சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் அன்னை தெரசா வி. சாந்தா விடை பெற்றார்... அரசு மரியாதையுடன் உடல் தகனம்

சாந்தமான குணமும் கனிவான பேச்சும் கொண்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி. சாந்தா இன்று காலை வயது மூப்பினால் மரணமடைந்தார். அவரது உடல் காவலர்கள் குண்டு முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: அடையாறு புற்று நோய் மருத்துவமனை தலைவரான சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தன்னலமற்ற மருத்துவ சேவை மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு மறுவாழ்வு அளித்தவர் டாக்டர் சாந்தா. தமிழகத்தின் அன்னை தெரசா என்று போற்றப்படும் இவர் பல லட்சம் மக்களின் அன்பை பெற்றவர் இவரது சேவையை பாராட்டி மகசேசே, பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக சுமார் 68 ஆண்டுகாலம் பணியாற்றியவர் டாக்டர் வி.சாந்தா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு இலவசமாகவும், குறைந்த செலவிலும் அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தார். ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர்.

Cancer Institute’s V. Shantas body cremated with government honors

சென்னை மயிலாப்பூரில் மார்ச் 11, 1927ஆம் ஆண்டு டாக்டர் சாந்தா பிறந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949ஆம் ஆண்டு டாக்டர் பட்டமும், 1955ஆம் ஆண்டில் எம்.டி. பட்டமும் பெற்றார் சாந்தா.

அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் டாக்டராக தனது பணியை தொடங்கினார். 12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவாக போற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து உலகத் தரம்வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் இவர் பெரும் பங்காற்றினார்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் விட்டுச்சென்ற பணியை திறம்பட செய்தவர். ஏழை மக்களுக்கு சேவை செய்த மனித நேயம் மிக்க மருத்துவராக திகழ்ந்தவர். அவருடைய மறைவு இன்றைக்கு பலரது கண்களை குளமாக்கியுள்ளது.

68 ஆண்டுகளுக்கும் மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய சாந்தா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக திகழ்ந்தார். டாக்டர் சாந்தா தனது இறுதி காலம் வரை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நவீன சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

பல கிராமங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சோதனைகள் செய்யப்படுவதற்கு காரணமானவர் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டாக்டர் சாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரம் வரை பணியாற்றிக் கொண்டிருந்தார் என அவருடன் பணிபுரிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மறைந்த டாக்டர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கண்ணீர் மல்க பங்கேற்றனர்.

பெசன்ட் நகர் மின் மயானத்தில் காவலர்கள் குண்டு முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க மவுன அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

டாக்டர் சாந்தா இறுதி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. சாந்தா தனது 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது முழு மருத்துவ வாழ்க்கையும் புற்றுநோய் நோயாளிகளை கவனிக்கவே அர்பணித்தார். அவரது மறைவு இந்திய மருத்துவத் துறைக்கு பேரிழப்பு என்று தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து விண்ணுலகம் சென்றுள்ள தமிழக அன்னை தெரசாவிற்கு மருத்துவ உலகம் மட்டுமல்லாது மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

English summary
The body of Shanta, head of the Adyar Cancer Hospital, was cremated at the Besant Nagar Electric Cemetery in Chennai with state honors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X