கொரோனாவால் பொதுக்குழுவுக்கு சிக்கல் ஏற்படுமா? கலெக்டர் முக்கிய அறிவிப்பு! எடப்பாடி பிளான் என்னவாகும்
சென்னை: கொரோனா பரவல் காரணமாக அதிமுக பொதுக்குழு நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவில் செயல்பட்டு வந்தது. இருப்பினும், இரட்டை தலைமையில் அதிமுகவால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.
இந்தச் சூழலில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான விவாதம் எழுந்தது.
பை பை... திடீரென சரிந்த கொரோனா பாதிப்பு! ஆனால் சிகிச்சையில் மட்டும் இத்தனை பேரா? முழு விபரம் இதோ!

அதிமுக
கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியானது. முதலில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கிட்டத்தட்ட சரிசமமான பலமே இருந்தது. இருப்பினும், நாட்கள் செல்ல செல்ல பலரும் எடப்பாடி பக்கம் சாய்ந்தனர். மேலும், பொதுக்குழுவிலும் கூட எடப்பாடி தரப்பிற்கே ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டம்
இதனால் எடப்பாடி கைக்குக் கட்சி முழுமையாகச் செல்லும் என்ற நிலை உருவான நிலையில், ஒபிஎஸ் இதைத் தடுக்க பல முயற்சிகளை எடுத்தார். நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எதையும் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

23 தீர்மானங்கள்
அதில் முதலில் அதிமுக அவை தலைவராகத் தமிழ் மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 23 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. இருப்பினும், அந்த தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக தொண்டர்கள் பெரும்பாலும் ஒற்றை தலைமையையே விரும்புவதாகவும் இது தொடர்பான தீர்மானத்துடன் அந்த 23 தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

அடுத்த பொதுக் குழுக் கூட்டம்
அதன்படி ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்கை, அவசர வழக்காக நாளை விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

கொரோனா
இப்படி அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க ஓபிஎஸ் தரப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே மறுபுறம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாநிலத்தில் 2654 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 1066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்
கொரோனா பரவல் காரணமாகக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டால், ஜூலையில் 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும், கொரோனா பரவல் நிலைமை கையை மீறிச் செல்லும் அளவுக்கு இல்லை என்பதால் தற்போதைய சூழலில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

திருவள்ளூர் ஆட்சியர்
அதாவது கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பொதுக்குழுவை நடத்துவதில் எந்தவொரு சிக்கலும் இருக்காது என்றே கூறப்படுகிறது. இது தொடர்பாகத் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அதிமுக பொதுக்குழுவில் கொரோனா விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆல்பி ஜான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.