குட் நியூஸ்.. சென்னையில் கால்பதித்த 'ஆப்பிள்'.. ஐபோன் 11 மொபைல் உற்பத்தி துவங்கியது.. விலை குறையும்
சென்னை: மத்திய அரசின் ஆத்மநிர்பார் (சுய சார்பு) இந்தியா முயற்சிக்கு மற்றொரு வெற்றி கிடைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம், அதன் முன்னணி செல்போன் மாடல்களில் ஒன்றான ஐபோன் 11-ஐ சென்னையின் ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் ஒரு முன்னணி மாடல் மின்னணு சாதனத்தை தயாரிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த தகவலை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் இன்று அறிவித்தார்.
கோவாக்சின் தடுப்பு மருந்து...டெல்லி எய்ம்ஸில் மனித பரிசோதனை துவங்கியது!!

பியூஷ் கோயல் உற்சாகம்
"மேக் இன் இந்தியா திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைத்துள்ளது! ஆப்பிள், இந்தியாவில் ஐபோன் 11 ஐ தயாரிக்கத் தொடங்கியுள்ளது. நமது நாட்டில் முதல் முறையாக ஒரு சிறந்த மாடலை ஆப்பிள் தயாரிக்க தொடங்கியுள்ளது. " இவ்வாறு பியூஷ் கோயல் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் அசெம்பிள்
இதற்கு முன்பு, ஐபோன் தனது எக்ஸ்ஆர் வகை செல்போனை இந்தியாவில் 2019ல் அசெம்பிள் செய்ய தொடங்கியது. 2017ம் ஆண்டில், ஆப்பிள் ஐபோன் எஸ்இ வகை போன் உற்பத்தியை பெங்களூர் ஆலையில் தொடங்கியது. இருப்பினும் ஐபோன் 11 என்பது தற்போதைய நிலையில், அந்த நிறுவனத்தின் மிகவும் காஸ்ட்லியான போனாகும்.

சென்னை, பெங்களூர்
ஆப்பிள் நிறுவனம் பெங்களூருக்கு அருகிலுள்ள தனது விஸ்ட்ரான் ஆலையில் ஐபோன் எஸ்இ போனை இந்த ஆண்டு முதல், தயாரிக்க திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இரு தென் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஆப்பிள் கால் பதிப்பது தொழில்துறைக்கான ஊக்கமாக பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் அசெம்பிள் நிறுவனம்
இந்த மாத தொடக்கத்தில், ஆப்பிள் நிறுவனத்திற்கான, முன்னணி சப்ளையரான ஃபாக்ஸ்கான், இந்தியாவில் ஆலைகளை விரிவுபடுத்துவதற்காக 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்ட தகவல் வெளியானது. ஃபாக்ஸ்கானுக்கு அடுத்தபடியாக ஐபோனுக்கான, 2வது பெரிய அசெம்பிளரான பெகாட்ரான் நிறுவனமும் நமது நாட்டில், முதலீடு செய்வதாகவும், எதிர்காலத்தில் துணை நிறுவனத்தை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஐபோன் விலை குறையலாம்
சென்னையில், ஆப்பிள் போன் உற்பத்தி அடுத்தடுத்து மேலும் அதிகரிக்கப்படும், ஆப்பிள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 11ஐ ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுல்ளதால், சீனாவை நம்பியிருப்பது குறையும். இந்தியாவில் இப்போதும், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 11 மொபைல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே உடனடியாக அவற்றின் விலை குறையவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இந்தியாவில் ஐபோன் 11 விலை கணிசமாக குறையும். ஏனெனில், உள்ளூர் உற்பத்தி காரணமாக, 22% இறக்குமதி வரியை ஆப்பிள் மிச்சப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.