரான பிறகு அன்புமணி முன்னெடுக்கும் புதுமையான அரசியல் இனி அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

பாமக தலைவர்
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை அனைத்து சமுதாய மக்களுக்காகவும் தொடங்கப்பட்ட கட்சி என்றும் பாமகவில் எல்லா மதங்களை சேர்ந்தவர்களும், எல்லா சாதியை சேர்ந்தவர்களும் இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பாமக எண்ணற்ற சாதனைகளை புரிந்தும், ஜாதிக்கட்சி என்ற குறுகிய வட்டத்தில் அடைத்து பார்க்கப்படுவது வேதனையாக உள்ளதாக தெரிவித்தார். இதேபோல் ராமதாஸை ஜாதித்தலைவராக மட்டும் பார்க்கிறார்கள் என்றும் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

தலைசிறந்த தலைவர்
இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ராமதாசும் ஒருவர் எனவும் பாமகவின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதி தான் என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கரை பொறுத்தவரை அவர் உலகத் தலைவர் என்றும் ஆனால் அவரை ஒரு குறுகிய வட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் தலைவர் போல் இன்று ஆக்கியிருக்கிறார்கள் எனவும் வேதனைத் தெரிவித்தார்.

நிச்சயம் உடைப்போம்
பாமக ஜாதிக்கட்சி, ராமதாஸ் ஜாதித் தலைவர் என்று சில அமைப்புகள் சித்தரித்து ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பதாகவும் அதனை தாங்கள் உடைத்தெறிந்து கொண்டு வருவதாகவும் நிச்சயம் அதில் வெற்றிபெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் இந்தப் பேச்சு அரசியல் ரீதியாக மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

புதிய அரசியல்
பாமக என்றாலே அது வன்னியர் சமுதாய கட்சி என்ற ஒரு பிம்பம் உள்ள சூழலில், இனி அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் கட்சியில் பொறுப்புகள் வழங்கி புதிய அரசியலை அன்புமணி முன்னெடுக்க இருப்பது அவரது முதல் பேச்சிலேயே தெள்ளத் தெளிவாக புரிகிறது.