விரோதம்.. இனியும் ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட முடியாது.. ஒரே போடாக போட்ட எடப்பாடி.. நீக்கமா?
சென்னை: அதிமுக கட்சி விதிகளை ஓ பன்னீர்செல்வம் மீறிவிட்டார், கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார், இதனால் இனியும் அவருடன் இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக இன்று நடந்த வழக்கில் மிக முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன . அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது, இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளையும் விசாரணை செய்யப்பட உள்ளது.
இது போக பொதுக்குழுவிற்கு தடை கோரும் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு நாளை விசாரணை செய்ய உள்ளது.
தமிழ்நாட்டை இரண்டாக இரண்டாக பிரிக்கும் பேச்சுக்கள் - ஓ இதான் காரணமா! அப்போ கொங்குநாடு?

கூடுதல் மனு
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஓ பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில், அதிமுகவில் 2 சதவிகித ஆதரவு கூட இல்லாத ஓ பன்னீர்செல்வம், சுய லாபத்திற்காக கட்சி ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கட்சியின் நிர்வாகிகள் எல்லோரும், தொண்டர்கள் உட்பட, ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

என்ன சொன்னார்?
ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். ஒற்றை தலைமை வர கூடாது என்பதற்காக அவர் செயல்பட்டு வருகிறார். கடந்த பொதுக்குழுவிலேயே ஒற்றை தலைமை தொடர்பாக கூட்டாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஒற்றை தலைமையை தடுக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வம் வழக்குகளை தொடுத்து வருகிறார். அதிமுகவில் வலுவான ஒற்றை தலைமையாக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்தனர்.

செயல்பட முடியாது
அவர்களை போல இன்னொரு ஒற்றை தலைமை வேண்டும் என்பதே நிர்வாகிகளின் நோக்கம். இதை தடுக்கும் விதமாக அவர் பொதுக்குழுவை தடுக்க முயன்று வருகிறார். கட்சியின் விதிகளுக்கு, கட்சியின் செயல்பாடுகளுக்கும் எதிராக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். கடந்த பொதுக்குழுவிலேயே கட்சி நிர்வாகிகள் இவருக்கு ஒருமித்த எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் ஆதரவை ஓ பன்னீர்செல்வம் மொத்தமாக இழந்துவிட்டார்.

ஓ பன்னீர்செல்வம்
இதனால் ஓ பன்னீர்செல்வம் அடுத்த பொதுக்குழுவை தடுத்த நிறுத்த பார்க்கிறார். பொதுக்குழுவில் அவர் பொருளாளர் என்ற முறையில் கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை பொருளாளராக அவர் கட்சி நிதியை விடுவிக்காமல் இருக்கிறார். இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிட முடியாத நிலையும், நிர்வாகிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

கட்சி விதி
இதன் மூலம் கட்சி விதிகளை அவர் மீறிவிட்டார். கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் அவரை பற்றி அனைத்து ஆவணங்களும் இந்த மனுவுடன் இணைக்கப்பட்டு உள்ளன. கட்சியை முடக்கும் முயற்சிகளை ஓ பன்னீர்செல்வம் செய்து வருகிறார். இதனால் இனியும் அவருடன் இணைந்து செயல்பட முடியாது. எனவே உயர் நீதிமன்றம் பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இணைய முடியாது
இந்த மனுவில் கட்சிக்கு ஓ பன்னீர்செல்வம் விரோதம் செய்துவிட்டார். அவருடன் இணைந்து செயல்பட முடியாது. அவர் கட்சி விதிகளை மீறிவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். ஓ பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி குறித்து எடப்பாடி குற்றஞ்சாட்டி இருப்பதால் ஓ பன்னீர்செல்வத்தின் அந்த பதவி பறிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கட்சி விரோத நடவடிக்கையில் ஓ பன்னீர்செல்வம் ஈடுபட்டதாக எடப்பாடி கூறியுள்ளதால், அவர் கட்சியில் இருந்து வரும் காலத்தில் நீக்கப்படுவாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.