சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழுக்கு உயர்வு செய்வது போல புதுவேடமிட்டு,, பண்பாட்டுப் படையெடுப்பு நடத்த பாஜக முயற்சி.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக அரசின் ஊடுருவல் முயற்சிகளை திமுக விரட்டியடிப்பதால் நேரடியாக சமஸ்கிருதம்-இந்தி என்று பேசாமல், தமிழுக்கு உயர்வு செய்வது போல புதுவேடமிட்டு, பண்பாட்டுப் படையெடுப்பை நடத்திட பாஜக அரசு முயற்சிக்கிறது. என திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக பொதுக்குழு 10ம் தேதி கூடவுள்ளதை குறிப்பிட்டு ஸ்டாலின் இன்று வெளியிட்டு இருந்த அறிக்கையில், "தமிழகத்தின் தனித்துவத்தையும் தமிழர்களின் உரிமைகளையும் பறிக்கும் மத்திய அரசின் திட்டங்களை, ராஜாவை விஞ்சும் ராஜ விசுவாசியாக இருந்து செயல்படுத்துவதில், அதிமுகவுக்கே முதலிடமாகும். அதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு, 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வைத் திணித்து மத்திய அரசு உத்தரவிடுவதற்கு முன்பே, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது.

நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழகத்தில் சமூக நீதி வழியாக ஏற்பட்டுள்ள கல்வி மறுமலர்ச்சி என்பது, தலைமுறை தலைமுறையாகப் படிக்க முடியாமல் முடக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினரை இன்று மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் இன்னும் பிற துறைகளிலும் சிறந்து விளங்கச் செய்கிறது. அந்த நிலையைத் தகர்த்திடும் வகையில், மத்திய அரசு திணிக்க நினைப்பதுதான், புதிய கல்விக் கொள்கை.

புரியாத புதிர்

புரியாத புதிர்

ஏழை - எளிய - கிராமப்புற - ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதறடித்து உயிர் குடித்த, 'ஆள்மாறாட்ட' புகழ் நீட் தேர்வு போன்ற கொடுமைதான் புதிய கல்விக் கொள்கை. அதன் முன்னோட்டம்தான், 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு சிறார்கள் மீது திணிக்கப்படும் பொதுத்தேர்வு. தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை என ஒன்று இருக்கிறதா, அதில் என்ன நடக்கிறது என்பது அந்தத் துறையின் அமைச்சருக்குத் தெரிகிறதா என்பதே புரியாத நிலை உள்ளது.

செங்கோட்டையன் மழுப்பல்

செங்கோட்டையன் மழுப்பல்

பள்ளிகளில் மதவாத இயக்கங்கள் செயல்படும் ஆபத்தான போக்கை பள்ளிக் கல்வித்துறை அதிகாரியே சுற்றறிக்கை மூலம் அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுக்கச் சொன்ன நிலையில், துறையின் அமைச்சர் செங்கோட்டையன் அதனை மறுத்து மழுப்பலாக விளக்கம் அளிப்பதன் மூலம், இவர்கள் எந்த அளவுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அஞ்சியஞ்சிச் சுருண்டிருக்கிறார்கள் என்பது விளங்கும்.

சிதைக்கப்படுகிறது

சிதைக்கப்படுகிறது

திறனற்ற இவர்களின் மோசமான செயல்பாடுகளால், இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமான தலைவர் கருணாநிதியின் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் எனும் சமூக நீதித் திட்டம் சிதைக்கப்படும் கொடுமையை ஆங்கில இணைய ஊடகம், காட்சிகள் மூலமாகப் பதிவிட்டுள்ளது. இப்படி எத்தனையோ சீரழிவுகளின் கிடங்காக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

லேசான அலட்சியம்

லேசான அலட்சியம்

இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்பது, தமிழக மக்களின் பெருவிருப்பம். அதனை திமுக தலைமை‌யிலான அணிதான் மாற்றும் என்பது, தமிழகத்தின் உறுதியான நம்பிக்கை. அதற்கான ஜனநாயகக் களத்தை எதிர்பார்த்திருக்கிறது திமுக. இடையில், இடைத்தேர்தல் போன்ற, நாம் சந்தித்த இடையூறுகள்கூட, நம்முடைய லேசான சோர்வையும் அலட்சியத்தையும் விரட்டி அடிக்கக்கூடிய விழிப்புணர்வு நிகழ்வேயாகும்.

பாஜக புதுவேஷம்

பாஜக புதுவேஷம்

அதேநேரத்தில், "தமிழகத்தில் தங்களுக்கு வாய்த்த அடிமைகள் அதி புத்திசாலிகள்" என நினைத்து, அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கும் மத்திய அரசு, தனது தமிழர் விரோதத் திட்டங்கள் அனைத்தையும் தமிழக அரசு மூலம் செயல்படுத்திக் கொள்வதில் மிகவும் முனைப்பாக இருக்கிறது. சமஸ்கிருத்தையும் இந்தியையும் திணித்து, அதன் மூலம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை நிகழ்த்திடத் திட்டமிட்டுள்ள பாஜக அரசின் ஊடுருவல் முயற்சிகள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கண்காணித்து, அதனை விரட்டியடிப்பதில் முன்னணியில் இருக்கிறது திமுக. அதனால், நேரடியாக சமஸ்கிருதம்-இந்தி என்று பேசாமல், தமிழுக்கு உயர்வு செய்வது போல புதுவேடமிட்டு, பண்பாட்டுப் படையெடுப்பை நடத்திட பாஜக அரசு முயற்சிக்கிறது.

காவிச்சாயம்

காவிச்சாயம்

தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை, இந்தியப் பிரதமர் மோடி பாங்காக்கில் வெளியிட்ட நிலையில், பாஜகவின் தமிழகக் கிளையின் இணையப் பகுதியில், திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் இழிவுபடுத்தி, வான்புகழ் வள்ளுவரை அவமதிக்கும் மோசமான செயலாகும்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று எவ்வித சாதி - மத அடையாளங்களுக்கும் ஆட்படாமல், சமூக நீதியின் அடிப்படையில் மனிதம் போற்றிய ஒப்பற்ற திருக்குறளை வழங்கியிருப்பவர், திருவள்ளுவர். மொழிகள் கடந்து, நாடு எல்லைகள் கடந்து, உலகப் பொதுமறையாக திருக்குறள் போற்றப்படும் நிலையில், அதனை இயற்றிய வள்ளுவரை தங்கள் மதவாத எண்ணத்திற்கேற்ப வண்ணம் பூசி, பண்பாட்டுப் படையெடுப்பை பாஜக மேற்கொண்டிருக்கிறது.

தமிழர்களின் தனித்துவம்

தமிழர்களின் தனித்துவம்

பலரது உள்ளங்களைப் பண்படுத்திய - பலரின் வாழ்வைத் திருத்திய உயர்தனிப் பெரு நூலாம் திருக்குறளைப் படித்து திருந்துவதற்குப் பதிலாக, குறளையும் தமிழையும் தங்கள் மதவாதக் கருத்துகளுக்குப் பயன்படுத்த முனைந்திடுவோரை, தமிழர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருக்கிறது. திமுகவைப் போலவே பல இயக்கத்தினரும் பாஜகவின் இந்த திரிபுவாதத்தைக் கண்டித்திருப்பது, தமிழகத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

அவமதிப்பு

அவமதிப்பு

தமிழர்களின் தனிப்பெரும் அடையாளமாக உள்ள புலவர்கள், தலைவர்கள் சிலைகளை அவமதிக்கும் போக்கின் தொடர்ச்சியாக, தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் வள்ளுவர் சிலை மீது கருப்பு வண்ணத்தை கயவர்கள் பூசியிருப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், அதிமுக இப்போதும் மென்மைப்போக்குடன் - மெத்தனமாகவே செயல்படுவதுடன், தன் அடிமைத்தனத்தை டெல்லி எஜமானர்களுக்குக் காட்டுவதில் மட்டும் படுவேகமாக இருக்கிறது.

மனசாட்சியாக கூடுகிறது

மனசாட்சியாக கூடுகிறது

இத்தகைய நிலையில்தான் திமுகவின் பொதுக்குழு கூடுகிறது. நாட்டுக்கு எப்படி நாடாளுமன்றமோ, அதுபோல திமுகவுக்குப் பொதுக்குழு. நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் குரலும் நலனும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும்! திமுகவின் பொதுக்குழு என்பது, தொண்டர்களின் உயர்வான குரல். எதிர்காலப் பயணத்திற்கான தெளிவான ஏற்றமிகு பாதையை வகுக்க, ஒவ்வொரு உடன்பிறப்பின் மனசாட்சியாகக் கூடுகிறது, திமுக பொதுக்குழு.

திமுக பொதுக்குழு

திமுக பொதுக்குழு

நமக்கான பயணத் திட்டத்தை வகுத்து, தமிழ்நாட்டை மத்திய அரசிடமிருந்தும்-மாநில அரசிடமிருந்தும் மீட்பதற்கு, திமுக பொதுக்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புகளான உங்கள் ஒவ்வொருவரின் இதயக்குரலாக வெளிப்படும் என்ற உறுதியினை வழங்குகிறேன். நாளைய வெற்றிக்குக் கட்டியம் கூறிட, நவம்பர் 10 ஆம் தேதி கூடுகிறது திமுகவின் பொதுக்குழு," என தெரிவித்துள்ளார்.

English summary
dmk leader mk stalin attacks BJP attempt to launch a cultural invasion in tamil nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X