துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் தனியறையில் கிடந்த தொழிலதிபர்: தற்கொலை முயற்சி? போலீஸ் விசாரணை
சென்னை: அடையாறில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தொழிலதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்த நிலையில் தவறுதலாக துப்பாக்கி குண்டு தோள்பட்டையில் பாய்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை அடையாறு முத்துலட்சுமி சாலையில் குவாட்ரண்ட் அபார்ட்மெண்டில் வசிப்பவர் செந்தில்(39). சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி பைரவி (31) இவர் தொல் மருத்துவ நிபுணர். பைரவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதையடுத்து நேற்று முன் தினம் அவருக்கு வளைக்காப்பு நடத்தப்பட்டது. நெருங்கிய உறவினர்கள் கூடிய நிலையில் சந்தோஷமாக வளைக்காப்பு நடத்தி பைரவி அவரது தாய்வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார், செந்தில் அப்போது அவர் துப்பாக்கியை எடுத்து சுத்தம் செய்யும்போது ட்ரிக்கரில் கைப்பட்டு அது பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் செந்தில் கீழே விழுந்துவிட்டார். வீட்டில் பலத்த சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தவர் வந்து தட்டிப்பார்த்து குரல் கொடுத்துள்ளனர்.சத்தம் வராமல் போகவே போலீஸுக்கு புகார் அளித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளேச் சென்று பார்த்துள்ளனர். உள்ளே ரத்த வெள்ளத்தில் செந்தில் கிடந்ததைப்பார்த்து அவரை மீட்டு ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர்.
வீட்டில் உள்ள துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் பேசும் நிலைக்கு வந்த செந்திலிடம் போலீஸார் விசாரணை நடத்தினர், அப்போது செந்தில் தன் மனைவிக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி விட்டு வீட்டில் இருந்தபோது தனது கைதுப்பாக்கியை எடுத்து சுத்தம் செய்ய துடைத்தபோது தவறுதலாக வெடித்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைத்துப்பாக்கிக்கு செந்தில் லைசென்ஸ் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனாலும் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதை இப்படி அஜாக்கிரதையாக இயக்க வாய்ப்பில்லை, சேஃப்டி கேட்ச் போட்டே துப்பாக்கியை கையில் வைத்திருப்பார்கள்.

துப்பாக்கியை லோடு செய்து வைத்திருக்கும்போது யாரும் சுத்தம் செய்ய வாய்ப்பில்லை, அதை அன்லோடு செய்து தோட்டாக்களை எடுத்தப்பின்னரே சுத்தம் செய்வார்கள், அஜாக்கிரதையாக செந்தில் இயக்கியதாக கூறுவது குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனனர்.
துப்பாக்கி சூடு நடந்ததாலும் அஜாக்கிரதையாக இருந்ததாலும் செந்தில் காயமடைந்துள்ளார், அவரது துப்பாக்கி லைசென்ஸ் உள்ளது என்றாலும் துப்பாக்கி சூடு காயம் என்பதால் அவர்மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த செந்திலின் மனைவி டாக்டர் பைரவி டெர்மட்டாலஜிஸ்ட், அவர் தவறான சிகிச்சை அளித்ததாக கடந்த ஆண்டு பிக்பாஸ் புகழ் மாடலிங் ரைசா பகீரங்கமாக புகார் அளிக்க டாக்டர் பைரவி அவருக்கு தனக்கு மான நஷ்ட வழக்கு போடுவதாக நோட்டீஸ் அனுப்பினார்.
அதிர்ஸ்டவசமாக செந்தில் தோளில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. சற்று கீழே இறங்கியிருந்தால் இதயத்தில் பாய்ந்திருக்கும், அதேபோல் அபார்ட்மெண்ட் கலாச்சாரப்படி அடுத்த வீட்டில் எது நடந்தாலும் என்ன என இருக்காமல் அக்கம்பக்கத்தவர் தக்க நேரத்தில் தகவல் கொடுத்ததால் போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முடிந்தது. இல்லாவிட்டால் ரத்த இழப்பு ஏற்பட்டே செந்தில் உயிரிழக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.