8 இடங்களுக்கு குறி.. வேலையை ஆரம்பித்த பாஜக தலைகள்.. மாதந்தோறும் கேம்ப் - அடுத்து வேட்டை தான்!
சென்னை : 2024 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து வேலைகளை தீவிரப்படுத்தியிருக்கும் பாஜக, முதற்கட்டமாக 8 தொகுதிகளில் வேலையை ஆரம்பித்துள்ளது.
மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக ஆட்சியமைத்து வரும் பாஜகவுக்கு இருக்கும் முக்கியமான குமுறல், தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி கூட இல்லை என்பதுதான்.
2024 நாடாளுமன்றத்தில் தேர்தலில் இந்த நிலை தொடரக்கூடாது, இரட்டை இலக்கத்தில் எம்.பி சீட்களை பிடித்துவிட வேண்டும் என இப்போது இருந்தே முழுமுயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாஜக.
“தலித்”ஆக பிறந்தவர்.. “சாதி” ஒடுக்குமுறைகளை சந்தித்தவர்- இளையராஜாவை வாழ்த்தி பாஜக கொடுத்த அறிமுகம்

வேகமெடுத்த பாஜக
பா.ஜ.க தமிழகத்தில் தடம் பதிக்கும் முயற்சிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்கள் மத்தியில் பாஜகவை வளர்த்தெடுப்பதற்காக பாஜக மேலிட தலைவர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்த பின்னர் அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்றார். அதன்பிறகு அக்கட்சியின் செயல்பாடுகளில் வேகம் கூடியுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவின் நடவடிக்கைகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது பாஜக.

25 லட்சியம்
2024ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்தான் தமிழக பாஜகவின் குறி. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக குஜராத் பாஜக பாணியில் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து அடிமட்ட அளவில் பாஜகவை பலப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். இதற்காக தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த 8 மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. 2024 தேர்தலில் 25 தொகுதிகள் லட்சியம் எனும் குறிக்கோளோடு செயல்பட்டு வருகின்றனர் பாஜகவினர்.

வெற்றி வாய்ப்புள்ள ஏரியா
அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் குறிப்பிட்ட சில தொகுதிகளை குறிவைத்து பா.ஜ.க தமது வேலையைத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே வெற்றி பெற்றிருக்கும் தொகுதிகள், வெற்றிக்கு நெருக்கமாக வந்து தோல்வியடைந்த தொகுதிகள், பாஜக வலுவான கட்டமைப்பைக் கொண்ட தொகுதிகள் என பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளனர்.

8 தொகுதிகள்
அதன்படி, பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாக கருதப்படும் தென்சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், கோவை ஆகிய 8 தொகுதிகளில் தேர்தல் பணிகளை இப்போதே தீவிரமாகத் தொடங்கிவிட்டது பாஜக. இந்த தொகுதிகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், ஏற்கெனவே தேர்தல் பணியாற்றியவர்கள், அந்த தொகுதிகளிலேயே வசிப்பவர்கள் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீடு வீடாக
அந்தத் தொகுதிகளில் பாஜகவின் கட்டமைப்புகளை பலப்படுத்துவது, வீடு வீடாகச் சென்று மத்திய அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பது, மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்த தொகுதிகளில் பாஜகவினரின் முகங்கள் எப்போதும் தென்பட வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது டெல்லி தலைவர்களையும் இப்பகுதிகளுக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

பொறுப்பாளர்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, வேலூர் ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளராக மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று நெல்லை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல மாதந்தோறும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு வந்து முகாமிட்டு கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

இது முதற்கட்டம் தான்
இந்த 8 தொகுதிகள் என்பவை முதற்கட்டம் தான் என்றும், இனிவரும் காலங்களில் அடுத்த பட்டியல் அடையாளம் காணப்பட்டு, அந்தத் தொகுதிகளுக்கும் மேலிடம் பொறுப்பாளரை நியமிக்கும் என்றும் கூறுகிறார்கள் தமிழக பாஜகவினர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும், தாங்கள் தீவிரமாக வேலை பார்க்கும் இந்தத் தொகுதிகளை எப்படியாவது பாஜக பெற்று விடும் என்றும் உற்சாகமாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.