கட்சி பணத்தில் கையாடல் செய்ததாக ஓபிஎஸ்சுக்கு கட்டம் கட்ட ரெடியாகும் எடப்பாடி: அஸ்பயர் சுவாமிநாதன்
சென்னை: ஓ.பன்னீர் செல்வத்தை மொத்தமாக கட்சியை விட்டு கட்டம் கட்ட முடிவு செய்திருக்கின்றனர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் பொருளாளராக இருந்த பொழுது பல முறைகேடுகளையும் கையாடல்களையும் செய்திருக்கிறார் என்று குற்றம் சாட்டி அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒற்றைத்தலைமை பிரச்சினையால் அதிமுக இரண்டு பட்டு கிடக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று தனது பக்கம் பெரும் ஆதரவு படையை சேர்த்துக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஒற்றைத்தலைமை.. சட்டரீதியாக சமாளிக்க வழக்கறிஞர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை..பொதுக்குழு நடக்குமா?
ஓ.பன்னீர் செல்வத்தை துரோகி என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டனர் நிர்வாகிகள். அவர் கட்சிக்கு துரோகம் செய்து விட்டார் என்று முன்வைக்கும் கருத்துக்கள் தொண்டர்களிடையே எடுபடவில்லை. பல ஊர்களில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

அதிமுக பொதுச்செயலாளர்
எப்படியும் பொதுச்செயலாளர் ஆகியே தீருவேன் என்று முழு முயற்சி செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. வரும் 11ஆம் தேதியன்று பொதுக்குழு கூட்டத்தில் அதற்கான தீர்மானங்களையும் தயார் செய்து வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

ஓ.பன்னீர் செல்வம்
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி என்பது பொதுக்குழு உறுப்பினர்களாலோ, மாவட்ட செயலாளர்களாலோ தேர்ந்தெடுக்கப்பட கூடிய பதவி அல்ல அது கட்சியின் உறுப்பினர்களால் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவி. மாவட்ட செயலாளர்களையும் பொதுக்குழு உறுப்பினர்களை வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்து வாங்கி இருக்கலாம். ஒட்டுமொத்த ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களையும் எப்படி அவர்கள் விலை கொடுத்து வாங்க முடியும்? என்று கேட்கின்றனர் ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்.

டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
அதே நேரத்தில் ஐபிஎல் ஏலம் போல ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் .

கட்டம் கட்டி வெளியேற்ற முடிவு
பன்னீர்செல்வம் பொருளாளராக இருந்த பொழுது பல முறைகேடுகளையும் கையாடல்களையும் செய்திருக்கிறார் என்று குற்றம் சாட்டி அந்த காரணங்களை சுட்டிக்காட்டி அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவு எடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன்
இந்த பகீர் புகாரை கிளப்பியிருப்பவர் அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன், இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் ஓபிஎஸ் அவர்களும் பொருளாளராக இருந்த பொழுது பல முறைகேடுகளையும், கையாடல்கலையும் செய்துள்ளார் என்ற புகார் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தக் காரணங்களை சுட்டிக்காட்டி அவரும் விரைவில் நீக்கப்படுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதிவிட்டுள்ளார்.