நீதி கிடைக்காது என்பதால்தான் தஞ்சை பள்ளி மாணவி வீடியோவை வெளியிட்டோம்.. அதில் தப்பில்லை: அண்ணாமலை
சென்னை: பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டால்தான் படத்தை வெளியிட கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். மாணவியின் பெயரையும் அவரது வாக்குமூல வீடியோவையும் வெளியிட்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை அண்ணாமலை அளித்தார்.
தஞ்சை பள்ளி மாணவி விவகாரத்தில் அவர் படிக்கும் அரியலூர் தனியார் பள்ளியில் கட்டாய மத மாற்றத்திற்கு வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்றும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
உத்தரகாண்ட் தேர்தல்: 4 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ500க்கு கீழ் சிலிண்டர் விலை- காங். வாக்குறுதி
இந்த நிலையில் "தஞ்சை பள்ளி மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாக எந்த புகாரும் இல்லை. சக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த புகாரை யாரும் வைக்கவில்லை" என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவி தற்கொலை
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. அப்போது மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில் தஞ்சை பள்ளி மாணவி தொடர்பாக கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை.

விசாரணை அதிகாரி
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, மாணவி பேசிய வீடியோவை விசாரணை அதிகாரியிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார். மாணவி மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும். மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோ போலியானது என்பதற்கு ஆதாரம் இல்லை. தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

உயிரிழந்த மாணவி
மாணவி இறந்த விவகாரத்தில் யாரும் மதச்சாயம் பூசவில்லை. உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். மாணவியின் இறப்பிற்கு நீதி கிடைக்காததால்தான் போராடுகிறோம் என்றார். மேலும் நியாயம் கிடைக்காது என தெரிந்ததால்தான் தஞ்சை பள்ளி மாணவியின் புகைப்படத்தையும் வாக்குமூல வீடியோவையும் வெளியிட்டோம்.

தஞ்சை பள்ளி மாணவி
பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில்தான் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது. தஞ்சை பள்ளி மாணவிக்கு நிகழ்ந்தது பாலியல் துன்புறுத்தல் சம்பவம் கிடையாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.