என்னாது.. வாரணாசியை விட்டு மதுரையில் மோடி போட்டியிடப் போகிறாரா? பரபரப்பு போஸ்டர்கள்
சென்னை: 2024 -ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் எனக் கோரி பாஜக நிர்வாகி டாக்டர் சரவணன் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், அவர் பயணிக்கும் சாலையில் அவரது கண்களில் படும் படி பளிச்சென படா சைஸ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஏற்கனவே ராகுல்காந்தி கேரளாவின் வயநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாறி இங்குள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போது பாஜகவினர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை: ரூ31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

பிரதமர் மோடி
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி நாளை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினரும் விழா ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மற்றும் மதுரை சாலைகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

மோடிக்கு அழைப்பு
மதுரை மாநகர் பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதமர் மோடி மதுரையில் போட்டியிட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல்
2024-ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போதே பாஜகவுக்கு வெற்றி என்கிற வகையில் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்.

மதுரைக்காரர்கள்
சென்னையின் பிரதான சாலைகளில் பளிச்சிடும் இந்த போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மதுரைக்காரர்களுக்கும் போஸ்டர்களுக்கும் அப்படி என்ன தான் பந்தமோ தெரியவில்லை, அந்த ஊர் அரசியல்வாதிகள் அடித்து ஒட்டும் சுவரொட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கிறது. அந்த வரிசையில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அடித்து ஒட்டியுள்ள இந்த சுவரொட்டியும் இடம்பிடிக்கிறது.

500 பேருடன் பயணம்
இதனிடையே தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க மதுரையில் இருந்து 500 நபர்களை வேன்களிலும், பேருந்துகளிலும் திரட்டி சென்னைக்கு அழைத்துச் செல்கிறார் பாஜக நிர்வாகி சரவணன். ஏற்கனவே ராகுல்காந்தி கேரளாவின் வயநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாறி இங்குள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போது பாஜகவினர் மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.